

தெலங்கானா மாநிலம் ஷம்சாபாத் சுங்கச்சாவடி அருகே கடந்த 27-ம் தேதி கால்நடை பெண் மருத்துவர் பாலியல் வன்முறைக்கு ஆளாகி, கொடூரமாக எரித்துக் கொல்லப்பட்டார். நாட்டையே உலுக்கிய இந்த விவகாரத்தில் சிவா, சென்ன கேசவலு, முகமது பாஷா, நவீன் ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டனர். குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை வழங்க வேண்டும் என நாடு முழுவதும் போராட்டம் நடந்தது. இந்த வழக்கில் விரைவாக நீதி கிடைக்கச் செய்யும் வகையில், இரண்டே நாளில் சிறப்பு விசாரணை நீதிமன்றம் அமைத்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது.
இதற்கிடையே, குற்றம் சாட்டப்பட்ட 4 பேரும் போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டனர். விசாரணையின்போது, தங்களை தாக்கிவிட்டு தப்ப முயன்றதால் சுட்டதாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. காவல் துறையின் கூற்று எதுவானாலும், 4 பேரும் சுட்டுக் கொல்லப்பட்டதை பல்வேறு தரப்பினரும் வரவேற்றுள்ளனர். ‘‘இந்த என்கவுன்ட்டர் நடவடிக்கை நியாயமானதே’’ என்று தெரிவித்துள்ளனர்.
நீதிமன்றங்கள் மிக தாமதமாக நீதி வழங்குவதுதான், இதுபோன்ற ‘துப்பாக்கி தீர்ப்பு’களை மக்கள் கொண்டாடக் காரணம் என்றும் சொல்கின்றனர். இதன்பிறகு எழக்கூடிய அவநம்பிக்கை கேள்விகள் ஒவ்வொன்றாக பார்ப்போம்..
நீதிமன்றங்களில் தாமதமாகும்…
இது பொத்தாம் பொதுவான ஒரு அவநம்பிக்கையில் உருவாகும் தவறான வாதம். இப்படிப்பட்ட வழக்குகள் மாவட்ட அளவிலான சிறப்பு விசாரணை நீதிமன்றங்களில் (Trial Court) நடைபெறும். இப்போதெல்லாம் பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்காக ‘மகளிர் நீதிமன்றம்’, குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களுக்காக ‘போக்சோ நீதிமன்றம்’ ஆகிய விரைவு நீதிமன்றங்கள் உள்ளன. தெலங்கானா பெண் மருத்துவர் மீதான பாலியல் வன்முறை மற்றும் படுகொலை வழக்கை நடத்த, உடனடியாக சிறப்பு விசாரணை நீதிமன்றம் அமைத்து உயர் நீதிமன்றமும் உத்தரவிட்டது.
எந்த சாட்சியங்கள் அடிப்படையில் இவர்கள் 4 பேரையும் சுட்டுக் கொல்லக்கூடிய குற்றவாளிகள் என்று ‘என்கவுன்ட்டர் போலீஸார்’ முடிவுக்கு வந்தனரோ, அந்த சாட்சியங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பித்து தண்டனை பெற்றுத் தருவதற்கு சற்றே கூடுதலான காலம் தேவைப்பட்டிருக்கும், அவ்வளவுதான்!கொலை, பலாத்கார வழக்குகளில் மிக விரைவாக, குறிப்பாக பத்தே நாளில் குற்றவாளிக்கு தண்டனை வழங்கி தீர்ப்பு வழங்கப்பட்டுள்ள முன்னுதாரணங்கள் நிறையவே உள்ளன.
முக்கியமாக, சென்னை அயனாவரம் சிறுமி, அவரைச் சுற்றி வசித்து வந்தவர்களாலேயே பதைபதைக்க வைக்கும் வகையில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட வழக்கு. இதில், குற்றம் சாட்டப்பட்ட 17 பேருக்கும் எதிராக உரிய விசாரணை நடத்தி, சாட்சிகள், ஆதாரங்களை சென்னை மகளிர் சிறப்பு நீதிமன்றத்தில் போலீஸார் தாமதமின்றி சமர்ப்பித்த காரணத்தால், விசாரணை நடைமுறைகள் ஒரே ஆண்டுக்குள் நிறைவடைந்து, தற்போது தீர்ப்புக்காக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
எனவே, குற்ற வழக்குகளில் விரைவாக, சரியான தண்டனை பெற்றுத் தருவது என்பது பெரும்பாலும் காவல் துறையின் கையில்தான் இருக்கிறது. குற்ற வழக்குகளைப் பொறுத்தவரை, நீதிமன்றம் விசாரணை முடித்து தீர்ப்பளிக்க கால தாமதமாவதற்கு முக்கிய காரணம், போலீஸார் சரியான சாட்சிகளை நீதிமன்றத்தில் விரைவாக முன்னிலைப்படுத்தாததுதான்.
நாடே உற்றுநோக்கும் வழக்குகளில் உரிய சாட்சியங்களை சேகரித்து குற்றத்தை நிரூபிப்பது கடினம் என்ற நிலை வரும்போதுதான் பெரும்பாலும் என்கவுன்ட்டரை கையில் எடுக்கிறது காவல் துறை.
