Published : 10 Dec 2019 11:04 AM
Last Updated : 10 Dec 2019 11:04 AM

தனியார் நிறுவன வேலைவாய்ப்புகளில் 80% தமிழருக்கே வழங்கப்பட வேண்டும்: அன்புமணி

தமிழ்நாட்டில் தனியார் நிறுவன வேலைவாய்ப்புகளில் 80% தமிழருக்கே வழங்கப்பட வேண்டும் என, பாமக இளைஞரணி தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அன்புமணி இன்று (டிச.10) வெளியிட்ட அறிக்கையில், "கர்நாடக மாநிலத்தில் தனியார் நிறுவனங்கள் அனைத்தும் 'சி' மற்றும் 'டி' பிரிவு வேலைவாய்ப்புகளை முழுக்க, முழுக்க கன்னடர்களுக்கே வழங்க வேண்டும் என்று அம்மாநில அரசு ஆணையிட்டிருக்கிறது. உள்ளூர் மக்களின் வேலைவாய்ப்புக்கு உத்தரவாதம் அளிக்கும் நோக்கத்துடன் எடியூரப்பா தலைமையிலான கர்நாடக அரசு மேற்கொண்டுள்ள இந்த நடவடிக்கை மிகவும் வரவேற்கப்பட வேண்டிய ஒன்றாகும்.

கர்நாடக அரசு இதுதொடர்பாக வெளியிட்டுள்ள அறிவிக்கையில், கர்நாடக மாநில அரசிடமிருந்து சலுகைகளை பெறும் தனியார் நிறுவனங்கள் அனைத்தும் அதன் 'சி', 'டி' பிரிவு பணிகளில் முழுக்க, முழுக்க கன்னடர்களைத் தான் நியமிக்க வேண்டும் என்று கூறப்பட்டிருக்கிறது. அரசின் சலுகைகளை பெறாத தனியார் நிறுவனங்கள் அவற்றின் வேலைவாய்ப்புகளில் கன்னடர்களுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்றும் அறிவிக்கையில் கூறப்பட்டுள்ளது. அவ்வாறு வேலைவாய்ப்பு வழங்காத தனியார் நிறுவனங்கள் மீது கர்நாடக அரசு நடவடிக்கை எடுக்கவும் விதிகளில் வகை செய்யப்பட்டுள்ளது.

கர்நாடக அரசின் நடவடிக்கை பிராந்தியவாதத்தை வலுப்படுத்தும் செயல் போன்று தோன்றினாலும், இன்றைய சூழலில் உள்ளூர் மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க இத்தகைய நடவடிக்கைகள் தவிர்க்க முடியாததாகி விட்டன. அரசுத்துறை வேலைவாய்ப்புகளும், பொதுத்துறை வேலைவாய்ப்புகளும் அருகி விட்ட நிலையில், தனியார் துறை வேலைவாய்ப்புகளையாவது உள்ளூர் மக்களின் நலனுக்காக தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்ற சமூகநீதிப் பார்வையில் பார்க்கும் போது இது மிகச் சரியான நடவடிக்கையாகும். ஒட்டுமொத்த இந்தியாவும் இதே திசையில் தான் பயணிக்கத் தொடங்கியுள்ளது.

இந்தியாவின் உற்பத்தி மாநிலங்கள் என்றழைக்கப்படும் தொழில் வளம் மிக்க மாநிலங்களில் தமிழகம் தவிர்த்த பிற மாநிலங்களில் உள்ளூர் மக்கள் இட ஒதுக்கீட்டுக்கு வகை செய்யப்பட்டுள்ளது. ஆந்திரத்தில் தனியார் நிறுவன பணிகளில் 75% உள்ளூர் இடஒதுக்கீடு வழங்க சட்டம் இயற்றப்பட்டுள்ளது. தெலங்கானாவில் தனிச்சட்டம் எதுவும் இல்லை என்றாலும் ஐதராபாத் தவிர்த்த பிற பகுதிகளில் உள்ள தனியார் நிறுவனங்களில் உள்ளூர் மக்களுக்கு வேலை வழங்கினால் அரசு சலுகைகள் வழங்கப்படுகின்றன.

