

போடிமெட் டு மலைச்சாலை 8-வது கொண்டை ஊசி வளைவில் நேற்று நள்ளிரவில் மண்சரிவு ஏற்பட்டது. இதனால் தமிழகத்தில் இருந்து மூணாறு சென்ற சுற்றுலாப் பயணிகள் மற்றும் மூணாறில் இருந்து திரும்பிய பயணிகளும் பல மணி நேரம் கடும் குளிரில் காத்திருந்தனர்.
தேனி மாவட்டம் போடி மேற்கு தொடர்ச்சி மலையில் போடிமெட்டு மலைக்கிராமம் உள்ளது. தமிழக - கேரள மாநிலங்களின் எல்லையாக இப்பகுதி இருக்கிறது.
போடி முந்தல் மலையடிவாரத்திலிருந்து 17 கொண்டை ஊசி வளைகளுடன் 21 கிலோ மீட்டர் தூரத்திற்கு இந்த மலைச்சாலை அமைந்துள்ளது.
கடந்த சில வாரங்களாகவே இப்பகுதியில் தொடர் மழை பெய்தது. இதனால் மண்வெகுவாய் ஈரத்தன்மையுடன் இருந்து வந்தது.
இந்நிலையில் நேற்று நள்ளிரவில் 8-வது கொண்டை ஊசி வளைவு கடந்து புலியூத்து என்னும் இடத்தில் மண்சரிவு ஏற்பட்டது. பாறைகளும் உருண்டு விழுந்தன.
சாலைகள் வெகுவாய் மறிக்கப்பட்டதால் இருபக்க வாகனங்களும் தொடர்ந்து செல்ல முடியாமல் அங்கேயே நின்றன. தகவல் தெரிந்ததும் வனத்துறையினர் போடியில் இருந்து வரும் வாகனங்களை முந்தலிலும், போடிமெட்டில் இருந்து வரும் வாகனங்களை அப்பகுதியிலேயும் நிறுத்தி வைத்தனர்.
இதனால் சுற்றுலா வாகனங்கள் அதிகம் பாதிக்கப்பட்டது.
நெடுஞ்சாலைத்துறையினர் அதிகாலையில் பொக்லைன் இயந்திரங்கள் மூலம் சாலையை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர். தோட்டத் தொழிலாளர்களை ஏற்றியபடி ஏராளமான ஜீப்கள் கேரளாவிற்குச் செல்வது வழக்கம். இந்த மண்சரிவினால் ஜீ்ப்களும் காத்திருந்தன.
பின்பு இன்று காலை 10 மணியளவில் சாலையின் ஒருபக்கம் சரி செய்யப்பட்டு லகுரக வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்பட்டன. பின்பு கனரக வாகனங்கள் செல்லும்வகையில் பாதை சரி செய்யப்பட்டது.
தகவலின் பேரில் நெடுஞ்சாலை துறை கோட்டப் பொறியாளர் குமணன், உதவிப் பொறியாளர் முத்துராம், போடி தாசில்தார் மணிமாறன், வருவாய் ஆய்வாளர் ராமர், குரங்கணி போலீசார் உள்ளிட்டோர் சீரமைப்புப்பணியில் ஈடுபட்டனர்.
பொதுவாக மழை நேரத்தில்தான் இதுபோன்ற மண்சரிவுகள் ஏற்படும். கடந்த ஒரு வாரமாக இப்பகுதியில் மழை இல்லை. ஏற்கனவே பெய்திருந்த மழையினால் மண்ணின் உள்பக்கம் ஈரத்தன்மையுடன் அதிக எடையுடன் இருந்ததால் இந்த சரிவு ஏற்பட்டுள்ளது என்று நெடுஞ்சாலைத்துறையினர் தெரிவித்தனர்.
இதனால் சுற்றுலா பயணிகள் உட்பட பலரும் இரவில் பனியில் பல மணி நேரம் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது.