Published : 10 Dec 2019 08:35 PM
Last Updated : 10 Dec 2019 08:35 PM

மருத்துவக் கல்லூரிகளில் இட ஒதுக்கீடு: திமுக எம்.பி. கோரிக்கைக்கு மத்திய சுகாதார அமைச்சர் பதில் 

மருத்துவக் கல்லூரிகளில் அகில இந்திய ஒதுக்கீட்டிற்கு மாநில அரசால் வழங்கப்படும் இடங்களை இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு ஒதுக்கீடு செய்ய வேண்டுமென்று கோரிக்கை விடுத்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தனுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

திமுக மாநிலங்களவை உறுப்பினர் பி. வில்சன், மருத்துவக் கல்லூரிகளில் அகில இந்திய ஒதுக்கீட்டிற்கு மாநில அரசால் வழங்கப்படும் இடங்களை இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு ஒதுக்கீடு செய்ய வேண்டுமென்று கோரிக்கை விடுத்து கடிதம் எழுதினார். இக்கடிதத்திற்கு மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் பதில் அனுப்பியுள்ளார்.

அதன் விவரம் வருமாறு :

மத்திய சுகாதாரத்துறை அமைச்சரின் கனிவான கவனத்திற்கு, இந்தியா முழுவதிலும் உள்ள மருத்துவ கல்லூரிகளில், மத்திய அரசு கல்வி நிறுவனங்கள் தவிர்த்து மற்ற மாநிலங்களின் அரசு மற்றும் தனியார் கல்லூரிகள் ஒப்படைத்த அனைத்திந்திய ஒதுக்கீடு இடங்களில், மருத்துவ பட்டப்படிப்பு, பட்ட மேற்படிப்பு மற்றும் டிப்ளமோ படிப்புகளின் மருத்துவ சேர்க்கையில், இதர பிற்படுத்தப்பட்ட பிரிவு மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குவதில் மருத்துவ கவுன்சில் குழு மற்றும் அவர்களின் தோல்வி பற்றி எடுத்துரைக்க விரும்புகிறேன்.

மருத்துவ கவுன்சிலின் சட்ட திட்டங்களின் படி அனைத்திந்திய ஒதுக்கீடு என்பது மத்திய அரசின் மருத்துவ கல்லூரிகள் மற்றும் மாநில அரசின் கீழ் செயல்படும் மருத்துவ கல்லூரிகள் மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகளால் ஒப்படைக்கப்பட்ட இடங்களாகும்.

அதன் படி மாநில அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகளால் மருத்துவ பட்டப்படிப்பு மற்றும் டிப்ளமோ படிப்புகளுக்காக 15% இடங்களும், மருத்துவ பட்டமேற்படிப்புகளுக்காக 50% இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளது.

மருத்துவ பட்ட மேற்படிப்பு சட்டம் 9 (IV) , 2000-ன் படி, அனைத்திந்திய ஒதுக்கீட்டு இடங்கள் என்பது மருத்துவ கல்லூரிகள் அமையப்பெற்ற மாநிலம் மற்றும் யூனியன் பிரதேசத்தில் உள்ள மருத்துவ கல்லூரிகளுக்கு ஒதுக்கப்பட வேண்டும். அதே சட்ட விதிகள் மருத்துவ பட்டப்படிப்பிற்கும் பொருந்தும்.


தமிழகத்தில் இதர பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மற்றும் ஒடுக்கப்பட்ட மாணவர்களுக்கான இடஒதுக்கீடு என்பது மொத்தம் 69% ஆகும். இதில் இதர பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கான ஒதுக்கீடு என்பது 50% ஆக உள்ளது.

மத்திய அரசின் மருத்துவ கல்லூரிகள், 2006-ம் ஆண்டின் இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கான மத்திய அரசின் 27% இடஒதுக்கீட்டை பின்பற்றும் நிலையில், மருத்துவ கவுன்சிலானது, மாநில அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகளில் மருத்துவ பட்டப்படிப்பு மற்றும் பட்ட மேற்படிப்பு மருத்துவ சேர்க்கையில் அகில இந்திய ஒதுக்கீட்டின் படி 27% இடஒதுக்கீட்டை பின்பற்றப்படவில்லை.


அதிலும் குறிப்பாக இட ஒதுக்கீடு தொடர்பான மாநிலங்களின் சட்ட விதிகள் கூட அந்தந்த மாநிலங்களில் செயல்படுத்தப்படவில்லை. உதாரணமாக தமிழகத்தில் இதர பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தபடுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட, மற்றும் தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கான இடஒதுக்கீட்டு சட்டம் 1993-ன் படி, பிற்படுத்தப்பட்ட மற்றும் இதர பிற்படுத்தப்பட்டவர்களுக்கான இடஒதுக்கீடு 50% அளிக்கப்பட வேண்டும்.

ஆனால் மாநிலங்கள் ஒப்படைத்த அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் இந்த இட ஒதுக்கீடு வழங்கப்படவில்லை. இதன் மூலம் மாநிலங்கள் ஒதுக்கும் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களை இதர பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் இழக்க நேரிடுகிறது.


இது இதர பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு பேரிழப்பாக அமைகிறது. 2019-ம் ஆண்டு நடைபெற்ற மருத்துவ பட்ட மேற்படிப்பு சேர்க்கையின் பொழுது, 8137 இடங்கள் இந்த பிரிவினருக்காக ஒதுக்கப்பட்டது. மத்திய அரசின் இட ஒதுக்கீட்டின் படியே 27% அதாவது 2197 இடங்கள் ஒதுக்கப்பட்டிருக்க வேண்டிய நிலையில், மொத்தமுள்ள அனைத்து மாநில அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகளில் அகில இந்திய ஒதுக்கீட்டின்படி 224 இடங்கள் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது.


