Published : 25 Aug 2015 08:13 PM
Last Updated : 25 Aug 2015 08:13 PM

தமிழக முதல்வருக்கு சென்னை மருத்துவ கல்லூரி நன்றி

சென்னை அரசு பொது மருத்துவமனைக்கு ரூ.25 கோடியில் புதிய இயந்திரம், ரூ.6 கோடியில் செவிலியர் குடியிருப்புகள் உள்ளிட்ட திட்டங்களை சட்டமன்றத்தில் அறிவித்ததற்காக தமிழக முதல்வருக்கு சென்னை மருத்துவக் கல்லூரி, பல் மருத்துவக் கல்லூரி, அரசு செவிலியர் கல்லூரியின் மாணவர்கள் மற்றும் மருத்துவர்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.

இது குறித்து சென்னை மருத்துவக் கல்லூரி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்திருப்பதாவது: தமிழக சட்டமன்றத்தில் முதல்வர் ஜெயலலிதா, சென்னை அரசு பொது மருத்துவமனைக்கு ரூ.25 கோடியில் புற்றுநோய் இமேஜிங் வசதி மற்றும் ரூ.5 கோடியில் முட நீக்கியல் சிகிச்சை மையத்துக்கு சிறப்பு வசதி, குழந்தைகள் நல மருத்துவமனையில் மரபியல் காரணங்களால் ஏற்படும் நோயை கண்டறிய ரூ.10 கோடியில் உயர்தர ஆய்வகம், அனைத்து மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளுக்கும் ரூ.2.50 கோடி செலவில் மின்கல ஊர்திகள், ரூ.6 கோடி செலவில் செவிலியர் குடியிருப்புகள், புதுக்கோட்டையில் புதிய மருத்துவக் கல்லூரி, தென் தமிழகத்தில் புதிய பல் மருத்துவக் கல்லூரி ஆகியவற்றையும், அம்மா முழு உடல் பரிசோதனைத் திட்டம், அம்மா சிறப்பு மகளிர் முழு உடல் பரிசோதனைத் திட்டம், அம்மா ஆரோக்கியத் திட்டம், அம்மா மகப்பேறு சஞ்சீவினி திட்டம் ஆகிய திட்டங்களை அறிவித்துள்ளார்.

இதற்காக தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்து சென்னை மருத்துவக் கல்லூரி முதல்வர் டாக்டர்.ஆர்.விமலா தலைமையில் உள்ளிருப்பு மருத்துவ அலுவலர்கள் டாக்டர். இளங்கோ, டாக்டர்.ஷீலா, டாக்டர்.ரகுநாதன், டாக்டர் நாராயணன் மற்றும் புற்றுநோய் சிகிச்சை துறை தலைவர், மாணவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து பொது மக்களுக்கும், நோயாளிகளுக்கும் இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.

இதே போன்று அரசு பல் மருத்துவக் கல்லூரியில் முதல்வர் டாக்டர்.சரவணன் தலைமையில் துணை முதல்வர் டாக்டர்.ஸ்ரீமதி, நிர்வாக அலுவலர் சந்திரவதனி, அரசு செவிலியர் கல்லூரியில் மருத்துவக் கல்வி இயக்குநர் டாக்டர்.கீதாலட்சுமி தலைமையில் கூடுதல் இயக்குநர் டாக்டர். லட்சுமி மற்றும் மாணவர்கள் முதல்வருக்கு நன்றி தெரிவித்து இனிப்பு வழங்கி கொண்டாடினர் என்று அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.





FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x