

ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்காக பல இடங்களில் வேட்புமனு தாக்கல் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், விருதுநகரில் ஊராட்சித் தலைவர் பதவிக்கு திருநங்கை ஒருவர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார்.
விருதுநகர் அருகேயுள்ள சின்னபேராளியைச் சேர்ந்தவர் அழகர்சாமி என்ற அழகு பட்டாணி (65). திருநங்கையான இவர் விவசாயக் கூலி.
இந்நிலையில், விருதுநகர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் பெரியபேராளி ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கு விருதுநகரில் உள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் இன்று (டிச.11) வேட்புமனு தாக்கல் செய்தார்.
இதுகுறித்து அழகர்சாமி கூறுகையில், "நான் கூலி வேலை செய்து வருகிறேன். என்மீது கிராம மக்கள் மிகுந்த அன்பாக இருந்துவருகின்றனர். கிராம மக்களின் வேண்டுகோளுக்கிணங்க இந்தப் பதவிக்கு போட்டியிட சம்மதித்தேன்.
மேலும் அவர்கள் என்னை வெற்றிபெறச் செய்வார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது. தேர்தலில் வெற்றிபெற்று வந்தவுடன் மக்களுக்கு சுகாதாரமான குடிநீரும், சுத்தமான முறையில் கழிப்பறை வசதிகளையும் செய்து தருவேன் என்று கூறினார்.
இவர், கடந்த முறை உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்ட போதும் பெரிய பேராளி ஊராட்சி தலைவர் பதவிக்கு போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்ததும் குறிப்பிடத்தக்கது.