Published : 10 Dec 2019 10:34 AM
Last Updated : 10 Dec 2019 10:34 AM

புதிய செங்கல்பட்டு மாவட்டத்துக்கு மக்கள் எதிர்பார்த்தபடி முக்கிய திட்டங்களை முதல்வர் அறிவிக்காததால் ஏமாற்றம்

புதிய செங்கல்பட்டு மாவட்டத்துக்குவரவேற்பு தெரிவித்த பொதுமக்கள்,எதிர்பார்த்த முக்கிய திட்டங்களைமுதல்வர் அறிவிக்காததால் ஏமாற்றமடைந்துள்ளனர்.

நிர்வாக வசதிக்காக காஞ்சிபுரம் மாவட்டத்தை இரண்டாக பிரித்து, தமிழகத்தின் 37-வது மாவட்டமாக செங்கல்பட்டு உதயமானது. கடந்த 29-ம் தேதி முதல்வர் பழனிசாமி புதிய மாவட்டத்தை முறைப்படி தொடங்கி வைத்தார். தொடர்ந்து வருவாய் துறை, ஊரகவளர்ச்சித் துறை உள்ளிட்ட துறைகளின் சார்பில், செங்கல்பட்டு மாவட்டத்துக்காக செயல்படுத்தப்பட உள்ள ரூ.128 கோடி மதிப்பிலான, 213 புதிய பணிகளுக்கு முதல்வர் அடிக்கல் நாட்டினார்.

அறிவிக்கப்பட்ட திட்டங்கள்அப்போது மதுராந்தகம் வட்டம், இரும்புலிச்சேரி கிராமத்துக்கு அருகே பாலாற்றின் குறுக்கே ரூ.40 கோடியில் தடுப்பணை. திருப்போரூர் வட்டம், பஞ்சன்திருத்தி கிராமத்துக்கு அருகே மானாமதி மடுவின் குறுக்கே ரூ.5 கோடியில் தடுப்பணை. திருப்போரூர் வட்டம், பண்டிதமேடு கிராமத்துக்கு அருகே மானாமதி மடுவின் குறுக்கே ரூ.5 கோடியில் மற்றொரு தடுப்பணை. மதுராந்தகம் வட்டம், செம்பூண்டி கிராமம் அருகே கிளியாற்றின் குறுக்கே ரூ.4.5 கோடியில் தடுப்பணை.

மாமல்லபுரத்தில் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல், மத்திய அரசின் துணையுடன் ஏற்கெனவே உள்ள வசதிகளை நவீனப்படுத்துதல், ரூ.50 கட்டணத்தில் பேருந்து வசதி. முருகமங்களம் கிராமத்தில் ரூ.151 கோடியில் 1260 அடுக்குமாடிக் குடியிருப்புகள் அமைத்தல். அதேபோல் கீரப்பாக்கம் கிராமத்தில் ரூ.157 கோடியில் 1760 அடுக்குமாடிக் குடியிருப்புகள் கட்டுவது போன்ற அறிவிப்புகளை முதல்வர் விழாவில் அறிவித்தார். ஆனால், எதிர்பார்த்த முக்கிய திட்டங்களை முதல்வர்அறிவிக்கவில்லை என்பதால் பெருத்த ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

மக்களின் எதிர்பார்ப்புகள்

இதுகுறித்து செங்கல்பட்டு மாவட்டத்தை சேர்ந்த மக்கள் கூறியதாவது:செங்கல்பட்டு புதிய மாவட்டத்தை உருவாக்கியதன் மூலம் 25 ஆண்டுக்கால கோரிக்கை நிறைவேறியதில் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளோம். ஆனால், மாவட்டத்தில் வரலாற்று சின்னங்களை பாதுகாத்தல் உள்ளிட்ட பல்வேறு புதிய முக்கிய திட்டங்கள் அறிவிக்கப்படாதது பெருத்த ஏமாற்றத்தை அளித்துள்ளது. செங்கல்பட்டு நகரை சுற்றியுள்ள ஊராட்சிகளை ஒருங்கிணைத்து, பெருநகராட்சியாக மாற்றும் திட்டம் ௭துவும் அறிவிக்கப்படவில்லை.

மேலும் செங்கல்பட்டு நகரில், 16-ம் நூற்றாண்டில் விஜயநகர பேரரசால் கட்டப்பட்ட கோட்டை சீரமைப்பு குறித்த அறிவிப்பு ௭துவும் இல்லை. சுற்றுலாப் பயணிகள் ௮திகமாக வந்து செல்லும்கோவளம் கடற்கரை பகுதியைசுற்றுலா தலமாக அறிவிக்கவில்லை. பல ஆண்டுகளாக தூர்வாரப்படாத மதுராந்தகம் ஏரி குறித்த அறிவிப்பும் இல்லை. மதுராந்தகம் நகராட்சிக்கு பாதாள சாக்கடை திட்டம், செய்யூரில் உள்ள அரசுமருத்துவமனையை தரம் உயர்த்துவது, மதுராந்தகம், செய்யூர் பகுதிகளில் உள்ள விவசாயிகளின் வேளாண் பொருட்களை பாதுகாக்க கிடங்கு அமைப்பது போன்ற பயனுள்ள அறிவிப்புகள் ௭துவும் அறிவிக்கப்படவில்லை.

மேலும், தென் மாவட்டங்களுக்கு செல்லும் பேருந்துகள் செங்கல்பட்டில் நிற்பதில்லை. தென் மாவட்டங்களுக்குச் செல்லும் பேருந்துகள் செங்கல்பட்டு நகருக்குள் வந்து செல்ல வேண்டும் என்பது அனைத்துத் தரப்பினரின் நீண்டகால எதிர்பார்ப்பாக உள்ளது.

மேலும், திருப்போரூர், கேளம்பாக்கம், மானாம்பதி, காயார், தாழம்பூர் ஆகிய காவல் நிலையங்களை ஒருங்கிணைத்து புதிய போலீஸ் டிஎஸ்பி அலுவலகம் அமைக்க வேண்டும். இந்த காவல் நிலையங்களுக்கு திருப்போரூரில் குற்றவியல் மற்றும் உரிமையியல் நீதிமன்றங்கள் அமைக்க வேண்டும் என நீண்ட காலமாக கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.

௮திமுக்கியமாக செங்கல்பட்டு, தாம்பரம், பல்லாவரம், மதுராந்தகம் பகுதிகளில் நிலவும் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணதிட்டமில்லை. அதேபோல் திருப்போரூரில் தீயணைப்பு பயிற்சிஅகாடமி அமைக்க இடம் ஒதுக்கப்பட்டு, பயன்படுத்தப்படாமல் உள்ளது. இதில் புதிய பயிற்சி நிலையம் மற்றும் தீயணைப்பு நிலையம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையும் உள்ளது.

இது போன்ற முக்கிய அறிவிப்புகள் ௭துவும் முதல்வர் வெளியிடாததால், பொதுமக்கள் ஏமாற்றமடைந்துள்ளனர். மேலும், வரும் நாட்களிலாவது இந்த முக்கிய அறிவிப்புகளை முதல்வர் வெளியிட வேண்டும் என மக்கள் தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x