

இந்திய தேர்தல் ஆணையத்தில் பதிவு பெற்ற எங்கள் கட்சிக்கு பொதுச் சின்னம் ஒதுக்க மாநில தேர்தல் ஆணையம் மறுப்பதாக அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் குற்றம்சாட்டியுள்ளார்.
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்துக்கு கட்சி அந்தஸ்தை இந்திய தேர்தல் ஆணையம் வழங்கியுள்ளது. இதையடுத்து அமமுக பொதுச் செயலாளரும், எம்எல்ஏவுமான டிடிவி தினகரன், சென்னை மெரினா கடற்கரையில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்துக்குச் சென்று மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறும்போது, “சட்டப்பேரவை பொதுத் தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு இருக்கிறது. அந்த நேரத்தில் கூட்டணி பற்றி முடிவெடுக்கப்படும். கமல், ரஜினி தரப்பில் இருந்து யாரும் எங்களை அணுகவில்லை.
எங்கள் கட்சியைப் பதிவு பெற்ற கட்சியாக இந்திய தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளது. அதனால், உள் ளாட்சி தேர்தலில் போட்டியிடுவதற்கு பொதுவான சின்னம் கோரினோம். எங்களின் கோரிக்கையை மாநில தேர்தல் ஆணையம் நிராகரித்துள்ளது.
வேட்பு மனுத்தாக்கல் செய்யும் இடங்களில் 3 சின்னங்களைத் தேர்வு செய்து கொடுங்கள். அதில், ஏதாவது ஒன்றை ஒதுக்குவார்கள் என்று சொல்கின்றனர். இந்த நடைமுறை எங்களுக்காகவே உருவாக்கப்பட்டது போல் இருக்கிறது.
இந்தியா மதச்சார்பற்ற நாடு என்ப தால், குடியுரிமை சட்ட திருத்தத்தில் இலங்கை தமிழர்களுக்கும், இஸ்லா மியர்களுக்கும் இடமளிக்க வேண்டும். மத்திய அரசு ஒரு தாய் ஸ்தானத்தில் இருந்து இதை அணுக வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.