Last Updated : 10 Dec, 2019 10:53 AM

 

Published : 10 Dec 2019 10:53 AM
Last Updated : 10 Dec 2019 10:53 AM

நலிவடையும் மண்பாண்டத் தொழில் அகல் விளக்குகளுக்கு பின்னால் இருண்ட வாழ்க்கை: நல வாரியம் மூலம் ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டுகோள்

கார்த்திகை தீபத் திருநாளை முன்னிட்டு திருப்பூரில் அகல் விளக்குகள் விற்பனை நேற்று மும்முரமாக நடைபெற்றது. பண்டிகை கால விற்பனை ஒருபுறமிருக்க தொழில் நலிவு காரணமாக பரம்பரையாக மண்பாண்டங்கள் உற்பத்தி மற்றும் விற்பனையில் ஈடுபட்டுவருவோரின் எண்ணிக்கை நாளுக்குநாள் குறைந்து வருகிறது. இதனால் தொழிலை பாதுகாக்க நல வாரியம் மூலமாக ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கை முன் வைக்கப்படுகிறது.

கார்த்திகை தீபத் திருநாளில் சிவன் கோயில்களில் தீபம் ஏற்றி வழிபட்டால், அண்ணாமலையாரின் ஜோதி தரிசனம் கண்ட பலன் ஏற்படும் என்பது ஐதீகம். நடப்பாண்டில் இன்று (டிச. 10) கார்த்திகை தீபத் திருநாள் கொண்டாடப்படுகிறது.

பண்டிகையை முன்னிட்டு அகல் விளக்குகளின் விற்பனை திருப்பூரில் மும்முரமாக நடைபெற்றது. மாநகரில் தாராபுரம் சாலை, பல்லடம் சாலை, அவிநாசி சாலை உள்ளிட்ட பகுதிகளில் 80-க்கும் மேற்பட்ட வியாபாரிகள் சாலையோரங்களில் கடைகளை வைத்து, களிமண்ணால் செய்யப்பட்ட வண்ணமயமான அகல் விளக்குகளை பல்வேறு வடிவங்களில் விற்பனை செய்து வருகின்றனர். ரூ.1 முதல் அகல் விளக்குகள் விற்பனைக்குக் கிடைக்கின்றன.

பல்வேறு கலைநயமிக்க வேலைப்பாடுகள் கொண்ட அகல் விளக்குகள் ரூ.150, ரூ.200 போன்ற விலைகளில் விற்கப்படுகின்றன.

தொழிலாளர்களின் துயரம்

திருப்பூர் மாவட்டத்தைப் பொறுத்தவரை ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் பாரம்பரியமாக மண்பாண்டப் பொருட்கள் உற்பத்தி தொழிலில் ஈடுபட்டுவந்தனர். ஆனால் சமீப ஆண்டுகளாக சொற்ப எண்ணிக்கையினரே இத்தொழிலில் ஈடுபட்டுள்ளனர். மற்றவர்களை திருப்பூரின் பின்னலாடைத் தொழில் தன்னகத்தே இழுத்துக் கொண்டுவிட்டது.

இத்தொழில் நலிவடைந்து வருவதற்கு பல்வேறு காரணங்கள் தெரிவிக்கப்படுகின்றன. இதுகுறித்து மண்பாண்டத் தொழிலில் தலைமுறைகள் கடந்து ஈடுபட்டுள்ள நாச்சம்மாள் ‘இந்து தமிழ்’ நாளிதழிடம் கூறியதாவது:கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்புவரை திருப்பூர் மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் மண் எடுத்து மண்பாண்டங்கள் தயாரித்து வந்தோம். ஆனால் மண் எடுக்க அந்தந்த பகுதி மக்களிடம் எதிர்ப்பு கிளம்பியது, அதிகாரிகளிடம் அனுமதி கிடைப்பதில் இழுபறி போன்ற காரணங்களால் மண் கிடைக்காமல் பலரும் இத்தொழிலில் ஈடுபடுவதில்லை. ஆனால் எங்களால் பரம்பரை தொழிலை விட முடியாது. மதுரை, புதுச்சேரி, தருமபுரி, கோவை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து மண்பாண்டங்களை மொத்தமாக வாங்கி வந்து விற்பனை செய்து வருகிறோம்.

நான்கு மாதங்களுக்கு ஒருமுறை ரூ.70 ஆயிரம் முதல் ரூ.80 ஆயிரம் வரை கொடுத்து மண்பாண்டப் பொருட்களை வாங்கி இருப்பில் வைத்து விற்பனை செய்து வருகிறோம். இத்தொழிலில் ஒரு ரூபாய்க்கு 20 பைசா லாபம் கிடைக்கும். பொங்கல் மற்றும் கார்த்திகை தீப நாட்களில் மட்டுமே அதிக அளவில் விற்பனை நடைபெறும்.

பெரும்பான்மையான மக்கள் சிமெண்ட் பொருட்கள், பிளாஸ்டிக், சில்வர் போன்ற மாற்றுத் தயாரிப்புகளுக்கு மாறிவிட்டதால் நாளுக்கு நாள் தொழில் நலிவடைந்து வருகிறது. இத்தொழில் தெரிந்த பலரும் வருமானம் குறைவால், பின்னலாடைத் தொழிலுக்கு சென்றுவிட்டனர். எங்களது குடும்பம் 4 தலைமுறைகளாக இதே தொழிலை செய்துவருகிறோம்.

தமிழ்நாடு மண்பாண்டத் தொழிலாளர் நல வாரியத்தின் உறுப்பினர் அட்டைகள் இருந்தும் உரிய நலத் திட்ட உதவிகள், ஊக்கச் சலுகைகள் சரியாக கிடைப்பதில்லை. நல வாரியம் இருந்தும் எந்தப் பயனுமில்லை. வெளிச்சம் தரும் அகல் விளக்குகளை தயாரிக்கும் எங்கள் வாழ்க்கை இருண்டதாகத்தான் உள்ளது. எங்களது தொழிலை ஊக்குவிக்க வட்டியில்லா கடன், உதவித்தொகை சரியாக கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

விழிப்புணர்வு

அதே பகுதியில் மண்பாண்டத் தொழிலில் ஈடுபட்டுள்ள இளைஞர் லோகநாதன் கூறும்போது, ‘நாகரிக மாற்றத்துக்கு ஏற்ப மக்களும் மாற்றுப் பொருட்களுக்கு மாறியதால் வருமானம் குறைந்து பலர் மாற்று தொழிலை நாடிச் சென்று விட்டனர். ஆனால் சமீப நாட்களாக மக்களிடம் மண்பாண்டங்களில் உணவு சமைப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. இதனால் சமைப்பதற்கு பயன்படுத்தப்படும் மண்பாண்டங்களின் விற்பனை சற்றே அதிகரித்துள்ளது. இது இன்னும் அதிகரிக்க வேண்டும். ஆரோக்கிய வாழ்வு குறித்த விழிப்புணர்வு மக்களிடம் ஓங்க வேண்டும். அரசும் கலைநயமிக்க இத்தொழிலைப் பாதுகாக்க நல வாரியம் மூலமாக ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x