தெலங்கானா அரசு பணிகளில் 95% உள்ளூர் மக்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. குஜராத், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் 80% பணிகளும், ராஜஸ்தானில் 75% பணிகளும், மத்திய பிரதேசத்தில் 70% பணிகளும் உள்ளூர் மக்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. ராஜஸ்தானில் பொதுத்துறை-தனியார்துறை கூட்டு முயற்சி திட்டங்கள், சிறிய நிறுவனங்கள் ஆகியவற்றின் வேலைவாய்ப்புகளிலும் உள்ளூர் ஒதுக்கீடு உள்ளது.

தொழில்வளம் மிக்க மாநிலங்கள் அனைத்தும் அம்மாநிலத்தவரின் நலன்களை பாதுகாக்கும் வகையில் தனியார்துறை வேலைவாய்ப்புகளில் உள்ளூர் மக்களுக்கு இட ஒதுக்கீட்டை உறுதி செய்துள்ள நிலையில், சமூகநீதியின் தொட்டிலாக போற்றப்படும் தமிழகமும் உள்ளூர் மக்களுக்கு இத்தகைய சமூகப்பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டிய நேரம் வந்து விட்டது.

தனியார் பெருநிறுவன வேலைவாய்ப்புகளில் உள்ளூர் மக்களுக்கு தனி இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற தத்துவம் குறித்து இந்தியாவில் எந்த மாநிலமும் சிந்திக்காத காலத்திலேயே, அதற்காக குரல் கொடுத்தவர் பாமக நிறுவனர் ராமதாஸ். 21 ஆண்டுகளுக்கு முன் சென்னை மறைமலை நகரில் ஃபோர்டு கார் நிறுவனம் தொடங்கப்பட்ட போது, அதன் வேலைவாய்ப்புகள் அனைத்தும் உள்ளூர் மக்களுக்கே வழங்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தி 10 ஆயிரம் பேரைத் திரட்டி மாபெரும் போராட்டத்தை தமது தலைமையில் ராமதாஸ் நடத்தினார்.

உண்மையில் தனியார் நிறுவன வேலைவாய்ப்புகளில் உள்ளூர் மக்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க வேண்டிய தேவை மற்ற மாநிலங்களை விட தமிழகத்திற்கு தான் அதிகம் உள்ளது. ஏனெனில், சென்னை, கோவை, திருப்பூர் உள்ளிட்ட நகரங்களிலும், அவற்றையொட்டிய பகுதிகளிலும் அமைந்துள்ள பெரு நிறுவனங்களின் வேலைவாய்ப்புகளை பிற மாநிலத்தவர்கள் தமிழர்களிடமிருந்து தட்டிப்பறித்து விட்டனர்.

தமிழகத்தில் பிற மாநிலத்தவரின் படையெடுப்பாலும், பிற மாநிலங்களில் தமிழர்களின் வேலைவாய்ப்புக்கு விதிக்கப்பட்டுள்ள தடையாலும் தமிழ்நாட்டில் தமிழர்களின் வேலைவாய்ப்பை உறுதி செய்வதற்காக தனியார் வேலைவாய்ப்புகளில் தமிழ்நாட்டை சேர்ந்தவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்பட்டாக வேண்டும்.

தனியார் வேலைவாய்ப்புகளில் உள்ளூர் மக்களுக்கு இடஒதுக்கீடு என்ற வாக்குறுதியை 2016 சட்டப்பேரவை தேர்தல் மற்றும் 2019 மக்களவை தேர்தலுக்கான தேர்தல் அறிக்கைகளில் பாமக அளித்துள்ளது. தமிழகத்தில் சமூக நீதியையும், சமூகப்பாதுகாப்பையும் உறுதி செய்ய இது மிகவும் அவசியம் என்பதால், தமிழகத்திலுள்ள தனியார் நிறுவன வேலைவாய்ப்புகளில் 80% தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களுக்கே வழங்கப்பட வேண்டும் என்று சட்டம் இயற்ற தமிழக அரசு முன்வர வேண்டும்" என அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x