உடனடி தண்டனைதான் பயத்தை ஏற்படுத்தும்/ குற்ற நிகழ்வை குறைக்கும்.
இதுவும் தவறான வாதம். குற்ற மனம் உள்ளவர்கள் செயல்படும் விதம் ஒரு வேட்டை விலங்கின் மனநிலையில் இருக்கும், என்கவுன்ட்டர்/ விசாரணை அற்ற உடனடி தண்டனை போன்றவை குற்றம் செய்பவரை தடுப்பதற்கு பதில், கூடுதல் கவனத்தோடு குற்றம் செய்வதற்கே வழிவகுக்கும் என்கிறது மனநல அறிவியல். இதற்கு முன்பும் பல என்கவுன்ட்டர்கள் நடந்துள்ளன. குற்ற நிகழ்வுகள் குறையவில்லை!நமது கேள்விகள்..
இதுபோன்ற விவகாரங்களில் கொல்லப்பட்டவர்கள்தான் உண்மையான குற்றவாளிகள் என அத்தனை விரைவாக எப்படி இறுதி முடிவு எடுப்பது? அதற்கு போதிய ஆதாரங்கள் சேகரிக்கப்பட்டு விட்டனவா? எந்த நீதிமன்றமாவது அந்த ஆதாரங்களைப் பார்த்து திருப்தி அடைந்ததா? தெலங்கானா பெண் மருத்துவர் வழக்கில் இந்த 4 பேர் மட்டும்தான் சம்பந்தப்பட்டுள்ளனரா? இதுதவிர வேறு யாராவது உண்டா? இத்தனை கேள்விகளுக்கும் என்ன பதில்?முழு உண்மை தெரியாமலே முடித்துவைக்கப்பட்ட வழக்குகளும் உண்டுதானே. கொலை செய்யப்பட்டதாக போலீஸார் சொல்லி ‘கதை’ முடிக்கப்பட்ட பாண்டியம்மாள், நீதிமன்றத்தின் முன்பு வந்து நின்றாரே.. மும்பையில் ஒரு போலீஸ் அதிகாரி ‘என்கவுன்ட்டர்’ என்ற ஆயுதத்தை தவறாக பயன்படுத்தியே தவறான வழியில் கோடிக்கணக்கில் பணமும், புகழும் பெற்றாரே..
அரசியல் ஏவல் அல்லது செல்வாக்கு மிக்கவர்கள் சொல்படி கேட்டு, போலீஸார் தங்கள் ‘என்கவுன்ட்டர்’ ஆயுதத்தை, அப்பாவிகளுக்கு எதிராகவும் பயன்படுத்த ஆரம்பித்தால் என்னாகும்..? அப்படியான சர்ச்சைகளும் ஏற்கெனவே உண்டுதானே..? இப்படி கேள்விகள் நிறையவே உள்ளன. ஒரு பக்கம் போதையை விற்று கஜானாவை நிரப்பும் அரசாங்கம்தான் மறுபக்கம் ஆபாசம், வக்கிரம், வன்முறை கொண்ட காட்சிகளை திரைப்படம் மற்றும் தொலைக்காட்சிகளில் அனுமதிக்கிறது.
ஏதோவொரு வகையில் வெறி உணர்ச்சி தூண்டப்பட காரணமாகும் அரசு, அதன் தாக்கத்தால் மனப்பிழற்சியால் ஒருவன் குற்றம் செய்யும்போது, ‘மிருகவெறிக்கு என்கவுன்ட்டர் நடவடிக்கைதான் சரி’ என்று நினைப்பது வினோதம் அல்லவா? பாலியல் பலாத்காரம் செய்யும் குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை வழங்க வேண்டும் என்பதில் எல்லோருக்கும் ஒரே கருத்துதான் உள்ளது.
ஆனால் போலீஸால் கைது செய்யப்பட்டவர்கள் குற்றவாளிகள்தான் என்று இறுதித் தீர்ப்பு தந்து, தண்டனையை நிர்ணயம் செய்வது நீதிமன்றத்தின் பணி மட்டுமே அல்லவா? உணர்ச்சி மிகுதியால் சராசரி மனிதர்கள் ஆவேசப்படலாம்; பொறுப்பான ஓர் அரசும், அதன் அங்கமான காவல் துறையும் ‘மக்கள் கோபத்தை தணிப்பது’ என்ற நோக்கத்துக்காக தாங்களும் உணர்ச்சிவசப்படலாமா? இது அதிகார மீறல் அல்லவா? உச்ச நீதிமன்றம் 2014-ம் ஆண்டு வழங்கிய தீர்ப்பில், ‘என்கவுன்ட்டர் என்பது சட்டத்துக்கு எதிரானது’ என்று சொல்லியுள்ளது. குற்றம் செய்தவர்களை, தாம் பெரும் குற்றத்தை செய்திருக்கிறோம் என உணரவைத்து, பிறகு அவர்களுக்கு தண்டனை வழங்கப்பட்டிருக்க வேண்டும். அதுதான் சட்டத்தின் ஆட்சி.
‘என்கவுன்ட்டர்’ கொலை என்பது எந்த காரணத்துக்காக நடந்தாலும், அது சட்டத்தின் ஆட்சியின் மீது நடத்தப்படும் வன்முறையே.
கட்டுரையாளர்: சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்.