

கொடைக்கானல் அருகே, கடந்த 3 மாதங்களுக்கு முன்பு கூலித் தொழிலாளி ஒருவர் கொலை செய்யப்பட்ட தகவல், தற்போது வேறொரு வழக்கு விசாரணையின் மூலம் போலீஸாருக்கு தெரிய வந்தது. இதையடுத்து, கொலைச் சம்பவத்தில் ஈடுபட்ட 2 பெண்கள் உட்பட 5 பேரை போலீஸார் கைது செய்தனர்.
தேனி மாவட்டம், ஓடைப் பட்டியைச் சேர்ந்தவர் திருப்பதி (48). இவர், கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு குடும்பத்தைவிட்டுப் பிரிந்து வந்து, கொடைக்கானல் அருகேயுள்ள பேத்துப்பாறையில் விவசாய கூலித் தொழில் செய்து வந்துள்ளார். அப்போது கூம்பூர் வயல் பகுதியைச் சேர்ந்த தாஸ் என்பவரின் மனைவி ஜான்சி ராணியுடன் (40) தொடர்பு ஏற்பட் டுள்ளது. வெள்ளைப்பாறை பகுதியைச் சேர்ந்தவர் மணி கண்டன். இவருக்கு ஏற்கெனவே திருமணமாகி மனைவி, குழந்தைகள் உள்ள நிலையில், ஜான்சிராணியின் தங்கை சாந்தி (36) என்பவருடன் தொடர்பு ஏற் பட்டுள்ளது. இதை திருப்பதி கண்டித்துள்ளார். இதனால் மணிகண்டனுக்கும், திருப்பதிக்கு முன்விரோதம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், சில நாட்களுக்கு முன்பு வெள்ளைப்பாறை பகுதி யில் முருகன் என்பவருக்குச் சொந்தமான கார் எரிக்கப்பட்டது. இதுகுறித்து போலீஸார் முருகனின் தம்பி மணிகண்டன், அவரது நண்பர் நாகராஜ் மீது வழக்குப் பதிவு செய்தனர். அப்போது மணிகண்டன் தலை மறைவானார்.
பின்னர், போலீஸார் மணி கண்டனைப் பிடித்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் திடுக்கிடும் தகவல் வெளியானது. கொலைச் சம்பவம் தொடர்பாகத்தான் போலீஸார் தன்னை பிடித்தனர் என நினைத்து, 3 மாதங்களுக்கு முன்பு திருப்பதி என்பவரைக் கொலை செய்து குருசடி என்ற இடத்தில் 700 அடி பள்ளத்தில் வீசியது குறித்து மணிகண்டன் கூறியுள்ளார். இதைக் கேட்ட போலீஸார் அதிர்ச்சி அடைந்தனர்.
மணிகண்டனிடம் போலீஸார் தீவிர விசாரணை நடத்தியதில், தான் சாந்தியுடன் தொடர்பு வைத்தி ருந்ததை திருப்பதி கண்டித்ததால், அவரை நண்பர்களுடன் சேர்ந்து கடந்த ஆகஸ்ட் 14-ம் தேதி கொலை செய்ததை ஒப்புக் கொண்டார்.
இதையடுத்து கொலையில் தொடர்புடைய பெருமாள் மலை நாகராஜ் (23), பேத்துப் பாறை சரத்குமார் (30), விஷ்ணு(30), ஜான்சிராணி, அவரது தங்கை சாந்தி ஆகியோரை கைது செய்தனர்.
கொலையில் தொடர்புடைய விஷ்ணு தலைமறைவாகிவிட்டார். தொடர்ந்து டி.எஸ்.பி. ஆத்மநாதன் தலைமையில் போலீஸார் குருசடி பள்ளத்தில் திருப்பதியின் உடலை தேடினர். ஆனால், அவரது உடல் கிடைக்கவில்லை. உடல் வீசப்பட்ட பகுதி ஓடை என்பதால், சமீபத்தில் பெய்த கனமழையால் வெள்ள நீரில் உடல் அடித்துச் செல்லப்பட்டிருக்கலாம் அல்லது வன விலங்குகள் உடலை சிதைத்திருக்கலாம் எனத் தெரிய வந்துள்ளது.