

குஜராத்தில் படேல் சமூகத்தினரின் கோரிக்கை நிறைவேற்றப்படாததால் அங்கு கலவரம் ஏற்பட்டுள்ளது. இதற்கு பொறுப்பேற்று அம்மாநில முதல்வர் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்றார் முன்னாள் மத்திய இணை அமைச்சர் நாராயணசாமி.
புதுக்கோட்டையில் நேற்று செய்தியாளர்களிடம் அவர் மேலும் கூறியதாவது: காங்கிரஸ் ஆட்சியில் ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆனால், பாஜக ஆட்சியில் ஊழல் செய்துள்ள மத்திய அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்க பிரதமர் தயங்குகிறார். இதனால், நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் முடங்கியது.
காங்கிரஸ் ஆட்சியின்போது, இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படும் மீனவர்கள் 2 அல்லது மூன்று நாட்களுக்குள் விடுதலை செய்யப்படுவர். பறிமுதல் செய்யப்பட்ட படகுகளும் விடுவிக்கப்படும். ஆனால், தற்போது மீனவர்கள் தாக்கப்படுவதும், கைது செய்து பல நாட்கள் சிறையிலடைக்கப்படுவதும் தொடர்கிறது. பறிமுதல் செய்யப்படும் படகுகளை விடுவிக்கவும் இலங்கை அரசு மறுக்கிறது. இது, மீனவர்களின் மீதான பாஜக அரசின் அக்கறையின்மையை காட்டுகிறது.
புதுச்சேரியில் முதல்வர் ரங்கசாமி தேர்தல் நேரத்தில் அளித்த 158 வாக்குறுதியில் கடந்த நான்கரை ஆண்டுகளில் 3-ஐ மட்டுமே அரைகுறையாக நிறைவேற்றியுள்ளார்.
இலங்கை போர்க்குற்றம் குறித்து ஐநா-வின் தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டும் என்பதுதான் காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாடு. கர்நாடக அரசு காவிரியில் அணைகள் கட்டுவதற்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவிப்போம். கட்சியின் மாநில துணைத் தலைவர் ராகுல்காந்தியின் அறிவிப்புபடி புதிய மதுவிலக்கு கொள்கையை அமல்படுப்படுத்துவோம் என்றார்.