

பாளை சிறையில் அடைக்கப்பட்டிருந்த அட்டாக்பாண்டி திடீரென நேற்று இரவு (புதன் இரவு) மதுரை மத்திய சிறைக்கு இடமாறுதல் செய்யப்பட்டார்.
மதுரை கீரைத்துரையைச் சேர்ந்தவர் அட்டாக்பாண்டி. இவர் முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் நெருங்கிய நண்பர் பொட்டு சுரேஷ் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு பாளை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். அட்டாக்பாண்டி தன்னை மதுரை மத்திய சிறையில் அடைக்க உத்தரவிடக்கோரி மதுரை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனுவுக்கு பொட்டு சுரேஷ் கொலை வழக்கின் விசாரணை அதிகாரி தாக்கல் செய்த பதில் மனுவில், அட்டாக்பாண்டி மதுரையைச் சேர்ந்தவர் அவரை மதுரை சிறையில் அடைத்தால் அவரை பார்க்க உறவினர்கள், நண்பர்கள் என ஏராளமானோர் சிறைக்கு வருவார்கள்.
இதனால் தேவையற்ற சம்பவங்கள் நடைபெற வாய்ப்புள்ளது. எனவே அவரை மதுரை சிறையில் அடைக்க உத்தரவிடக்கூடாது எனக் கூறப்பட்டிருந்தது.
மதுரை நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள பொட்டு சுரேஷ் கொலை வழக்கில் அட்டாக்பாண்டி 65 வாய்தாவுக்கு ஆஜராகவில்லை. அவர் பாளை சிறையில் அடைக்கப்பட்டிருப்பதால் இந்த வழக்கில் அவரை ஆஜர்படுத்த முடியவில்லை எனக் கூறப்பட்டது.
இதையடுத்து அட்டாக்பாண்டியை மதுரை மத்திய சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். அட்டாக் பாண்டி நேற்று மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.