சோனியா பிறந்தநாளையொட்டி 100 மகளிருக்கு தலா அரை கிலோ வெங்காயம் தந்த புதுச்சேரி காங்கிரஸ்

வெங்காயத்தைப் பரிசாக அளிக்கும் முதல்வர் நாராயணசாமி.
வெங்காயத்தைப் பரிசாக அளிக்கும் முதல்வர் நாராயணசாமி.
Updated on
1 min read

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் 73-வது பிறந்த நாளை முன்னிட்டு மகிளா காங்கிரஸைச் சேர்ந்த 100 மகளிருக்கு தலா அரை கிலோ வீதம் 50 கிலோ வெங்காயத்தை புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி பரிசாக வழங்கினார்.

புதுச்சேரி மாநில காங்கிரஸ் கமிட்டி சார்பில் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தியின் பிறந்த நாள் விழா இன்று (டிச.9) கொண்டாடப்பட்டது. இவ்விழாவுக்கு மாநிலத் தலைவரும், பொதுப்பணித்துறை அமைச்சருமான நமச்சிவாயம் தலைமை தாங்கினார். அமைச்சர்கள் மல்லாடி கிருஷ்ணா ராவ், ஷாஜகான் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சிறப்பு விருந்தினராக முதல்வர் நாராயணசாமி கலந்து கொண்டு, சோனியா காந்தியின் பிறந்த நாள் விழா கேக்கை வெட்டி கட்சி நிர்வாகிகளுக்கு வழங்கினார். தொடர்ந்து, மகிளா காங்கிரஸைச் சேர்ந்த 100 பெண்களுக்கு தலா அரை கிலோ வீதம் 50 கிலோ வெங்காயத்தைப் பரிசாக வழங்கினார்.

பின்னர் முதல்வர் நாராயணசாமி கூறுகையில், "தற்போது வெங்காயத்தின் விலை நம் நாட்டில் விண்ணுக்குச் சென்றிருக்கிறது. மார்க்கெட்டில் ஒரு கிலோ வெங்காயம் ரூ.300-க்கு விற்கப்படுகிறது. இதனால் சாதாரண மக்கள், அடித்தட்டு மக்கள் பாதிக்கப்படுகின்ற நிலை ஏற்பட்டுள்ளது. இதைப் பற்றி மத்திய அரசு கவலைப்படவில்லை.

நம் நாட்டில் விளைச்சல் குறைந்தாலும் கூட காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் வெளிநாட்டில் இருந்து வெங்காயத்தைக் கொண்டு வந்து குறைந்த விலைக்கு விற்றோம். அந்த நிலை தற்போது மாறியுள்ளது. அதனை மக்களுக்கு அறிவுறுத்தும் முறையில் காங்கிரஸ் சார்பில் மகளிருக்குப் பரிசாக வெங்காயம் கொடுக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு உடனடியாக வெங்காய விலையைக் குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியும் இதனைச் செய்துள்ளோம்" எனத் தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in