

பூலித்தேவனின் தளபதியாக இருந்த வெண்ணி காலாடிக்கு சிலையுடன் நினைவு மண்டபம் அமைக்கக்கோரி தாக்கலான மனுவுக்கு உள்துறை செயலர் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழக விடுதலை கழகத்தின் தலைவர் வழக்கறிஞர் பி.ராஜ்குமார், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனுவில்:
ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் தென்காசி மாவட்டம் நெற்கட்டும்சேவலை தலைமையிடமாகக் கொண்ட பாளையத்தை ஆட்சி செய்தவர் பூலித்தேவன். இவர் தனி ராணுவப்படையை வைத்திருந்தார். இவரது ராணுவத் தளபதியாக இருந்தவர் தேவேந்திர குல வேளாளர் சமூகத்தை சேர்ந்த வெண்ணி காலாடி.
பூலித்தேவன் படைக்கு வெண்ணி காலாடி தலைமை கமாண்டராக பணிபுரிந்தார். நெற்கட்டும்செவலில் 1759-ல் கான்சாகிப் என்ற மருதநாயகம் தலைமையிலும் பிரிட்டிஷ் ராணுவத்துக்கும், பூலித்தேவன் ராணுவத்துக்கும் இடையே போர் நடைபெற்றது. இந்தப் போரில் பூலித்தேவன் ராணுவத்தை வழிநடத்தியவர் வெண்ணிகாலாடி. இப்போரில் பூலித்தேவன் பெற்றிப்பெற்றார். கான்சாகிப் படைகள் தோற்று ஓடின. ஆனால் போரில் குடல் சரிந்து வெண்ணிகாலாடி உயிரிழந்தார்.
வெண்ணிகாலாடி உயிரிழந்த இடத்தில் அவர் நினைவாக பூலித்தேவனால் கல் நடப்பட்டது. அந்த இடம் தற்போது காலாடிமேடு என்றழைக்கப்படுகிறது.
சுதந்திர போராட்ட தியாகியான வெண்ணிகாலாடியின் தியாகத்தைப் போற்றும் வகையில் அவருக்கு சிலையுடன் மணிமண்டபம் கட்டவும், வெண்ணிகாலாடி நினைவு நாள் அரசு விழாவாக நடத்தவும் அரசுக்கு 25.11.2019-ல் மனு அனுப்பினோம். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
எனவே வாசுதேவநல்லூரில் சுதந்திர போராட்ட தியாகி வெண்ணிகாலாடிக்கு சிலை மற்றும் நினைவு மண்டபம் கட்டவும், அவரது நினைவு நாள் விழாவை அரசு சார்பில் அனுஷ்டிக்கவும் உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதிகள் துரைசாமி, கிருஷ்ணவள்ளி அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. மனு தொடர்பாக தமிழக உள்துறை செயலர் பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை 8 வாரத்துக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.