

உள்ளாட்சி, சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற பிரபல அரசியல் நிபுணர் பிரசாந்த் கிஷோரிடம் ஆலோசனை பெற திமுக திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் ஊரக உள்ளாட்சிகளுக்கானத் தேர்தல் வரும் இம்மாதம் 27, 30-ம் தேதிகளில் நடக்கிறது. சட்டப்பேரவைக்கான தேர்தல் இன்னும் ஒன்றரை ஆண்டுகளில் நடைபெற உள்ளது. கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி அபார வெற்றி பெற்றது.
அதேபோல் வெற்றி பெற வேண்டும் என திமுக கருதுகிறது. இதற்காக, தேர்தல் வியூகங்களை வகுக்கும் பணியில் தற்போதே இறங்கியுள்ளது.
இதன்படி, பிரபல அரசியல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோரின் ஆலோசனை பெறவும் திமுக முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது. பிரசாந்த் கிஷோர் கடந்த 2014-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுக்கு பாஜகவுக்கு பிரச்சார திட்டங்களை வகுத்துக் கொடுத்தார்.
இதேபோல், பிஹாரில் நிதிஷ்குமார், பஞ்சாபில் அம்ரீந்தர் சிங், ஆந்திராவில் ஜெகன்மோகன் ரெட்டி ஆகியோருக்கு திட்டங்களை வகுத்து கொடுத்ததால்தான் அவர்கள் வெற்றி பெற்றதாக கருத்து நிலவுகிறது.
இந்நிலையில், சென்னையைச் சேர்ந்த தனியார் நிறுவனம் ஒன்றுடன் திமுக ஒப்பந்தம் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிறுவனம், பிரசாந்த் கிஷோரின் அரசியல் செயல்பாட்டு குழுவில் உள்ள 17 நிர்வாகிகளைக் கொண்டு நடத்தப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது.
ஏற்கெனவே, கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் திமுகவுக்கு பிரச்சார பணிகளை இந்நிறுவனம் மேற்கொண்டது. இந்நிலையில், இந்நிறுவனத்துடன் 3 மாத கால ஒப்பந்தத்தை திமுக செய்துள்ளது. அதன்படி, முதற்கட்டமாக உள்ளாட்சித் தேர்தலில் இந்நிறுவனம் பிரச்சார பணிகளை செய்யும். அதன்பிறகு, பேரவைத் தேர்லிலும் இந்நிறுவனம் பிரச்சாரம் செய்யும் என திமுக நிர்வாகிகள் தெரிவித்தனர்.