

தமிழகத்தில் சிலை கடத்தல் கடந்த 5 ஆண்டுகளாக அதிகரித்திருப் பதாக கூறப்படுகிறது. மாநிலத் தின் பல பகுதிகளிலும் சிலைப் பாதுகாப்பு மையங்கள் அமைக்கப்பட்டு, பாதுகாப்பற்ற கோயில்களின் சிலைகள் அங்கு பராமரிக்கப்படுவதால் சிலைத் திருட்டு தடுக்கப்படும் என்று நம்பிக்கை தெரிவிக்கின்றனர் அறநிலையத் துறையினர்.
தமிழகத்தில் பழமையான கோயில்கள் சுமார் 24 ஆயிரம் உள்ளன. இவற்றில் பழமையான ஐம்பொன் சிலைகள் சுமார் 1 லட்சம் இருப்பதாக கூறப்படு கிறது. இந்தியாவில், குறிப்பாக தமிழகத்தில் பல நூற்றாண்டு பழைமை வாய்ந்த ஐம்பொன் சிலை கள் மிகவும் நுணுக்கமானவை, நேர்த்தியானவை. தங்கம் 40 சதவீதம், வெள்ளி, பித்தளை, செம்பு, ஈயம் ஆகிய உலோகங்கள் தலா 15 சதவீதம் கலந்து உருவாக்கப்படுவது ஐம்பொன் சிலை. அணிகலன்கள், ஆடை மடிப்பு, ரத்த நாளங்கள்கூட தத்ரூபமாக தெரியும்படி உருவாக் கப்பட்ட பழைய சிலைகளுக்கு கிராக்கி அதிகம். அதன் புராதனத் தன்மைக்கு ஏற்ப விலை அதிகரிக்கும்.
அதிக பணப் புழக்கம்
சர்வதேச அளவில் கடந்த 35 ஆண்டுகளாக இத்தொழில் நடந்தாலும், கடந்த 5 ஆண்டு களாக சிலைக் கடத்தல் அதிகம் நடப்பதாக போலீஸார் கூறுகின் றனர். சர்வதேச அளவில் போதைப் பொருள் கடத்தலுக்கு அடுத்தபடி யாக சிலை கடத்தல் தொழிலில் அதிக அளவு பணம் புழங்குகிறது. இதில் சர்வதேச கும்பலின் தொடர்புகள் இருப்பதால், உண்மைக் குற்றவாளிகளை கண்டுபிடிப்பதும், குற்றத்தை முழுமையாக கட்டுப்படுத்துவதும் போலீஸுக்கு சிரமமான காரியமாக இருக்கிறது. குற்றம் நிரூபிக்கப்பட்ட சிலரும் சில மாத தண்டனைக்கு பிறகு வெளியே வந்துவிடுகின்றனர். சிலைத் திருட்டுகள் தொடர்வதற்கு இதுவும் முக்கிய காரணம் என்பது போலீஸாரின் கருத்து.
‘‘இந்தியாவின் புராதனப் பொருட்கள் என்றாலும்கூட, திருட்டுப் பொருட்களை வாங்க வெளிநாட்டினர் தயங்குவார்கள். அதனால் பழங்கால கோயில் சிலைகளில் கோயில், ஊர் பெயர், ஆவணப்படுத்தப்பட்ட ஆண்டு ஆகியவற்றை என் கார்விங் முறையில் பதிவு செய்தால், வெளிநாடுகளுக்கு கடத்தப்படுவதை ஓரளவுக்கு கட்டுப்படுத்த முடியும். ஆனால் இது ஆகம விதிகளுக்கு எதிரானது எனக் கூறி அறநிலை யத் துறையினர் செய்ய மறுக்கின்றனர்’’ என்கின்றனர் காவல் துறையினர்.
இதுபற்றி அறநிலையத் துறையினர் கூறியதாவது:
பழங்கால உலோக சிலைகள் உள்ள பல கோயில்கள் பரம்பரை அறங்காவலர்களால் நிர்வகிக்கப் படுகின்றன. அதில் அறநிலையத் துறையினர் தலையிட முடியாது. சில கோயில்களில் சிலைகள் திருட்டுப்போகும் விவரத்தைக்கூட எங்களுக்கு தெரிவிப்பதில்லை. தற்போது அனைத்து சிலை களையும் கணக்கெடுத்து ஆவ ணப்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறோம்.
மதிப்புமிக்க, அரிய வகை சிலைகள் இருக்கிற பல கோயில் களில் போதிய பாதுகாப்பு வசதி இருப்பதில்லை. இதை கருத் தில் கொண்டு, அனைத்து மாவட்டங்களிலும் முக்கிய இடங்களில் சிலை பாதுகாப்பு (ஐகான்) மையங்கள் அமைக் கப்பட்டுள்ளன. பாதுகாப்பற்ற கோயில்களின் சிலைகளை அங்கு பாதுகாக்க ஏற்பாடு செய்யப்பட்டுள் ளது. திருவிழா, விசேஷ நாட்களில் மட்டும் இச்சிலைகள் கோயிலுக்கு எடுத்துச் செல்லப்படும். விழா முடிந்த பிறகு, மீண்டும் இங்கு கொண்டுவரப்பட்டு பாதுகாக் கப்படும். இந்த மையங்களில் திருட்டு தடுப்பு அலாரம், கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. போலீ ஸார், கோயில் பாதுகாப்பு படையினர் 24 மணி நேரமும் காவலுக்கு இருப்பார்கள். இதன்மூலம் சிலை திருட்டுகள் பெருமளவு குறையும்.
இவ்வாறு அறநிலையத் துறையினர் கூறினர்.