Published : 11 Dec 2019 07:42 AM
Last Updated : 11 Dec 2019 07:42 AM

உள்ளாட்சித் தேர்தல் தொகுதி பங்கீடு தொடர்பாக கூட்டணி கட்சிகளை கண்டுகொள்ளாத அதிமுக, திமுக: மனுதாக்கல் செய்ய 6 நாட்களே இருப்பதால் அதிருப்தி

எம்.சரவணன்

சென்னை

உள்ளாட்சித் தேர்தலுக்கு மனுதாக்கல் செய்ய இன்னும் 6 நாட்களே உள்ள நிலையில், தொகுதி பங்கீடு தொடர்பாக அதிமுகவும், திமுகவும் தங்களது கூட்டணிக் கட்சிகளை கண்டுகொள்ளாமல் இருப்பது கூட்டணிக்குள் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் 27 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு மட்டும் வரும் 27, 30-ம் தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல் நடை பெறவுள்ளது. இதில் கிராம ஊராட்சித் தலைவர், கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு கட்சி சார்பில்லாமல் தேர்தல் நடைபெறவுள்ளது.

308 ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள 5 ஆயிரத்து 90 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்கள், 515 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் என 5 ஆயிரத்து 605 பதவிகளுக்கு தேர்தல் நடை பெறவுள்ளது. இவற்றை கூட்டணிக் கட்சிகளுக்கு பங்கிடுவது தொடர் பாக பாமக, பாஜக, தேமுதிக, தமாகா ஆகிய கூட்டணி கட்சிகளு டன் அதிமுக சார்பில் முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் கடந்த 6-ம் தேதி முதல்கட்ட ஆலோசனை நடத்தினர்.

திமுக சார்பில் கூட்டணி கட்சி களின் கூட்டம் அதிகாரப்பூர்வமாக நடைபெறவில்லை. ஆனாலும் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகளின் தலைவர்கள் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை தனித்தனியாகச் சந்தித்து உள்ளாட்சித் தேர்தல் தொகுதி பங்கீடு குறித்துப் பேசினர். இருப்பினும், கூட்டணி கட்சிகளுக்கான பங்கீடு குறித்து அதிமுக, திமுக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.

இந்நிலையில் உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் செய்ய, வரும் 16-ம் தேதி கடைசி நாளாகும். அதற்கு இன்னும் 6 நாட்களே இருக்கும் நிலையில் தொகுதிப் பங்கீட்டில் அதிமுகவும், திமுகவும் தங்களது கூட்டணி கட்சிகளைக் கண்டுகொள்ளாமல் அலட்சியம் காட்டுவது கூட்டணிக் குள் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளதாகக் கூறப்படுகிறது.

உள்ளாட்சித் தேர்தலுக்காக பாஜகவில் முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதா கிருஷ்ணன் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழு வின் கூட்டம் சென்னையில் நேற்று நடைபெற்றது. அதில் 27 மாவட்டங் களிலும் ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர், மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்காக அதிமுகவுடன் பேச்சு நடத்த மாவட்ட அளவில் குழு அமைக் கப்பட்டுள்ளது.

இக்குழுவினர் அந்தந்த மாவட்ட அதிமுக செயலாளருடன் பேசி பாஜக போட்டியிடுவதற்கான வார்டுகளை முடிவு செய்வார்கள் என்று பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். பாமக, தேமுதிக, தமாகா ஆகிய கூட்டணி கட்சிகளும் தங்களுக்கான இடங் களைப் பெற மாவட்ட அளவில் பேசி வருகின்றன.

திமுக கூட்டணியிலும் தொகுதி பங்கீடு என்பது மாவட்ட அளவில் தீர்மானிக்கப்படும் என்று ஸ்டாலின் ஏற்கெனவே அறிவித்துள்ளார். அதன்படி மாவட்ட அளவில் திமுக மாவட்டச் செயலாளர்களுடன் காங்கிரஸ், மதிமுக, மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, மனிதநேய மக்கள் கட்சி, இந்திய ஜனநாயகக் கட்சி, கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி ஆகி யவை பேசி வருவதாகக் கூறப் படுகிறது.

இதுதொடர்பாக இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசனிடம் கேட்டபோது, “27 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு நடைபெறும் தேர்தலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வாய்ப்புள்ள இடங்களில் போட்டியிடுவது தொடர்பாக திமுக மாவட்டச் செயலாளர்களுடன் பேச்சு நடத்த மாவட்ட அளவில் குழு அமைத்துள்ளோம். அந்தக் குழு பேச்சு நடத்தி இந்திய கம்யூனிஸ்ட் போட்டியிடும் இடங்களை முடிவு செய்வார்கள்" என்றார்.

மாவட்ட அளவில பேச்சு நடைபெற்று வந்தாலும், அவர்களிடம் கட்சிக்கு செல்வாக்கு இல்லை, வலுவான வேட்பாளர்கள் இல்லை, பெண் வேட்பாளர்கள், எஸ்.சி., எஸ்.டி வேட்பாளர்கள் இல்லை. செலவு செய்யும் வலிமை கொண்ட வேட்பாளர்கள், பெரும்பான்மை சமூகத்தைச் சேர்ந்த வேட்பாளர்கள் இல்லை என்று கூறி கேட்கும் இடங்களை எல்லாம் மறுப்பதாக அதிமுக, திமுக மீது அவர்களின் கூட்டணி கட்சிகள் அதிருப்தி தெரிவிக்கின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x