Published : 11 Dec 2019 10:09 AM
Last Updated : 11 Dec 2019 10:09 AM

ஸ்ரீ முஷ்ணம் - ஸ்ரீ நெடுஞ்சேரியில் வார்டு பட்டியலில் குளறுபடி; உள்ளாட்சித் தேர்தலை புறக்கணிக்க கிராமத்தினர் முடிவு: வீடுகளில் கருப்புக் கொடியேற்றினர்

கடலூர்

கடலூர் மாவட்டம் ஸ்ரீ முஷ்ணம் அருகே ஸ்ரீ நெடுஞ்சேரியில் வார்டு பட்டியலில் குளறுபடி ஏற்பட்டுள்ளதால் கிராமத்தினர் வீடுகளில் கருப்புக் கொடி ஏற்றியுள்ளனர். உள்ளாட்சித் தேர்தலைபுறக்கணிக்கப் போவதாக இக்கி ராமத்தினர் அறிவித்துள்ளனர்.

கடலூர் மாவட்டத்தில் ஊரகப்பகுதிகளுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்ட பல்வேறு இடங்களில் வாக்காளர் பட்டியளில் குளறுபடி இருப்பதாக போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் ஸ்ரீ முஷ்ணம் அருகே உள்ள ஸ்ரீ நெடுஞ்சேரி ஊராட்சியில் வார்டு ஒதுக்கீடு செய்யப்பட்ட பட்டியலில் குளறுபடி உள்ளதாக கூறி கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஸ்ரீ நெடுஞ்சேரி ஊராட்சியில் 9 வார்டுகள் உள்ளன. இந்த ஊராட்சியில் சாத்தாவட்டம், சேலவிழி ஆகிய இரு கிராமங்கள் உள்ளன. இந்த ஊராட்சியில் 6 வது வார்டு பெண்கள் வார்டாக இருந்து. அது தற்போது ஆதி திராவிட பெண்கள் வார்டாக மாற்றப்பட்டுள்ளது. இப்படி மாற்றப்பட்ட இந்த வார்டில் ஆதிதிராவிடர்கள் வசிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இது போல ஆதிதிராவிடர் அதிகம் வசிக்கும் 9 வது வார்டு பொது வார்டாக அறிவிக்கப்பட்டுள்ளது. வாக்காளர் மறுவரையறை பட்டியலில் ஏற்பட்டுள்ள இந்த குளறுபடியை கண்டித்து நேற்று காலை ஸ்ரீ நெடுஞ்சேரி ஊராட்சியின் 6 வது வார்டு மக்கள் வீடுகளில் கருப்புக் கொடி ஏற்றினர். மேலும் ஊராட்சி மன்ற அலுவலகம் அருகே அமர்ந்து வார்டு குளறுபடியை மாற்றி முறையாக வார்டு பட்டியலை அறிவிக்க வேண்டும் என்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்த ஸ்ரீமுஷ்ணம் வட்டாட்சியர் புகழேந்தி, வட்டரா வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) சுகுமார் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பொதுமக்களை சமாதானப்படுத்தினர். இது குறித்த தகவல் தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பி வைக்கப்படும் என்றும் அவர்கள் தெரிவித்தனர். போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் பட்டியல் மாற்றம் செய்யப் படவில்லை என்றால் தேர்தல் புறக்கணிப்பில் ஈடுபடுவோம் என்று கூறிச் சென்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x