Published : 11 Dec 2019 02:05 PM
Last Updated : 11 Dec 2019 02:05 PM

உள்ளாட்சித் தேர்தல்; வேட்பாளர்கள் சொத்துப் பட்டியலைத் தாக்கல் செய்ய வேண்டும்: முதன்முறையாக அறிமுகம்

உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் சொத்துப் பட்டியலைத் தாக்கல் செய்ய வேண்டும் என்று மாநிலத் தேர்தல் ஆணையம் முதல் முறையாக உத்தரவு பிறப்பித்துள்ளது.

ஊரகம் மற்றும் கிராம அளவில் வரும் 27 மற்றும் 30-ம் தேதி உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளது. மாநகராட்சி, நகராட்சிகள் மற்றும் 9 மாவட்டங்களில் தேர்தல் இல்லை. இம்முறை உள்ளட்சித் தேர்தலில் பல புதிய நடைமுறைகள் அமலாகின்றன. இதுவரை எம்எல்ஏ, எம்.பி.க்கள் தேர்தலில் மட்டுமே வேட்பாளர்கள் சொத்துக் கணக்கைத் தாக்கல் செய்யவேண்டும் என்கிற நிலையை மாற்றி உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடுவோரும் சொத்துக் கணக்கைத் தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

இது குறித்து மாநிலத் தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், வேட்பு மனுவுடன் சொத்து மற்றும் வழக்கு விவரங்களைத் தெரிவிக்கும் 3- ஏ என்ற உறுதிமொழிப் படிவத்தையும் வேட்பாளர்கள் தாக்கல் செய்யவேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. வேட்பாளர்கள் தங்கள் மீதுள்ள வழக்குகள், தண்டனை விவரங்களைப் படிவத்தில் தெரிவிக்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

சொத்து விவரம் தாக்கல் செய்யும்போது, தனது பெயர்களிலும், குடும்பத்தினர் பெயர்களிலும் இருக்கும் சொத்துகள், விவசாய நிலங்கள், இதர அசையும், அசையா சொத்துகள், வங்கிக் கடன்கள், தொழில் முதலீடுகள், பங்குச் சந்தை, பிக்சட் டெபாசிட் முதலீடுகள், ரொக்கப் பணம் கையிருப்பு உள்ளிட்ட விவரங்களை வேட்பாளர்கள் முழுமையாக, கண்டிப்பாகத் தெரிவிக்க வேண்டும்.

கட்சிகள் அடிப்படையில் தேர்தல் நடக்கும் மாவட்டப் பஞ்சாயத்து வார்டு, ஒன்றிய வார்டுகள் மட்டுமின்றி கிராம பஞ்சாயத்து தலைவர் பதவிக்குப் போட்டியிடுபவரும் சொத்து விவரப் பட்டியலை நோட்டரி பப்ளிக் உள்ளிட்ட தகுதியானோர் முன்னிலையில் உறுதிமொழி அளிக்கப்பட்ட பத்திரங்களை வேட்பு மனுவுடன் இணைத்து அளிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது

இதேபோன்று உள்ளாட்சித் தேர்தலில் மாவட்ட ஊராட்சி உறுப்பினர் பதவிக்கு 30 பொது சின்னங்கள் ஒதுக்கீடு செய்துள்ளதாக மாநிலத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. புதிதாக இணைந்த, பதிவு செய்யப்பட்டு அங்கீகாரம் பெறாத கட்சிகளின் பட்டியலையும் மாநிலத் தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

இதேபோன்று கடந்த 3 நாட்களுக்கு முன் பண்ருட்டி நடுக்குப்பம் கிராமத்தில் பஞ்சாயத்து நிர்வாகிகள் பதவியை லட்சக்கணக்கில் விலை கொடுத்து வாங்கிய விவகாரத்தில் உள்ளாட்சிப் பதவிகளை ஏலம் விடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சட்டத்திற்கும், மக்களாட்சித் தத்துவத்திற்கும் புறம்பாக நடைபெறும் இத்தகைய செயல்கள் வருந்தத்தக்கவை. ஜனநாயகத்திற்கு ஊறு விளைவிப்பதைத் தடுக்க தேர்தல் அலுவலர் சட்டப்படி நடவடிக்கை எடுக்கவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக மாநிலத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x