Published : 09 Dec 2019 10:44 AM
Last Updated : 09 Dec 2019 10:44 AM

தமிழில் பெயர்ப்பலகைகள் என்ற அடிப்படை எதிர்பார்ப்பு கூட இன்னும் நிறைவேறவில்லை: ராமதாஸ் கண்டனம்

கடைகளின் பெயர்ப்பலகைகளில் தமிழ் என்பது தொடர்பான அரசாணைகளை நடைமுறைப்படுத்த தமிழக அரசு மிகத்தீவிர நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என, பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக ராமதாஸ் இன்று (டிச.9) வெளியிட்ட அறிக்கையில், "தமிழ் ஆட்சி மொழி சட்டம் உருவாக்கப்பட்டதை நினைவு கூறும் வகையில், தமிழ்நாட்டில் இம்மாதம் 21-ம் தேதி முதல் 27-ஆம் தேதி வரை தமிழ் ஆட்சி மொழி வாரம் கொண்டாடப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இது மகிழ்ச்சியளிக்கும் அதேநேரத்தில், கடைகளின் பெயர்ப்பலகைகள் தமிழில் எழுதப்பட வேண்டும் என்ற அரசாணை 42 ஆண்டுகளாகியும் செயல்படுத்தப்படாதது வருத்தமளிக்கிறது.

சென்னையிலிருந்து சில நாட்களுக்கு முன் தைலாபுரம் தோட்டத்திற்கு திரும்பிய நான், சாலையோரக் கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களின் பெயர்ப்பலகைகளை பார்த்துக் கொண்டே வந்தேன். மொத்தம் 125 கி.மீ. நீள பயணத்தில் ஒரு விழுக்காடு கடைகளில் கூட, விதிகளின்படி தமிழில் பெயர்ப்பலகைகள் எழுதப்படாததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தேன்.

தமிழ்நாட்டில் கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களின் பெயர்ப்பலகைகள் தமிழில் தான் எழுதப்பட வேண்டும் என்ற நியாயமான எதிர்பார்ப்பு கூட நிறைவேற்றப்படவில்லை என்றால், ஆண்டுதோறும் தமிழ் ஆட்சி மொழி வாரத்தை கொண்டாடுவது அர்த்தமற்றது.

பெயர்ப்பலகைகள் தமிழில் எழுதப்பட வேண்டும் என்ற கோரிக்கை இன்றோ, நேற்றோ எழுந்ததில்லை. இந்தியா விடுதலை அடைந்த காலத்திலிருந்தே இக்கோரிக்கை எழுப்பப்பட்டு வருகிறது. அதன்பயனாக 1977 ஆம் ஆண்டு தமிழகத்தின் புதிய முதல்வராக பதவியேற்ற எம்ஜிஆர், அடுத்த 50 நாட்களில், அதாவது ஆகஸ்ட் 8 ஆம் தேதி அனைத்து கடைகளின் பெயர்ப்பலகைகளும் தமிழில் தான் எழுதப்பட வேண்டும் என்பதை கட்டாயமாக்கும் வகையில், 1948 ஆம் ஆண்டு பெயர்ப்பலகைகள் தொடர்பாக இயற்றப்பட்ட சட்டத்தில் திருத்தம் செய்து, 575 எண் கொண்ட அரசாணையை பிறப்பிக்கச் செய்தார்.

அதன்பின்னர் 1983-84 ஆம் ஆண்டில் 1541 என்ற எண் கொண்ட அரசாணையை எம்ஜிஆர் அரசும், 1989-90 ஆம் ஆண்டில் 291 என்ற எண் கொண்ட அரசாணையை கருணாநிதி அரசும் பிறப்பித்தன. இந்த 3 அரசாணைகளின் நோக்கமும் பெயர்ப்பலகைகள் தமிழில் எழுதப்பட வேண்டும் என்பது தான். ஆனால், இவற்றில் ஒன்று கூட செயல்படுத்தப்படவில்லை என்பது தான் வேதனையான உண்மையாகும்.

