

மகாராஷ்டிராவில் இருந்து வெங்காயம் வாங்கியதற்காக கொடுக்கப்பட்ட ரூ.8 லட்சத்துடன் தலைமறைவான லாரி ஓட்டுநரை போலீஸார் தேடிவருகின்றனர்.
சென்னை தி.நகர் ரங்கநாதன் தெருவில் ஜவுளி, காய்கறி உட்பட அனைத்து பொருட்கள் விற்பனைக்கான கடை வைத்திருப்பவர் சுந்தரலிங்கம். இவர் தனது கடைக்கு மகாராஷ்டிரா மாநிலம் நாசிக்கில் இருந்து பெரிய வெங்காயம் வாங்கினார். வெளிமாநிலங்களில் இருந்து வாங்கப்படும் பொருட்களுக்கான பணத்தை, அதைக் கொண்டுவரும் லாரி ஓட்டுநர்களிடமே கொடுப்பது வியாபாரிகளின் வழக்கம்.
அதன்படி, வெங்காயத்துக்கான பணத்தை, அந்த வெங்காய லோடு கொண்டுவந்த லாரி ஓட்டுநர் கிருஷ்ணகிரியைச் சேர்ந்த பிரகாஷ் என்பவரிடம் கொடுத்து இருக்கிறார் சுந்தரலிங்கம். ஆனால் இந்த பணத்தை நாசிக்கில் உள்ள வெங்காய வியாபாரியிடம் லாரி ஓட்டுநர் பிரகாஷ் கொடுக்காமல், பணத்துடன் தலைமறைவாகி விட்டார்.
வெங்காயத்துக்கான பணத்தை நாசிக் வியாபாரி, ஜவுளிக்கடை அதிபர் சுந்தரலிங்கத்திடம் போன் செய்து கேட்டுள்ளார். அதற்கு லாரி ஓட்டுநரிடம் பணத்தை கொடுத்து அனுப்பியதாகக் கூறியுள்ளார். அதன் பிறகுதான் லாரி ஓட்டுநர் ரூ.8 லட்சம் பணத்துடன் தலை மறைவானது தெரியவந்தது. அதைத்தொடர்ந்து சுந்தரலிங்கம், ரூ.8 லட்சம் பணத்தை மோசடி செய்ததாக லாரி ஓட்டுநர் பிரகாஷ் மீது மாம்பலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீஸார் வழக்குப்பதிவு செய்து லாரி ஓட்டுநர் பிரகாஷை தேடி வருகின்றனர்.
அதிகாரிகள் சோதனை
இதனிடையே வெங்காயத்தை பதுக்கி வைத்து வியாபாரம் செய்கிறார்களா என தமிழக குடிமைப்பொருள் வணிக குற்ற புலனாய்வு துறை போலீஸார் நேற்று தமிழகம் முழுவதும் அதிரடி சோதனை நடத்தினர். தஞ்சாவூர், நாகை, திருவாரூர், சிதம்பரம், திருச்சி, சென்னை, மதுரை, கரூர் ஆகிய இடங்களில் இந்த திடீர் சோதனையில் அதிகாரி கள் ஈடுபட்டனர்.
வெங்காய கிடங்குகள், விவசாய பொருட்கள் வைக்கப் படும் இடங்கள், காய்கறி சந்தை கள் உட்பட பல இடங்களில் இந்த சோதனை நடத்தப்பட்டது. சோதனை முடிவில் ஒருவரைக்கூட அதிகாரிகள் கைது செய்யவில்லை. யாருமே வெங்காயத்தை பதுக்க வில்லை என்று குடிமைப்பொருள் வணிக குற்றப் புலனாய்வு துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.