

முகாம் சிறையிலுள்ள இலங்கைத் தமிழர்களை விடுக்கக் கோரி திருச்சி மத்திய சிறையை முற்றுகையிட்ட தமிழர் வாழ்வுரிமை கட்சியினர் 850 பேரை போலீஸார் கைது செய்தனர்.
தமிழகத்திலுள்ள முகாம் சிறைகளை மூட வேண்டும், அதிலுள்ள இலங்கை தமிழர்களை உடனே விடுதலை செய்ய வேண்டும் என வலியுறுத்தி தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் திருச்சி மத்திய சிறையை முற்றுகையிடும் போராட்டம் அறிவிக்கப்பட்டிருந்தது.
இதையொட்டி திருச்சி, கடலூர், பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து அக்கட்சித் தொண்டர்கள் நேற்று காலை திருச்சி மத்திய சிறை முன் திரண்டனர். ஏராளமான போலீஸார் அங்கு குவிக்கப் பட்டனர்.
பகல் 12 மணியளவில் அக்கட்சியின் தலைவர் தி.வேல்முருகன் தலைமையில் முன்னாள் எம்எல்ஏக்கள் காவேரி, காமராஜ், தென்மண்டல பொறுப்பாளர் தமிழ்நேசன் உட்பட 850 பேர் கொட்டப்பட்டியில் உள்ள அகதிகள் முகாம் அருகில் இருந்து புறப்பட்டு மத்திய சிறையை முற்றுகையிட ஊர்வலமாக வந்தனர். சிறை வாசலில் போலீஸார் அவர்களைத் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.
அப்போது தி.வேல்முருகன் செய்தியாளர்களிடம் கூறும் போது, “இலங்கையில் இனப்படுகொலை நடந்தபோது, ஏராளமான தமிழர்கள் இங்கு தப்பிவந்தனர். அவர்களில் பலரை முகாம் சிறைகளில் அடைத்து வைத்துள்ளனர். இவர்களை விடுவித்து, விரும்பும் நாடுகளுக்கு அனுப்பி வைக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக முதல்வரை விரைவில் சந்தித்து இதுபற்றி வலியுறுத்த உள்ளேன்” என்றார்.