பெயர்ப்பலகைகள் குறித்து 1977 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட அரசாணை ஒவ்வொரு விஷயத்திலும் மிகவும் தெளிவாக உள்ளது. "எல்லா நிறுவனங்களின் பெயர்ப் பலகைகளும் தமிழில் எழுதப்பட வேண்டும்; பிறமொழிகள் பயன்படுத்த வேண்டும் என்றால், ஆங்கில வரிகள் இரண்டாம் இடத்திலும் ஏனைய மொழிகள் அதற்கு அடுத்தும் வர வேண்டும்; அத்தகைய சூழலில் தமிழ், ஆங்கிலம் மற்றும் ஏனைய மொழிகளுக்கான இடங்கள் 5 : 3 : 2 என்ற விகிதத்தில் இருக்க வேண்டும்" என்று கூறப்பட்டுள்ளது.

அதுமட்டுமின்றி, 'ஹோட்டல்' என்ற ஆங்கிலச் சொல்லை 'ஓட்டல்' என்று அப்படியே தமிழ்ப்படுத்தி எழுதாமல் 'உணவகம்' என்று எழுத வேண்டும் என்றும் அரசாணையில் உறுதியாக கூறப்பட்டிருக்கிறது.

கடைகளின் பெயர்ப்பலகைகள் தமிழில் எழுதுவதை உறுதி செய்ய வலியுறுத்தி பாமக கடந்த 25 ஆண்டுகளில் ஏராளமான போராட்டங்களை நடத்தியிருக்கிறது. முதன்முதலில் பிற மொழிகளில் எழுதப்பட்டுள்ள கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களின் பெயர்ப் பலகைககளை தார் பூசி அழிக்கும் போராட்டம் 28.4.1997 அன்று நடத்தப்படும் என்று பாமக அறிவித்தது.

ஆனால், அப்போதைய முதல்வர் கருணாநிதி அளித்த வாக்குறுதியை ஏற்று, அப்போராட்டம் 14.06.1997 அன்று நடத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து 2017 ஆம் ஆண்டு வரை தார்ப்பூசி அழிக்கும் போராட்டங்கள், வணிகர்களை சந்தித்து தமிழில் பெயர்ப்பலகைகளை எழுதுவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துதல், மூன்றாவது மொழிப்போர் மாநாடு உள்ளிட்ட ஏராளமான இயக்கங்களை பாமக நடத்தியுள்ளது. அதன்பயனாக குறிப்பிடத்தக்க அளவிலான கடைகளில் தமிழில் பெயர்ப்பலகைகள் அமைக்கப்பட்டுள்ளன என்ற போதிலும், அந்த எண்ணிக்கை மனநிறைவளிக்கும் வகையில் இல்லை.

ஆந்திரம், கர்நாடகம், கேரளம் உள்ளிட்ட இந்தியாவின் பெரும்பான்மையான மாநிலங்களில், கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களின் பெயர்ப்பலகைகள் அந்தந்த மாநில மொழிகளில் தான் எழுதப்பட்டு உள்ளன. அதைத் தான் அந்த மாநில மக்களும், வணிகர்களும் பெருமையாக கருதுகின்றனர். ஆனால், உலகின் மூத்த குடி, உலகின் மூத்த மொழி என்று பெருமை பேசிக் கொள்ளும் தமிழகத்திலோ தமிழைத் தவிர மற்ற மொழிகளில் கடைகளின் பெயர்ப்பலகைகள் காட்சியளிக்கின்றன. இது அவலம்.

தமிழில் பெயர்ப்பலகைகள் என்ற அடிப்படை எதிர்பார்ப்பு கூட இன்னும் நிறைவேறாததற்கு காரணம் இந்த விஷயத்தில் ஆட்சியாளர்கள் போதிய அக்கறை காட்டவில்லை என்பது தான். தமிழ்நாட்டில் தமிழில் பெயர்ப்பலகைகளை அமைப்பது தமிழன்னைக்கு நாம் செய்யும் தொண்டு ஆகும். அதைக்கூட செய்யாமல் நாமெல்லாம் தமிழர்கள் என்று கூறிக் கொள்வதிலோ, "எங்கும் தமிழ்.... எதிலும் தமிழ்" என்று முழக்கமிடுவதிலோ பயனில்லை.

எனவே, பெயர்ப்பலகைகளில் தமிழ் என்பது தொடர்பான அரசாணைகளை நடைமுறைப்படுத்த தமிழக அரசு மிகத்தீவிர நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்" என ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x