பள்ளிக் கல்விக்கான நிதியைக் குறைக்கக் கூடாது: மத்திய அரசுக்கு வாசன் வலியுறுத்தல்

ஜி.கே.வாசன்: கோப்புப்படம்
ஜி.கே.வாசன்: கோப்புப்படம்
Updated on
2 min read

வருவாயை ஈட்ட வழி முறைகளைக் கையாள வேண்டுமே தவிர, கல்வியின் நிதியைக் குறைக்கக் கூடாது என, தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக ஜி.கே.வாசன் இன்று (டிச.11) வெளியிட்ட அறிக்கையில், "மத்திய அரசு பள்ளிக் கல்விக்கான நிதி ஒதுக்கீட்டை ஒதுக்கியபடி செலவழிக்க வேண்டும். ஆனால் மத்திய அரசு பள்ளிக் கல்வித்துறைக்கான நிதியைக் குறைக்க முடிவு செய்துள்ளதாக வெளிவரும் செய்திகள் கவலைக்குரியவை.

காரணம் குழந்தைப் பருவம் முதல் மாணவர்களை கல்வி கற்க கல்வி நிலையங்களுக்கு ஈர்க்க வேண்டும் என்பதற்காக மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் திட்டங்களை வகுத்துச் செயல்படுத்த வேண்டும். இதற்காக ஆண்டுதோறும் நிதி ஒதுக்குவதோடு அதனை முறையாக முழுமையாக செலவழிக்க வேண்டும்.

குறிப்பாக 2014 – 2015 ஆம் ஆண்டிலிருந்து பள்ளிக் கல்விக்காக நிதியை 10 சதவீத அளவில் ஆண்டுதோறும் அதிகரிக்க முடிவு செய்யப்பட்டது. அதன் அடிப்படையில் நிதி ஒதுக்கி முழுமையாக செலவு செய்யப்பட வேண்டும். கடந்த ஆண்டில் ஒதுக்கிய ரூ.50,113 கோடியில் இந்த ஆண்டுக்கு 10 சதவீதம் அதிகரித்து செலவு செய்ய வேண்டும்.

அந்த வகையில் இந்த ஆண்டுக்கு பள்ளிக் கல்வித்துறையின் செயல்பாடுகளுக்கு மத்திய அரசு ரூ.56,536 கோடி நிதி ஒதுக்கீடு செய்த நிலையில் ரூ.3,000 கோடியைத் திரும்ப பெற முடிவு செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் பள்ளிக் கல்விக்காக ஒதுக்கப்படும் நிதியை எக்காரணத்திற்காகவும் குறைக்கக் கூடாது என்பதை மத்திய அரசு உறுதி செய்துகொள்ள வேண்டும். மத்திய அரசு வருவாயைக் காரணம் காட்டி எச்சூழலிலும் பள்ளிக் கல்விக்கான நிதியைக் குறைக்கக்கூடாது.

வருவாயை ஈட்ட வழி முறைகளைக் கையாள வேண்டுமே தவிர கல்வியின் நிதியை குறைக்கக் கூடாது. கல்வி குறித்து ஆராயும் கோத்தாரி குழு நாட்டின் மொத்த உற்பத்தியில் 6 சதவீதத்தை மத்திய மாநில அரசுகள் ஒருங்கிணைந்து கல்வித்துறைக்குச் செலவிட வேண்டும் என பரிந்துரைத்தது. அப்படி என்றால் நம் நாட்டின் மொத்த உற்பத்தி மதிப்பு சுமார் ரூ.210 லட்சம் கோடியாகும்.

எனவே கோத்தாரி குழுவின் பரிந்துரைப்படி கல்வித்துறைக்கு ரூ.12.60 லட்சம் கோடி ஒதுக்கி செலவு செய்திட வேண்டும். ஆனால் கல்விக்காக மத்திய மாநில அரசுகள் ஒருங்கிணைந்து செலவிடும் தொகை ரூ.4.5 லட்சம் கோடி. இது நாட்டின் மொத்த உற்பத்தி மதிப்பில் 2 சதவீதம் கூட கிடையாது.

எனவே மத்திய அரசு பள்ளிக் கல்விக்காக ஒதுக்க வேண்டிய நிதியை ஆண்டுதோறும் முறையாக ஒதுக்கி முழுமையாக செலவு செய்திட நடவடிக்கை எடுக்க வேண்டும். மத்திய மாநில அரசுகள் பள்ளிக் கல்வியின் தரத்தை மேம்படுத்தி, காலிப்பணியிடங்களை காலத்தே நிரப்பி, மாணவ, மாணவிகளின் உயர்கல்விக்கு வழி வகுத்துக் கொடுத்து அவர்களும், நாடும் முன்னேற்றம் அடைய தொடர் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in