'பெண்களுக்கு ஆண்களை மதிக்கத் தெரிய வேண்டும்':  அன்னை தெரசா பல்கலைக்கழக துணைவேந்தர் பேச்சு

'பெண்களுக்கு ஆண்களை மதிக்கத் தெரிய வேண்டும்':  அன்னை தெரசா பல்கலைக்கழக துணைவேந்தர் பேச்சு
Updated on
1 min read

"பெண்களுக்கு ஆண்களை மதிக்கத் தெரிய வேண்டும். அவர்கள் அன்னம் எவ்வாறு தண்ணீரிலிருந்து பாலை மட்டுமே பிரித்தெடுப்பதுபோல் நல்லவற்றை மட்டுமே கடைபிடித்து வாழ வேண்டும். பெண்கள் நல்லவற்றை மட்டுமே கடைபிடித்தால் பாரதியின் கனவை நனவாக்க முடியும்" என்று கொடைக்கானல் அன்னை தெரசா பல்கலைக்கழக துணைவேந்தர் வைதேகி விஜயகுமார் தெரிவித்தார்.

திருநெல்வேலி ராணி அண்ணா அரசு மகளிர் கல்லூரி, சென்னை உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், கொடைக்கானல் அன்னை தெரசா மகளிர் பல்கலைக் கழகம், திருநெல்வேலி பொதிகை தமிழ்ச் சங்கம் ஆகியவை இணைந்து ‘பாரதியின் ஆளுமையில் பெண்கள்” என்ற தலைப்பில் பன்னாட்டு கருத்தரங்கை நடத்தின.

முன்னதாக கல்லூரியின் 50-வது ஆண்டு பொன்விழாவையொட்டி கல்லூரி முகப்பில் பாரதியாரின் மார்பளவு சிலை திறக்கப்பட்டது.

தொடர்ந்து நடைபெற்ற கருத்தரங்கத்துக்கு தலைமை வகித்து துணைவேந்தர் வைதேகி விஜயகுமார் பேசியதாவது:

ஒரு மலர் சூரியனை கண்டதும் எவ்வாறு பிரகாசமாக இருக்கிறதோ அதுபோல் நாம் என்றும் பிரகாசமாக இருக்க வேண்டும். பெண்கள் நன்றாகப் படிக்க வேண்டும். சுயதொழில் செய்ய வேண்டும் என்று பாரதி நினைத்தார். வெறும் இளங்கலை படிப்புடன் பெண்கள் நிறுத்திக்கொள்ளக் கூடாது.

முதுகலை பட்டப்படிப்பும் படிக்க வேண்டும். அவ்வாறு படித்தால்தான் உங்களுக்கு ஆழ்ந்த அறிவு கிடைக்கும். அந்தகாலத்து எஸ்எஸ்எல்சி போன்று இந்த காலத்தில் பி.ஏ., பிஎஸ்சி படிப்புகள் உள்ளன. இந்த படிப்புகள் மூலம் அடிப்படை அறிவை நாம் பெறுகிறோம்.

பெண்களின் கல்விக்காக அரசு அதிகளவில் நிதியுதவி அளிக்கிறது. முதுகலை படிப்பு படித்தால்தான் சிறந்த வேலைக்கு செல்லமுடியும். பொருளாதார ரீதியாக தன்னிச்சையாக இருந்தால்தான் உங்களுடைய கனவு நனவாகும்.

ஆண்களை மதிக்கத் தெரிய வேண்டும். சக மனிதர்களை நேசிக்க வேண்டும். எல்லாவற்றிலும் நல்லவற்றையே கடைபிடிக்க வேண்டும். அன்னம் எவ்வாறு தண்ணீரிலிருந்து பாலை மட்டுமே பிரித்தெடுப்பதுபோல் நல்லவற்றை மட்டுமே கடைபிடித்தால் வாழ்க்கையில் வெற்றி சிகரத்தை கட்டாயம் எட்டமுடியும். அதன்மூலம் பாரதியின் கனவை நனவாக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in