

கோவை அவிநாசி சாலை உப்பிலிபாளையம் சந்திப்பு அருகே உள்ள அண்ணா மேம்பாலம் கடந்த 1971-ம்ஆண்டு கட்டப்பட்டதாகும். இந்தமேம்பாலத்தை நெடுஞ்சாலைத்துறையின் சார்பில் ரூ.6 கோடி மதிப்பில் சீரமைக்கும் பணி சில மாதங்களுக்கு முன்னர் மேற்கொள்ளப்பட்டது.
இந்நிலையில், உப்பிலிபாளையத்தில் இருந்து மேம்பால ரவுண்டானா நோக்கி செல்லும் வழித்தடத்தில் தரையில் பதிக்கப்பட்டுள்ள ஒரு இரும்புத் தகடு சேதமடைந்து காணப்படுகிறது. இரும்புத் தகடின் அழுத்தத்துக்காக பொருத்தப்பட்டிருந்த கம்பி சேதமடைந்து, வாகனங்களின் டயர்களை பதம் பார்க்கும் வகையில் நீட்டிக் கொண்டு உள்ளது. இந்த இரும்புத் தகடு அருகே குழியும் ஏற்பட்டுள்ளது. இதனால் அவ்வழியாக வருபவர்கள், ஓரிரு விநாடிகள் வாகனங்களை நிறுத்தி, மெதுவாக அந்த குழியை கடந்து செல்ல வேண்டியுள்ளது.
இதுகுறித்து வாகன ஓட்டுநர்கள்கூறும்போது,‘‘ இரு சக்கர வாகனங்கள், ஆட்டோ, கார், வேன் போன்ற இலகு ரக வாகனங்களில் வரும் வாகன ஓட்டுநர்கள் இந்தஇரும்புத் தகடை கடந்து செல்வதில் பெரும் சிரமத்துக்குள்ளாகின்றனர். வாகனத்தின் வேகத்தை குறைக்கும்போது, பின்னால் வரும் வாகனங்கள் மோதி விபத்து ஏற்படும் சூழலும்உள்ளது. இதை தவிர்க்க, சேதமடைந்த இரும்புத் தகடு மற்றும் குழியை நெடுஞ்சாலைத்துறையினர் சீரமைக்க வேண்டும்’’ என்றனர்.