Published : 09 Dec 2019 11:52 AM
Last Updated : 09 Dec 2019 11:52 AM

உள்ளாட்சித் தேர்தல் வேட்பு மனு தாக்கல் தொடங்கியது

டிச.27 மற்றும் 30 தேதிகளில் உள்ளாட்சித்தேர்தல் நடப்பதை ஒட்டி இன்றுமுதல் வேட்புமனுத் தாக்கல் ஆரம்பமாகிறது. வேட்பாளர்கள் தங்கள் வேட்புமனுவை தாக்கல் செய்து வருகின்றனர்.

பஞ்சாயத்து ராஜ் சட்டத்துக்குப்பின் 1996-ல் முழுமையாக நடந்த உள்ளாட்சித்தேர்தல் 2001, 2006, 2011 ஆகிய ஆண்டுகளில் முறையாக நடந்தது. 2016-ம் ஆண்டு நடத்தப்படவேண்டிய உள்ளாட்சித்தேர்தல் நடத்தப்படாமல் தள்ளிப்போடப்பட்டு வந்தது. அதன் பின்னர் உள்ளாட்சித்தேர்தல் முறையாக மறுவரையறை, இட ஒதுக்கீடு செய்தப்பின்னர் அறிவிக்கப்படவேண்டும் என திமுக வழக்கு தொடர்ந்தது.

இந்த வழக்கு நடந்து வந்த நிலையில் உச்சநீதிமன்றம் இறுதி கெடு விதித்ததை அடுத்து டிச.2-ம் தேதிக்குள் அறிவிப்பு என தேர்தல் ஆணையம் தெரிவித்தது. அதற்கு முன் 7 மாவட்டங்கள் பிரிக்கப்பட்டன. இதையடுத்து உள்ளாட்சித்தேர்தல் அறிவிக்கப்பட்டது. அது ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு மட்டுமே மாநகராட்சி , நகராட்சிகளுக்கு இல்லை என அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து மீண்டும் திமுக நீதிமன்றம் சென்றது. அதில் 9 மாவட்டங்கள் தவிர மற்ற மாவட்டங்களுக்கு தேர்தல் நடத்த புது அறிவிப்பாணை வெளியிட உத்தரவிடப்பட்டது. அதன்படி டிச.27, 30 தேதிகளில் இரண்டுக்கட்டங்களாக தேர்தல் எனவும், டிச.9 முதல் வேட்பு தாக்கல் ஆரம்பம் எனவும் அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் 9 மாவட்டங்கள் தவிர எஞ்சிய தேர்தல் அறிவிக்கப்பட்ட மாவட்டங்களில் உள்ளாட்சித்தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் இன்று தொடங்கியது. இன்று வேட்மனுத்தாக்கல் தொடங்கிய நிலையில் மனு தாக்கல் செய்ய 16-ம் தேதி கடைசி நாள் ஆகும். வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை 17-ம் தேதி நடைபெறும். வேட்பு மனு வாபஸ் இறுதித் தேதி டிச்.19-ம் தேதி ஆகும்.

டிச்.27, 30 தேர்தல் நாள் அன்று வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 5 மணியுடன் முடிவடையும். வாக்கு எண்ணிக்கை ஜனவரி 2-ம் தேதி காலை 8 மணிக்கு தொடங்கும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x