

புதுக்கோட்டையில் சில மாதங்களுக்கும் வங்கிக் கிளையில் திருடுபோன நகைகளுக்குப் பதிலாக ரொக்கம் வழங்கப்பட்டதால் ஏராளமான வாடிக்கையாளர்கள் வங்கியில் குவிந்தனர்.
புதுக்கோட்டை தெற்கு ராஜவீதியில் நகரக் காவல் நிலையம் அருகே தேசியமயமாக்கப்பட்ட வங்கிக் கிளை உள்ளது. இங்கு அலுவலக உதவியாளராக பணிபுரிந்த திருக்கட்டளையைச் சேர்ந்த மாரிமுத்து என்பவர் ஏப்ரல் 28-ம் தேதி மாயமானார்.
இது குறித்து அவரது மனைவி ராணி, கணேஷ் நகர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். மறுநாள் திருவரங்குளம் அருகே யூக்கலிப்டஸ் காட்டுப் பகுதியில் இவர்களது காரும், சில கவரிங் வளையல்கள், ஹார்டு டிஸ்க்கும் எரிந்து கிடந்தது. இவற்றை வல்லத்திராகோட்டை போலீஸார் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர்.
இந்நிலையில் சந்தேகத்தின் பேரில் வங்கியின் லாக்கரில் உள்ள நகைகளை சரிபார்த்ததில் வாடிக்கையாளர்கள் அடகு வைத்திருந்த ரூ.4 .84 கோடி மதிப்பிலான 13.75 கிலோ தங்க நகைகள் காணாமல் போனது தெரியவந்தது. இது குறித்து நகரக் காவல் நிலையத்தில் வங்கி அலுவலர்கள் புகார் அளித்தனர்.
இதைத்தொடர்ந்து விசாரணை செய்த போலீஸார், வங்கியில் இருந்து வங்கி அலுவலர்கள் சிலரோடு சேர்ந்து நகைகளை மாரிமுத்து திருடியதை உறுதி செய்தனர். பின்னர், மாரிமுத்துவின் உறவினர்கள் சிலரிடம் இருந்து குறிப்பிட்ட அளவுக்கு தங்க நகைகளையும் பறிமுதல் செய்தனர்.
இதற்கிடையில் மணமேல்குடி அருகே கோடியக்கரை கடல் பகுதியில் சடலமான நிலையில் மாரிமுத்துவின் உடல் மீட்கப்பட்டது. இது குறித்து கடலோரக் காவல் படையினர் விசாரணை மேற்கொண்டனர்.
இந்த சம்பவத்தில் உரிய நடவடிக்கையின்றி கிடப்பிலே இருந்து வருவது வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி வந்தது.
மேலும், நகைகளை இழந்த வாடிக்கையாளர்கள் தினந்தோறும் நகைகளைக் கொடுக்குமாறு வங்கி நிர்வாகத்தை வலியுறுத்தி வந்தனர்.
இதையடுத்து நகைகளுக்கு செய்யப்பட்டிருந்த காப்பீடு மூலம் பாதிக்கப்பட்ட 140 வாடிக்கையாளர்களுக்கு சொந்தமான ரூ.4.84 கோடி மதிப்பிலான 13.75 கிலோ தங்க நகைகளுக்குப் பதிலாக, தொகையாக வழங்கும் பணி இன்று (டிச.10) தொடங்கியது. இப்பணி 12-ம் தேதி வரை மேற்கொள்ளப்படும் என வங்கி நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதனால் வாடிக்கையாளர்கள் ஏராளமானோர் ரொக்கத்தைப் பெற்றுச் சென்றனர். இதற்காக, வங்கி முன்பு போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.