Published : 09 Dec 2019 02:31 PM
Last Updated : 09 Dec 2019 02:31 PM

பொருளாதார வீழ்ச்சி, விலையேற்றத்தை சரி செய்ய முயலவில்லை; மக்களைத் திசை திருப்பவே குடியுரிமை திருத்த மசோதா: கே.எஸ்.அழகிரி விமர்சனம்

சட்டத் திருத்தம் உச்ச நீதிமன்றத்தின் ஆய்வுக்கு உட்பட்டு செல்லாத நிலை ஏற்பட நிறைய வாய்ப்பு இருக்கிறது. ஆனால், மதரீதியாக மக்களைத் திரட்டுகிற மதவாத அரசியலுக்கு குடியுரிமை திருத்த மசோதாவை பாஜக பயன்படுத்துகிறது. இலங்கைத் தமிழருக்கு இது மறுக்கப்படுவது கண்டிக்கத்தக்கது என தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி குற்றம் சாட்டியுள்ளார்.

இதுகுறித்து காங்கிரஸ் தமிழக தலைவர் கே.எஸ்.அழகிரி இன்று வெளியிட்ட அறிக்கை:

“இந்திய அரசமைப்புச் சட்டத்தில் வழங்கப்பட்டுள்ள உரிமைகளைக் குழிதோண்டி புதைக்கிற வகையில் குடியுரிமை திருத்த மசோதா இன்றைக்கு நாடாளுமன்றத்தில் பாஜக அரசால் தாக்கல் செய்யப்பட உள்ளது. மக்களவையில் பாஜகவுக்கு இருக்கும் பெரும்பான்மையின் அடிப்படையில் நிறைவேற்றுவதில் வெற்றி பெற வாய்ப்பு இருக்கிறது.

ஆனால், மாநிலங்களவையில் பெரும்பான்மை இல்லாவிட்டாலும் அதிமுக, பிஜூ ஜனதா தளம் போன்ற கட்சிகளின் ஆதரவைப் பெற்று எப்படியாவது நிறைவேற்றிவிட வேண்டுமென்று பாஜக தீவிர முயற்சி செய்கிறது. இந்த சட்டத் திருத்தத்தின் மூலம் அரசமைப்புச் சட்டம் அனைத்து மக்களுக்கும் வழங்கிய சமஉரிமை, சமவாய்ப்பு, சம பாதுகாப்பு போன்ற அம்சங்களை பாஜக அரசு தகர்த்துத் தரைமட்டமாக்க முயற்சி செய்கிறது.

இதன் மூலம் பாகிஸ்தான், பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான் போன்ற அண்டை நாடுகளில் இருந்து அகதிகளாக தஞ்சம் புகுந்த இஸ்லாமியர்களைத் தவிர்த்து, மற்ற மதத்தைச் சார்ந்தவர்களுக்கு குடியுரிமை வழங்க இச்சட்டத் திருத்தம் வகை செய்கிறது. இதன் மூலம் இஸ்லாமியர்களைத் தனிமைப்படுத்தி பெரும்பான்மை மக்களை மதரீதியாக அணிதிரட்டி, வாக்கு வங்கியை விரிவுபடுத்துகிற நோக்கத்தில் இந்த மசோதாவை பாஜக கொண்டு வந்துள்ளது.

நமது நாட்டில் தஞ்சம் புகுந்தவர்கள் 12 ஆண்டுகளாக சட்டவிரோதமாக இங்கே இடம் பெயர்ந்து குடியிருந்து வருகிறவர்களின் காலத்தை 5 ஆண்டுகளாக குறைத்து இச்சட்டத் திருத்தம் குடியுரிமை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இத்தகைய குடியுரிமை வழங்குகிற போது இஸ்லாமியர்களைத் தவிர்த்து மற்ற மதத்தினருக்கு, சலுகை காட்டுவது அரசமைப்புச் சட்டத்தில் வழங்கப்பட்ட சம உரிமை, சம பாதுகாப்பு போன்ற அம்சங்களுக்கு விரோதமானதாகும்.

