நித்யானந்தா போன்று தீவு வாங்கி ஸ்டாலின் முதல்வராகட்டும்: அமைச்சர் ஜெயக்குமார் கிண்டல்

மு.க.ஸ்டாலின் - அமைச்சர் ஜெயக்குமார்: கோப்புப்படம்
மு.க.ஸ்டாலின் - அமைச்சர் ஜெயக்குமார்: கோப்புப்படம்
Updated on
1 min read

நித்யானந்தா போன்று தீவு வாங்கி, ஸ்டாலின் அங்கு தன்னை முதல்வராக நியமித்துக்கொள்ளட்டும் என, மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

சென்னையில் இன்று (டிச.10) செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், "பகுத்தறிவு கொள்கையில் ஊறிய திமுக தலைவர் ஸ்டாலின், அறிவாலயத்தை விட்டு, ஃபைவ்ஸ்டார் உணவகத்தில் மீட்டிங் நடத்துகிறார். உள்ளாட்சி தேர்தலை வரவேற்கிறோம் என சொல்லிவிட்டு, அதே சமயத்தில் நீதிமன்றத்திற்கு செல்வோம் என மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம் இயற்றியிருக்கின்றனர்.

இதிலிருந்து திமுக மக்களை ஏமாற்றுவது தெரிகிறது. எப்படி இருந்த திமுக இப்படியாகிவிட்டதே? அக்கட்சி இப்படியாகிவிட்டது பெரிய கவலையாக இருக்கிறது.

இவ்வளவு குழப்பத்துக்கும் ஸ்டாலினின் முதல்வர் கனவுதான் காரணம். யாரெல்லாம் முதல்வராக வேண்டும் என நினைக்கிறார்களோ, அவர்கள் நித்யானந்தா போன்று ஈக்வெடார் மாதிரியான தீவை வாங்கி, அங்கு தன்னை முதல்வராக நியமித்துக்கொள்ளட்டும்.

அதில் எங்களுக்கு ஆட்சேபனையில்லை. அதிலும், ஸ்டாலினிடம் உள்ள பணத்தில் கண்டிப்பாக தீவு வாங்கி, அங்கு முதல்வராகி விடலாம். தமிழ்நாட்டில் முதல்வராவது நிச்சயமாக முடியாது. அது, அதிமுகவால் மட்டும் தான் முடியும்" என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in