

17-வது சென்னை சர்வதேச திரைப்பட விழா, நாளை முதல் வரும் 19-ம் தேதி வரை சென்னையில் நடைபெற உள்ளது. இதில் 55 நாடுகளில் இருந்து 130-க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் திரையிடப்பட உள்ளன. இந்தோ சினி அப்ரிசியேஷன் பவுண்டேஷன் சார்பில் நடக்கும் சென்னை சர்வதேச திரைப்பட விழாவுக்கான ஏற்பாடுகள் பிரம்மாண்டமாக நடைபெற்று வருகின்றன.
இதன் தொடக்க விழா சென்னை கலைவாணர் அரங்கில் நாளை மாலை 6 மணி அளவில் நடக்கிறது. தொடக்க விழா படமாக கான் திரைப்பட விழாவில் தங்கப் பனை விருது பெற்ற ‘தி பாராஸைட்’ (Parasite) என்ற கொரிய மொழிப் படம் திரையிடப்படுகிறது. நிறைவு விழா படமாக ஜெர்மனியைச் சேர்ந்த ‘கண்டர்மான்' என்ற திரைப்படம் திரையிடப்பட உள்ளது.
சர்வதேச அளவில் பல்வேறு விருதுகளை பெற்று கவனத்தை ஈர்த்த படங்களுக்கான வரிசையில் கத்தார், நியூசிலாந்து சூடான் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த 10 படங்கள் முதன்முறையாக திரையிடப்பட உள்ளன. மேலும் அர்ஜென் டினா, பெல்ஜியம், ஆஸ்திரேலியா, அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளின் படங்களிலிருந்து 95 படங்கள் திரையிடப்படுகின்றன.
இத்திரைப்படங்கள் சென்னையிலுள்ள தேவி, தேவி பாலா, அண்ணா, கேசினோ, ரஷ்யன் கலாச்சார மையம், தாகூர் திரைப்பட மையம் ஆகிய ஆறு திரையரங்குகளில் திரையிடப்பட உள்ளன. தினசரி காலை 9.30 முதல் படங்கள் திரையிடப்படும்.
12 தமிழ்ப் படங்கள்
இந்தியன் பனோரமா பிரிவில், ‘அமோரி’ என்ற கொங்கணி மொழிப்படம், ‘ஜாவி – தி சீட்’ என்ற அசாமிய மொழிப் படம், ‘நேதாஜி’ என்ற இருளர் மொழிப் படம் ஆகிய 3 படங்கள் முதல் முறையாகத் திரையிடப்பட உள்ளன. மேலும் கன்னடம், மலையாளம், தெலுங்கு, குஜராத்தி, வங்காளி, இந்தி, கரோ – காசி உள்ளிட்ட 13 இந்திய மொழிப் படங்கள் திரையிடப்பட இருக்கின்றன. ரூபாய் 7 லட்சம் ரொக்கப் பரிசு கொண்ட, தமிழ்ப் படங்களுக்கான போட்டிப் பிரிவில் 12 தமிழ்ப் படங்களும், தமிழ்நாடு அரசின் எம்ஜிஆர் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சிக்கல்லூரி மாணவர்களின் டிப்ளமோ குறும்படங்களும் திரையிடப்பட உள்ளன.
இதில் தமிழ்ப் படங்கள் போட்டிப் பிரிவில் திரையிட ‘அடுத்த சாட்டை’, ‘அசுரன்', ‘பக்ரீத்', ‘ஹவுஸ் ஓனர்', ‘ஜீவி', ‘கனா', ‘மெய்', ‘ஒத்த செருப்புசைஸ் 7', ‘பிழை’, ‘சீதக்காதி', ‘சில்லு கருப்பட்டி' மற்றும் ‘தோழர் வெங்கடேசன்' ஆகிய படங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.விழாவில் முக்கிய நிகழ்வாக, தனது 90-வது வயதிலும் தொடர்ச்சியாகப் படங்களில் நடித்து வரும் சாருஹாசனுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட உள்ளது. நிகழ்ச்சியில் தமிழக அமைச்சர்கள், பல்வேறு நாடுகளைச் சேர்ந்த திரைப்பட கலைஞர்கள், தூதரக அதிகாரிகள் கலந்து கொள்கின்றனர்.