Published : 09 Dec 2019 03:01 PM
Last Updated : 09 Dec 2019 03:01 PM

எகிப்திலிருந்து 2 கண்டெய்னர்கள் வருகை: திண்டுக்கல்லில் பெரிய வெங்காயம் விலை கிலோ ரூ.110-ஆக குறைந்தது; சின்ன வெங்காயம் விலை குறைய வாய்ப்பில்லை

திண்டுக்கல்

எகிப்து, நைஜீரியா, துருக்கி ஆகிய நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட பெரிய வெங்காயம் வரத்தால் திண்டுக்கல்லில் பெரிய வெங்காயம் விலை ஒரு கிலோவிற்கு ரூ.50 வரை குறைந்துள்ளது. இதனால் திண்டுக்கல்லில் சில்லறை வியாபாரிகளுக்கு பெரிய வெங்காயம் கிலோ ரூ.110-க்கு விற்பனையானது. ஆனால் சின்னவெங்காயம் தொடர் தட்டுப்பாட்டால் விலையில் மாற்றமின்றி உயர்ந்தே காணப்படுகிறது.

தமிழகத்தில் உள்ள வெங்காய சந்தைளில் மிகப்பெரிய சந்தையான திண்டுக்கல் வெங்காய மார்க்கெட் வாரத்தில் திங்கள், புதன், வெள்ளிக் கிழமைகளில் செயல்படுகிறது. இங்கு மார்க்கெட் செயல்படும் நாட்களில் பெரிய வெங்காயம் ஒரு நாளைக்கு 200 டன் வீதம் கர்நாடகா, மகாராஷ்டிரா மாநிங்களில் இருந்து லாரிகளில் விற்பனைக்கு கொண்டுவரப்படும்.

சின்னவெங்காயம் தமிழகத்தின் அரியலூர், திருச்சி, திண்டுக்கல், கரூர், தேனி மற்றும் தென்மாவட்டங்களில் இருந்து ஒரு நாளைக்கு 40 டன் விற்பனைக்கு வரும். ஆனால் தற்போது ஒரு டன் வெங்காயமே மார்க்கெட்டிற்கு வரத்து உள்ளது. இந்நிலையில் வடமாநிலங்களில் வெள்ளசேதம் காரணமாக பெரியவெங்காயம் விலை படிப்படியாக உயர்ந்தது. ஒரு கட்டத்தில் சின்ன வெங்காயத்தின் விலையையும் கடந்து பெரியவெங்காயம் விலை அதிகரித்தது. தற்போது பெரியவெங்காயம் ஒரு கிலோ ரூ.150 முதல் 160 வரை விற்பனையாகிறது.

பெரியவெங்காயம் விலையை குறைக்க ஏதுவாக வெளிநாடுகளில் இருந்து வெங்காயம் இறக்குமதி செய்ய இந்திய அரசு முடிவு செய்தது. இதன்படி பெரியவெங்காயம் எகிப்து, நைஜீரியா, துருக்கி ஆகிய நாடுகளில் கொள்முதல் செய்யப்பட்டு கப்பல்களில் ஏற்றபட்டு கடந்த சில தினங்களுக்கு முன்பு தூத்துக்குடி துறைமுகத்திற்கு வந்து சேர்ந்தது. அங்கிருந்து தமிழகத்தின் பல பகுதிகளுக்கு பெரியவெங்காயம் கண்டெய்னர்களில் அனுப்பிவைக்கப்பட்டது.

திண்டுக்கல்லுக்கு இன்று இரண்டு கண்டெய்னர் பெரியவெங்காயம் வெங்காய மார்க்கெட்டிற்கு கொண்டுவரப்பட்டது. இங்கிருந்து சில்லறை விற்பனைக்கு வியாபாரிகள் வாங்கிச்சென்றனர்.

பெரியவெங்காயம் வரத்தால் இன்று ஒரே நாளில் கிலோவிற்கு ரூ.50 குறைந்து ஒரு கிலோ பெரியவெங்காயம் ரூ.110 க்கு விற்பனையானது.
வெளிநாட்டு வெங்காயம் பார்ப்பதற்கு நம்நாட்டில் விளைவிக்கப்படும் வெங்காயங்களை போல் அல்லாமல் அடர்சிவப்பு நிறத்தில் உள்ளது.

திண்டுக்கல் வெங்காயம் மார்க்கெட் கமிஷன் கடையை சேர்ந்த லட்சுமணன் கூறியதாவது:

வெளிநாடுகளில் இருந்து பெரியவெங்காயம் தொடர்ந்து இறக்குமதி செய்யப்படும் என்பதால் வரத்து அதிகரித்து விலை படிப்படியாக குறைந்து பொங்கலுக்குள் ஒரு கிலோ பெரியவெங்காயம் ரூ.50 க்குள் விற்க வாய்ப்புள்ளது.

அதே நேரத்தில் சின்னவெங்காயம் நம்நாட்டில் தான் விளைவிக்கப்படுகிறது. எனவே இதை இறக்குமதி செய்யவாய்ப்பில்லை. திண்டுக்கல் மார்க்கெட்டிற்கு வழக்கமாக ஒரு நாளைக்கு 40 டன் சின்னவெங்காயம் வரத்து இருக்கும். ஆனால் தற்போது ஒரு டன் வெங்காயம் மட்டுமே விற்பனைக்கு வருகிறது.

வெங்காயம் எங்கும் கிடைக்கவில்லை. இதனால் சின்னவெங்காயம் விலை குறைவு என்பது தற்போதைக்கு சாத்தியமில்லை என்றே தெரிகிறது, என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x