இதன் மூலம் 1973 இதர பிற்படுத்தப்பட்ட மாணவரகள் தங்கள் இடங்களை இழந்துள்ளனர். தமிழகத்தில் மட்டும் அனைத்திந்திய ஒதுக்கீட்டிற்காக 866 இடங்கள் ஒதுக்கப்பட்டு ஒரே ஒரு இடம் மட்டுமே இதர பிற்படுத்தப்பட்ட மாணவருக்காக வழங்கப்பட்டது.தமிழக அரசு வழங்கிய அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் ஒன்று கூட மத்திய அரசு அல்லாத பிற கல்வி நிறுவனங்களுக்கு வழங்கப்படவில்லை.

இது மிகவும் கண்டிக்கத்தக்கது. மத்திய அரசு மருத்துவ கல்லூரிகளில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கான 27% இட ஒதுக்கீடு வழங்கும் பொழுது, அகில இந்திய ஒதுக்கீட்டிற்காக மாநில அரசு வழங்கும் இடங்களில், அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் அவர்களுக்கான ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும்.

இந்திய மருத்துவ கவுன்சிலின் சட்டதிட்டத்தின் படி, அகில இந்திய ஒதுக்கீட்டில் நிரப்படாத இடங்கள், மாநில அரசின் இட ஒதுக்கீற்கு வழங்கப்பட வேண்டும். அதையும் மீறி மத்திய அரசு கல்வி நிலையங்களில் இதர பிற்படுத்தப்படோருக்கு வழங்கப்படும் 27% இட ஒதுக்கீடு கூட , அகில இந்திய ஒதுக்கீட்டிற்கு மாநில அரசால் ஒப்படைக்கப்பட்ட இடங்கள், அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகளுக்கு இந்த வருடம் வழங்கப்படவில்லை.

இதன் மூலம் மத்திய மருத்துவ கல்வி நிறுவனங்களுக்கு ஒரு மாதிரியாகவும், மாநிலத்தின் அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்வி நிறுவனங்களுக்கு ஒரு மாதிரியாகவும் வேறுபாடு காட்டப்படுகிறது.

இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கான மருத்துவ சேர்க்கையில் மருத்துவ பட்டப்படிப்பு, பட்ட மேற்படிப்பு மற்றும் டிப்ளமோ படிப்புகளில் இட ஒதுக்கீடு விஷயத்தில் அகில இந்திய ஒதுக்கீட்டிற்கு மாநில அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகள் வழங்கிய இடங்களைக்கூட வழங்காமல் , இந்திய மருத்துவ கவுன்சிலிங் கமிட்டி மற்றும் மருத்துவ குழு போன்றவை அந்த மாணவர்களுக்கு அநீதி இழைத்துள்ளது.

தமிழகத்தில் மட்டும் கடந்த வருடம் இதர பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு 400 இடங்கள் ஒதுக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் அவை ஒதுக்கப்படாததால் அவர்கள் அந்த இடங்களை இழந்தனர். பட்ட மேற்படிப்புகளில் இந்த வருடம் சுமார் 425 மாணவர்கள் அவர்களின் இடங்களை இழந்துள்ளனர்.

அதே போல பட்டப்படிப்பு மற்றும் டிப்ளமோ படிப்புகளுக்காக இந்த வருடம் இந்திய அளவிலான ஒதுக்கீட்டிற்கு தமிழக அரசு மற்றும் தனியார் கல்லூரிகள் வழங்கிய 795 இடங்களில், 395 மாணவர்கள் தங்கள் ஒதுக்கீடு கிடைக்கப்பெறாமல் புறந்தள்ளப்பட்டனர்.

இது தொடர்பாக 26.7.2019 அன்று மாநிலங்களவையில் கேள்வி நேரத்தின் பொழுது மருத்துவ பட்டப்படிப்பு , பட்ட மேற்படிப்பு மற்றும் டிப்ளமோ படிப்புகளில் மாநில அரசால் அகில இந்திய ஒதுக்கீட்டிற்கு வழங்கப்படும் இடங்களை, இதர பிறபடுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு வழங்க வேண்டுமென்று கோரிக்கை வைத்தேன்.
ஆனால் அந்த கோரிக்கை இன்று வரை அமைச்சரவையின் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படவில்லை. ஏற்கனவே தமிழகத்தில் நீட் தேர்வினாலும், இட ஒதுக்கீடு குளறுபடிகளாலும் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர் எனபதை தங்கள் கவனத்திற்கு கொண்டு அருகிறேன்.

எனவே தயவு செய்து இந்த விஷயத்தில் கவனம் செலுத்தி, மருத்துவ பட்டப்படிப்பு, பட்ட மேற்படிப்பு, டிப்ளமோ போன்ற படிப்புகளுக்கு, அகில இந்திய ஒதுக்கீட்டிற்காக மாநிலங்கள் வழங்கும் இடங்களில், இதர பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கான மாநில அரசின் இட ஒதுக்கீட்டை அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் அமல்படுத்தவும்,

ஏற்கனவே தமிழகத்தில் பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மற்றும் தாழ்த்தப்பட்டோருக்கான சட்டம் 1993ன் படி வழங்கப்படும் 50% ஒதுக்கீட்டை, மாநில அரசால் அகில இந்திய ஒதுக்கீட்டிற்கு வழங்கப்படும் இடங்களை, இதர பிறபடுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு வழங்கி உறுதி செய்யவும் வேண்டுகிறேன்”.

என பி.வில்சன் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தனுக்கு எழுதிய கடிதத்திற்கு, பதிலளித்துள்ள மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன், “தங்களது கோரிக்கைகள் பரிசீலிக்கப்படும்” என்று பதிலளித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x