

வாகனங்கள் சுங்கச்சாவடியை கடக்க டிசம்பர் 15-ம் தேதி முதல் ‘பாஸ்டேக்' கட்டாயம் என்பதால், கோவையில் கடந்த ஒரு மாதத்தில் 3 ஆயிரம் வாகனங்களுக்கு ‘பாஸ்டேக்' பெறப்பட்டுள்ளதாக நெடுஞ்சாலைத்துறை ஆணைய அதிகாரிகள் தெரிவித்தனர்.
சுங்கச்சாவடிகளில் சுங்க கட்டணம் செலுத்த நீண்ட வரிசையில் வாகனங்கள் நிற்பதால் பயண நேரத்தில் தாமதம் ஏற்படுவதோடு, எரிபொருளும் வீணாகி வந்தது. இந்தநிலையை தவிர்க்க‘பாஸ்டேக்’ திட்டம் ஏற்கெனவேநடைமுறையில் இருந்தாலும்,அது கட்டாயமாக்கப்படவில்லை. இந்நிலையில் அனைத்து தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ளசுங்கச்சாவடி களிலும் ‘பாஸ்டேக்' திட்டம் வரும் 15-ம் தேதி முதல் முழுமையாக அமல்படுத்தப்பட உள்ளது.
சுங்கச்சாவடிகள், அங்கீகரிக்கப் பட்ட வங்கிகள், பொது சேவைமையம் (காமன் சர்வீஸ் சென்டர்) மற்றும் கோவையில் உள்ள மால்களில் தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையத்தால் அமைக்கப்பட்டுள்ள கவுன்ட்டர்களில் வாகன உரிமையாளர்கள் ‘பாஸ்டேக்' மின்னணு ஸ்டிக்கரை பெற்றுக் கொள்ளலாம். தங்கள் பகுதிக்கு அருகில் எந்த இடத்தில் பாஸ்டேக் கிடைக்கிறது என்பதை https://ihmcl.com/postloc.php என்ற இணையதளத்தில் மாநிலம், மாவட்டம், வங்கியை தேர்வு செய்து தெரிந்துகொள்ளலாம். கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து ‘My FASTag’ செயலியை பதிவிறக்கம் செய்தும் விவரங்களை அறியலாம்.
இது தொடர்பாக நெடுஞ்சாலைத் துறை ஆணைய அதிகாரிகள் கூறியதாவது: மத்திய அரசின் அறிவிப்புபடி ‘பாஸ்டேக்' -ஐ பெற வாகன பதிவுச் சான்று (ஆர்.சி.புத்தகம்),வாகன உரிமையாளர்களின் ஆதார் அட்டை, பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஆகியவற்றை சமர்ப்பிக்க வேண்டும். அதன்பிறகு ‘பாஸ்டேக்' ஆக்டிவேட் செய்து அளிக்கப்படும். கோவையில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 3 ஆயிரம் பாஸ்டேக்குகள் விற்பனையாகியுள்ளன. ‘பாஸ்டேக்' உள்ள வாகனங்கள் சுங்கச்சாவடிகளை கடக்கும்போது வாகனத்தின் முகப்புக் கண்ணாடியில் ஒட்டப்பட்டிருக்கும்ஸ்டிக்கரை ஸ்கேன் செய்து சுங்கக்கட்டணம் பிடித்தம் செய்துகொள்ளப்படும்.‘பாஸ்டேக்' அக்கவுண்ட்டில் தேவைக்கேற்ப வாகன உரிமையாளர்கள் ரீசார்ஜ் செய்து கொள்ளலாம். இவ்வாறு அவர்கள் கூறினர்.