Published : 10 Dec 2019 09:39 AM
Last Updated : 10 Dec 2019 09:39 AM

சிபிஎஸ்இ-யில் பிளஸ்-1 முடித்தவர்கள் மாநில பாட திட்டத்தில் பிளஸ்-2 எழுதலாமா? - விதிமுறைகளை விளக்கி அரசாணை வெளியீடு

கோப்புப்படம்

சென்னை

சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் பிளஸ்-1 தேர்ச்சி பெற்ற மாணவர்கள், பிளஸ்-2 பொதுத்தேர்வை மாநில பாடத்திட்டத்தில் எழுத அனுமதிப்பதற்கான விதிமுறைகளை விளக்கி பள்ளிக் கல்வித் துறை அரசாணை வெளியிட்டுள்ளது.

இதுதொடர்பாக தமிழக பள்ளிக் கல்வித் துறை செயலாளர் பிரதீப் யாதவ் வெளியிட்டுள்ள அரசாணை யில் கூறியிருப்பதாவது:

அரசுத் தேர்வுகள் இயக்குநர் கடந்த அக்டோபர் 29, நவம்பர் 26 ஆகிய தேதிகளில் தமிழக அரசுக்கு கடிதம் எழுதியிருந்தார்.

‘தமிழக பாடத்திட்டம், சிபிஎஸ்இ, வேறு மாநில பாடத் திட்டம் ஆகியவற்றில் பிளஸ்-1 தேர்ச்சி பெற்ற 12 மாணவர்கள் குடும்பச் சூழல், பெற்றோர் பணியிட மாறுதல் போன்ற காரணங் களால் பிளஸ்-2 படிப்பை அதே பாடத்திட்டத்தில் தொடர முடியா மல், தமிழக மாநில பாடத்திட்டத்தில் பிளஸ்-2 படித்து வருகின்றனர்.

அவர்களை பிளஸ்-2 பொதுத் தேர்வு எழுத அனுமதிக்குமாறு முதன்மை கல்வி அலுவலர்கள் பரிந்துரைத்துள்ளனர். தற்போது நடத்தப்படும் பிளஸ்-1 பொதுத் தேர்வை எழுதுமாறு கூறினால், அவர்கள் மிகுந்த மன அழுத்தத் துக்கு ஆளாவார்கள் என்பதால், அவர்களது நலன் கருதி, பிளஸ்-2 பொதுத்தேர்வை மட்டும் எழுத அனுமதிக்க வேண்டும்’ என்று அதில் கோரியிருந்தார்.

இதையடுத்து, இதை ஒரு சிறப்பு நிகழ்வாக கருதி பிளஸ்-1 பொதுத்தேர்வை மீண்டும் எழுதுவ தில் இருந்து விலக்கு அளித்து, விதிமுறைகளை பின்பற்றி இந்த மாணவர்களுக்கு தமிழக பாடத் திட்டத்தில் பிளஸ்-2 தேர்வு எழுத அனுமதி வழங்கப்படுகிறது.

இவர்கள் சிபிஎஸ்இ அல்லது வேறு மாநில பாடத்திட்டத்தில் பிளஸ்-1 தேர்ச்சி பெற்று தற்போது பள்ளிகளில் சேர்ந்து பிளஸ்-2 பயின்று வரும் நிலை யில், பிளஸ்-1 பயின்ற பாடத் தொகுப்புக்கு இணையான பாடத் தொகுப்பில் நேரடியாக பிளஸ்-2 பொதுத்தேர்வு எழுதலாம்.

2017-18 கல்வியாண்டுக்கு முன்பு தமிழக பாடத்திட்டத்தில் பிளஸ்-1 தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றவர்கள், அதே பாடத்தொகுப்பில் பிளஸ்-2 பொதுத்தேர்வு எழுதலாம். இந்த மாணவர்கள் பிளஸ்-2 பொதுத் தேர்வில் பெறும் மதிப்பெண்களை மட்டும் பதிவு செய்து மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும்.

நேரடி தனித் தேர்வர்களாக மேல்நிலை தேர்வு எழுதுபவர்கள், பிளஸ்-1 பொதுத்தேர்வு எழுதிய பிறகே பிளஸ்-2 தேர்வு எழுத அனுமதிக்கப்படுவார்கள். தனித் தேர்வர்களுக்கு இந்தச் சலுகை பொருந்தாது.

மேலும், வருங்காலங்களில் பிளஸ்-1 பொதுத்தேர்வாக எழு தாமல் சிபிஎஸ்இ அல்லது வேறு மாநில பாடத்திட்டம் சார்ந்த பள்ளிகளில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் பிளஸ்- 2 கல்வியை தொடர பள்ளிகளில் அனுமதிக்கும் முன்பு கண்டிப்பாக பள்ளிக் கல்வி இயக்ககத்திடம் முன் அனுமதி பெற வேண்டும். இதை அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் பள்ளிக் கல்வி இயக்குநர் அறிவுறுத்த வேண்டும். இவ்வாறு அரசாணையில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x