

உள்ளாட்சி தேர்தல் நடைபெற இருப்பதால், அரசு பணியாளர்களின் பதவி உயர்வுக்காக நடத்தப்பட இருந்த துறைத்தேர்வுகள் ஜனவரி 5-ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளன.
இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான டிஎன்பிஎஸ்சி நேற்று (டிச.11) வெளியிட்ட செய்தி வெளியீட்டில், அரசு பணியாளர்களின் பதவி உயர்வுக்கான துறைத்தேர்வுகள், டிச.22 முதல் டிச.30 வரை நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. உள்ளாட்சி தேர்தல் காரணமாக, இத்தேர்வு தேதி மாற்றப்பட்டு ஜன.5 முதல் ஜன.12 வரை நடத்தப்படும் என, டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.
விண்ணப்பதாரர்கள் தங்களின் தனித்துவ விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியை குறிப்பிட்டு தங்களது நுழைவுச் சீட்டினை 27.12.2019 முதல் 12.01.2020 வரை தேர்வாணைய இணையதளம் www.tnpsc.gov.in இல் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் எனவும், அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த தேர்வு டெல்லி உட்பட 33 தேர்வு மையங்களில் நடத்தப்படுகிறது.