Published : 10 Dec 2019 01:06 PM
Last Updated : 10 Dec 2019 01:06 PM

ரஜினி மக்கள் மன்றத்தினர் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடத் தடை: மீறினால் சட்ட நடவடிக்கை

ரஜினி மக்கள் மன்றத்தினர் யாரும் உள்ளாட்சித்தேர்தலில் போட்டியிடக்கூடாது மீறிப்போட்டியிட்டால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அரசியலில் குதிப்பேன், வெற்றிடத்தை நிரப்புவேன் என 2016-ம் ஆண்டு டிச.31 அன்று மீண்டும் அறிவித்தார் ரஜினி. அதில் 2021 சட்டமன்ற தேர்தலில் நேரடியாக போட்டியிடுவோம் என அறிவித்திருந்தார். ஆனால் அரசியல் கட்சியை தொடங்காமல் காலந்தாழ்த்தி வருகிறார் ரஜினி. இடையில் தொண்டர்களை ஒருங்கிணைக்கும் பணி நடந்து வருகிறது.

அதற்காக ரஜினி மக்கள் மன்றம் என்கிற அமைப்பு தொடங்கப்பட்டு அதன்மூலம் பணிகள் நடக்கிறது. தான் யார் வலையிலும் சிக்கவில்லை என சமீபத்தில் ரஜினி அறிவித்திருந்தார். தனக்கு காவி வண்ணம் பூசவேண்டாம் என்றும் தெரிவித்திருந்த ரஜினி உள்ளாட்சித்தேர்தலில் யாருக்கும் ஆதரவில்லை என தெளிவுபடுத்தினார்.

இந்நிலையில் இன்று திருச்சி மாவட்ட ரஜினி மக்கள் மன்ற தலைவர் கலீல் சார்பில் ஒரு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதில் உள்ளாட்சித்தேர்தலில் போட்டியிடக்கூடாது என மாநிலத்தலைமை அனைவருக்கும் தெரியப்படுத்த தெரிவித்துள்ளதாக கூறியுள்ளார்.

திருச்சி மாவட்டச்செயலாளர் கலீல் அறிக்கை:

“தமிழகத்தில் நடைபெறவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலில் நமது தலைவர் ரஜினிகாந்த் அவர்கள் யாருக்கும் ஆதரவு கொடுக்கவில்லை. ஆகையால் யாரும் ரஜினி மக்கள் மன்றத்தின் பெயரிலோ, ரஜினி ரசிகர் மன்றத்தின் பெயரிலோ, தலைவரின் பெயரையோ, புகைப்படத்தையோ பயன்படுத்தி வாக்கு சேகரித்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநில தலைமை அறிவித்துள்ளது.

அதன் தொடர்ச்சியாக இன்று மாலை மாநில நிர்வாகி சுதாகர் மாவட்ட செயலாளரை அலைபேசியில் தொடர்பு கொண்டு இச்செய்தியை மிகவும் கண்டிப்புடன் அறிவுறுத்துமாறு கேட்டுக் கொண்டார். எனவே நம் திருச்சி மாவட்டத்தில் மாநகர, ஒன்றிய, நகர பகுதியில் நடைபெறுகின்ற உள்ளாட்சித் தேர்தலில் நம் மக்கள் மன்றத்தைச் சேர்ந்த யாரும் போட்டியிடவோ, யாருக்கும் ஆதரவாக வாக்கு சேகரிக்கவோ கூடாது என்று தெரிவித்துக் கொள்கிறேன்.

மீறினால் சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்தப்படுவார்கள் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்”.

இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் மாநிலத்தலைமை அனைத்து மாவட்டச் செயலாளர்களுக்கும் இந்த அறிவுறுத்தலை வழங்கியுள்ளதாக தெரிகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x