

மஸ்கட் நாட்டில் தவிக்கும் தொழிலாளிகளை மீட்கக் கோரி ஆட்சியர்களிடம் உறவினர்கள் இன்று (திங்கள்) மனு அளித்தனர்.
தென்காவி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் எதிரில் உள்ள சுப்பராஜா திருமண மண்டபத்தில் மக்கள் குறைதீர் கூட்டம் இன்று (திங்கள்கிழமை) நடைபெற்றது.
கூட்டத்துக்கு, ஆட்சியர் அருண் சுந்தர் தயாளன் தலைமை வகித்து பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார். கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் கல்பனா, தென்காசி வருவாய் கோட்டாட்சியர் பழனிகுமார் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
வெளிநாடு வாழ் தமிழர்கள் நலச்சங்க நிர்வாகி சேக் இப்ராகிம் ஆட்சியரிடம் அளித்துள்ள மனுவில், “சங்கரன்கோவில் தாலுகா மலையங்குளத்தைச் சேர்ந்த கந்தசாமி, சொக்கம்பட்டியைச் சேர்ந்த பூலித்துரை (29) ஆகியோர் கடந்த 2018-ம் ஆண்டு தனியார் ஏஜென்ட் மூலம் மஸ்கட் நாட்டில் எலெக்ட்ரிக்கல் கம்பெனிக்கு வேலைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.
அங்கு கடுமையான வேலையைச் செய்ய முடியாமல் தவித்துள்ளனர். இதனால், கடந்த 3 மாதங்களுக்கு முன்பு அந்த 2 பேரையும் தாக்கி, வேலையை விட்டு நீக்கிவிட்டனர். பாஸ்போர்ட் மற்றும் சம்பள பணத்தை கொடுக்கவில்லை.
இதனால், தாயகம் திரும்பி வர முடியாமல் அவர்கள் தவிக்கின்றனர். ஏழை குடும்பத்தைச் சேர்ந்த 2 பேரையும் மீட்க உதவ வேண்டும்” என்று கூறியுள்ளார்.
கந்தசாமியை மீட்க உதவ வேண்டும் என்று அவரது தாயார் கிருஷ்ணவேணி, சகோதரிகள் வசந்தா, செல்வி ஆகியோரும் ஆட்சியரிடம் கண்ணீர் மல்க வேண்டுகோள் விடுத்தனர்.