

தேசிய குடியுரிமை சட்ட மசோதாவில் சில மாற்றங்களை செய்ய வேண்டும் என நடிகரும் சமத்துவ மக்கள் கட்சியின் தலைவருமான சரத்குமார் தெரிவித்தார்.
விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் இன்று (புதன்கிழமை) ஜிம் திறப்பு விழாவில் கலந்து கொண்ட அவர் செய்தியாளர்களை சந்தித்த போது, "உள்ளாட்சித் தேர்தலில் அதிமுகவிடம் எங்களுக்குத் தேவைப்பட்ட இடங்களைக் கோரியிருக்கிறோம். அது தொடர்பாக அதிமுக மாவட்டச் செயலாளர்கள் எங்களின் கட்சிப் பொறுப்பாளர்களுடன் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.
ஆனால், எவ்வளவு சீட் கேட்டிருக்கிறோம் என்பதை இப்போது சொல்ல இயலாது. உள்ளாட்சிப் பதவிகள் ஏலம் விடுவது தொடர்பான செய்திகளைப் படித்தேன். ஆனால் உறுதியாக எனக்கு ஏதும் தெரியாததால் என்னால் எந்தக் கருத்தும் சொல்ல முடியாது.
அதிமுக கூட்டணிக்குள் எந்தக் குழப்பமும் இல்லை. பாஜக 60 இடங்களைக் கேட்டுள்ளது உண்மைதான். ஆனால், அதற்கு அதிமுக முடிவு என்னவென்று எனக்கு ஏதும் தெரியாது.
திமுகவுக்கு உள்ளாட்சித் தேர்தலை எதிர்கொள்வதில் பய உணர்வு ஏற்பட்டுள்ளது. அதனால்தான் நீதிமன்றத்தில் வழக்குகளைத் தொடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.
நடிகர்கள் மட்டுமல்ல யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். ரஜினி, கமல் வருகை மட்டும் விமர்சனத்துக்குள்ளாவதற்கு அவர்கள் அரசியலுக்கு வரும் காலகட்டம் காரணமாக இருக்கலாம்.
தேசிய குடியுரிமை மசோதாவில் சில திருத்தங்களை மேற்கொண்டு வெளியிடலாம். அது குறித்து விரைவில் அறிக்கை ஒன்றை வெளியிடவுள்ளேன்" என்றார்.