Published : 13 Aug 2015 08:44 AM
Last Updated : 13 Aug 2015 08:44 AM

முதல்முறையாக அறிமுகம்: ராணுவத்தில் சேர ஆன்லைன் மூலம் விண்ணப்பம் - ஆள்சேர்ப்பு மைய இயக்குநர் தகவல்

நாட்டிலேயே முதல் முறையாக ராணுவப்படை வீரர் பணிக்கு ஆன்லைன் மூலம் விண்ணப் பிக்கும் முறை அறிமுகப்படுத்தப் பட்டுள்ளதாக ராணுவ ஆள் சேர்ப்பு மைய இயக்குநர் தெரிவித்துள்ளார்.

தமிழகம் மற்றும் புதுச்சேரி ராணுவ ஆள் சேர்ப்பு மைய இயக்குநர் கர்னல் அவினாஷ் டி. பித்ரே வேலூர் ஆட்சியர் அலுவலகத்தில் செய்தியாளர் களிடம் கூறியதாவது:

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம்,விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை மற்றும் வேலூர் ஆகிய 7 மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியிலிருந்து ராணுவத்துக்கு ஆள் சேர்ப்பு முகாம் வரும் செப்டம்பர் 4 முதல் 13-ம் தேதி வரை புதுச்சேரியில் நடைபெற உள்ளது. இதில் 750 படைவீரர்கள் தேர்வு செய்யப்படவுள்ளனர். இதற்கான கல்வித் தகுதி 8-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை. வயது வரம்பு 17 முதல் 23 வரை இருத்தல் அவசியம். தேர்வு செய்யப்படும் படைவீரர்களுக்கு மாதச்சம்பளமாக ரூ.23 ஆயிரமும் மற்றும் இதர சலுகைகள், இலவச தங்குமிடம், சீருடைகள் வழங்கப்படும். பணி ஓய்வுக்கு பின்னர் ஓய்வூதியம் வழங்கப்படும்.

நாட்டில் முதல்முறையாக ஆன்லைன் மூலம் இப்பணிக்கு விண்ணப்பிக்கும் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. www.joinindianarmy.nic.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 19-ம் தேதி விண்ணப் பிக்க கடைசி தேதியாகும். விண்ணப்ப படிவங்கள் தமிழ், ஆங்கிலம், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் இடம்பெற்றுள்ளன.

ராணுவப்படை வீரர் பணிக்கு என்னென்ன தகுதிகள் வேண்டுமென்பதை தெரிந்துக் கொள்ள Army calling என்ற செயலி (ஆப்) வடிவமைக்கப்பட்டுள்ளது. இதை கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ள வசதி செய்யப்பட்டுள்ளது. தென்னிந்திய மொழிகளில் தகவல்கள் இடம்பெற்றுள்ளன.

ஆன்லைன் மூலம் விண்ணப்பித்தவர்களுக்கான அழைப்புக் கடிதம் ஆகஸ்ட் 20-ம் தேதி முதல் செப்டம்பர் 2-ம் தேதி வரை அனுப்பி வைக்கப்படும். ராணுவத்தின் மீதுள்ள ஆர்வத்தை இளைஞர்கள் மத்தியில் தூண்டும் வகையில் ஆகஸ்ட் 19-ம் தேதி புதுச்சேரி இந்திரா காந்தி விளையாட்டு மைதானத்தில் ராணுவ கண்காட்சி நடைபெற உள்ளது.

தமிழகத்தில் உள்ள 7 மாவட்டங்களில் இருந்து இதுவரை 10 ஆயிரம் பேர் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்துள்ளனர். அதில் வேலூர் மாவட்டத்தில் இருந்து 5 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x