இத்தகைய சட்டத் திருத்தம் உச்ச நீதிமன்றத்தின் ஆய்வுக்கு உட்பட்டுச் செல்லாத நிலை ஏற்பட நிறைய வாய்ப்பு இருக்கிறது. ஆனால், மதரீதியாக மக்களைத் திரட்டுகிற மதவாத அரசியலுக்கு குடியுரிமை திருத்த மசோதாவை பாஜக பயன்படுத்துகிறது. இதை காங்கிரஸ் உள்ளிட்ட திமுக, கம்யூனிஸ்ட் போன்ற கட்சிகள் கடுமையாக எதிர்க்கின்றன. இந்த மசோதாவை சிவசேனா கடுமையாக எதிர்ப்பதோடு, இந்து, முஸ்லிம் மக்களிடையே பிளவை ஏற்படுத்த பாஜக முயற்சிப்பதாக குற்றம் சாட்டியுள்ளது.

பாஜக கொண்டு வருகிற குடியுரிமை திருத்த மசோதாவில் இலங்கை தமிழர்கள் புறக்கணிக்கப்பட்டிருக்கிறார்கள். தமிழகத்தில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட இலங்கை தமிழர்கள் அகதிகளாக பல்வேறு முகாம்களில் தங்கி வருகின்றனர். இவர்களுக்குக் குடியுரிமை வழங்காமல் பாஜக அரசு புறக்கணித்திருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறேன். இது அரசமைப்புச் சட்டத்திற்கு விரோதமானது மட்டுமல்ல, தமிழர்களுக்கு எதிரான சட்டத் திருத்தமாகவே கருத வேண்டும்.

இந்திய அரசமைப்பு சட்டப் பிரிவு 14-ன்படி அனைத்து மக்களுக்கும் சம உரிமை, சம பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. ஆனால், மதத்தின் பெயரால் இந்த சட்டத் திருத்தம் மக்களிடையே வேறுபாடுகளை வெளிப்படையாகச் செய்வது கடுமையான கண்டனத்திற்குரியது. இதை தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக கடுமையாக எதிர்ப்பதோடு, வன்மையாக கண்டிக்கிறோம்.

இதன் மூலம் நீண்ட நெடுங்காலமாக அரசமைப்புச் சட்டத்தின் மூலம் காப்பாற்றப்பட்டு வந்த சம உரிமை, சம வாய்ப்பு, சம பாதுகாப்பு போன்ற ஜனநாயக, மதச்சார்பற்ற அம்சங்களைச் சிதைத்து சீர்குலைப்பதற்கு மத்திய பாஜக அரசு முயற்சி செய்திருக்கிறது. குடியுரிமை சட்டம் தாக்கல் ஆகிற இந்நாள் இந்திய அரசமைப்புச் சட்டத்திற்கு விரோதமானது என்பதனால் இந்நாள் இந்திய அரசியல் வரலாற்றில் ஒரு கருப்பு நாளாகும்.

நாட்டு மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல், மக்கள் விரோத அரசாக பாஜக அரசு செயல்பட்டு வருகிறது. கடுமையான பொருளாதார வீழ்ச்சி காரணமாக வேலையில்லாத் திண்டாட்டம், உற்பத்தி குறைவு, விவசாயிகளுக்கு உரிய விலை கிடைக்காத நிலை, பெட்ரோல், டீசல் விலை உயர்வு, மக்கள் வாங்கும் சக்தி குறைவு என பல்வேறு முனைகளில் மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.

குறிப்பாக வெங்காயத்தின் விலை ரூ.200-ஐ தாண்டி ராக்கெட் வேகத்தில் உயர்ந்து வருகிறது. வெங்காய விலையைக் குறைக்க முடியாத வக்கற்ற பாஜக அரசு மக்களைப் பிளவுபடுத்துவதற்கு குடியுரிமை சட்டத்தை திருத்தம் செய்கிறது. மக்களிடையே ஏற்பட்டுள்ள கடுமையான அதிருப்தியை திசை திருப்புவதற்காகவே இத்தகைய மசோதாவை பாஜக அரசு தாக்கல் செய்கிறது. ஆனால், பாஜகவின் தந்திரங்களைக் கண்டு நாட்டு மக்கள் ஏமாற மாட்டார்கள்”.

இவ்வாறு கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x