Published : 11 Dec 2019 10:05 AM
Last Updated : 11 Dec 2019 10:05 AM

சந்தைக்கு வரத்து குறைவால் வெங்காயத்தைத் தொடர்ந்து பூண்டு விலையும் அதிகரிப்பு

சேலம்

வெங்காயத்தைத் தொடர்ந்து, தற்போது பூண்டின் விலையும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. சேலத்தில் தரமான பூண்டு மொத்த விலையில் ஒரு கிலோ ரூ.180-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தமிழகத்தில் மளிகைப் பொருட்களின் மொத்த விற்பனை சந்தைகளில் முக்கியமானதாக சேலம் உள்ளது. இங்குள்ள லீ பஜார், செவ்வாய்பேட்டை பால் மார்க்கெட் ஆகிய பகுதியில் மிளகு, சீரகம், பருப்பு வகைகள், பூண்டு, மிளகாய் உள்ளிட்ட மளிகைப் பொருட்களின் மொத்த விற்பனை மையமாக உள்ளது. இங்கு பூண்டு விற்பனையில் 30-க்கும் அதிகமான மொத்த விற்பனைக் கடைகள் உள்ளன. இந்நிலையில், சேலம் சந்தைக்கு பூண்டு வரத்து குறைந்துள்ளது. இதனால், அதன் விலை படிப்படியாக உயரத் தொடங்கியுள்ளது.

இதுகுறித்து வியாபாரிகள் கூறியதாவது:சேலம் சந்தைக்கு ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட வட மாநிலங்களில் இருந்து அதிகளவில் பூண்டு விற்பனைக்கு வரும். ஆண்டுதோறும் மார்ச் முதல் ஜூலை வரை பூண்டு அறுவடை சீசன் இருக்கும். கடந்த மாதம் வரை சேலத்துக்கு மாதத்துக்கு 20 லோடு பூண்டு மூட்டைகள் விற்பனைகு வந்தன. தற்போது, மாதத்துக்கு 5 முதல் 8 லோடு மட்டுமே விற்பனைக்கு வருகிறது. வரத்து குறைவதால், பூண்டு விலை அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

கடந்த வாரத்தை விட, தற்போது கிலோவுக்கு ரூ.20 வரை (மொத்த விலையில்) அதிகரித்துள்ளது.

சாதாரண ரக பூண்டு கிலோ ரூ.120-ல் இருந்து ரூ.140 ஆகவும், நடுத்தரம் ரூ.140-ல் இருந்து ரூ.155 ஆகவும், பெரிய பூண்டு கிலோ ரூ.165-ல் இருந்து ரூ.180 ஆக அதிகரித்துள்ளது. தரமான பூண்டு சில்லரையில் கிலோ ரூ.200-க்கும் அதிகமாக விற்பனை செய்யப்படுகிறது. பூண்டு சீசன் தொடங்கும் மார்ச் வரை இருப்பில் உள்ள பூண்டுகளே விற்பனைக்கு வரும். எனவே, விலை அதிகரிக்கும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x