

பண்ருட்டி நடுக்குப்பம் கிராம பஞ்சாய்த்து தலைவர் பதவி ரூ.50 லட்சத்துக்கும், துணைத்தலைவர் பதவி 15 லட்சத்துக்கும் விற்பனையான விவகாரத்துக்கு பலரும் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில் இதுகுறித்து ஆட்சியர் உத்தரவின்பேரில் அரசு அதிகாரிகள் நேரில் விசாரணை நடத்தினர்.
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள நடுக்குப்பம் பஞ்சாயத்து தலைவர், துணைத் தலைவர் பதவிகள் தலா ரூ.50 லட்சம், 15 லட்சத்துக்கு ஏலம் விடப்பட்டது. இது தொடர்பாக வீடியோ வைரலானது. சட்டப்பஞ்சாயத்து இயக்கம் உள்ளிட்ட அமைப்புகள் லஞ்ச ஒழிப்புத்துறை, தேர்தல் ஆணையத்துக்கு புகார் அளித்தனர்.
இது அப்பட்டமான லஞ்சம் கொடுக்கும் விவகாரம், வாக்குக்கு பணம் கொடுக்கும் விவகாரம் என்பதால் தேர்தல் விதிமீறலின்கீழ் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்கிற கோரிக்கை வலுத்தது. இதுகுறித்து ஆட்சியர் கவனத்திற்கு கொண்டுச் செல்லப்பட்ட நிலையில் வட்டார வளர்ச்சி அதிகாரியை அங்கு விசாரிக்க உத்தரவிட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் அன்புச் செல்வன் தெரிவித்திருந்தார்.
அதன்படி இன்று காலை நடுக்குப்பம் கிராமத்துக்கு வட்டார வளர்ச்சி அலுவலர் சீனிவாசன் தலைமையிலான குழு நேரில் சென்று ஏலம் விடப்பட்டது குறித்து கிராம மக்களிடம் விசாரணை நடத்தினர். விசாரணை அறிக்கை மாவட்ட ஆட்சியரிடம் அளிக்கப்படும். ஏலம் விட்டது உண்மை என்றால் அனைவர் மீதும் நடவடிக்கை வரும் எனத் தெரிகிறது.