

இ. ஜெகநாதன்
சட்டப்பேரவை, மக்களவைத் தேர்தல் வேட்புமனுவை வேட்பாளர்களுக்கு இந்திய தேர்தல் ஆணையம் இலவசமாக வழங்கும் நிலையில், உள்ளாட்சித் தேர்தல் வேட்புமனுவை மாநிலத் தேர்தல் ஆணையம் ஒரு ரூபாய்க்கு விற்பனை செய்கிறது.
தமிழகத்தில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் டிச.27, டிச.30 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக நடக்கிறது. இதையொட்டி வேட்புமனுக்கள் இன்று முதல் பெறப்படுகின்றன. ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு அந்தந்த ஊராட்சிகளிலும், ஊராட்சித் தலைவர், ஊராட்சி ஒன்றியக் கவுன்சிலர், மாவட்ட ஊராட்சிக் கவுன்சிலர் ஆகிய பதவிகளுக்கு அந்தந்த ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களிலும் வேட்புமனுக்கள் பெறப்படுகின்றன.
ஒரு பதவிக்கு மட்டுமே...
சட்டப்பேரவை, மக்களவைத் தேர்தல் வேட்புமனுவை இந்திய தேர்தல் ஆணையம் இலவசமாக வழங்குகிறது. ஆனால் உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்புமனுவை மாநில தேர்தல் ஆணையம் ஒரு ரூபாய் என விலை நிர்ணயம் செய்துள்ளது.
மேலும் வேட்புமனு படிவத்தில் 4 பக்கங்கள் உள்ளன. அதில் தேர்தல் நடக்க உள்ள ஊராட்சி வார்டு உறுப்பினர், ஊராட்சித் தலைவர், ஊராட்சி ஒன்றியக் கவுன்சிலர், மாவட்ட ஊராட்சி கவுன்சிலர் ஆகிய 4 பதவிகளில் ஒருவர் ஏதேனும் ஒரு பதவிக்கு மட்டுமே போட்டியிட முடியும்.
ஒன்றுக்கு மேற்பட்ட பதவிகளுக்கு வேட்புமனுத் தாக்கல் செய்தால், அந்த மனுக்கள் அனைத்தும் நிராகரிக்கப்படும். மேலும் தேர்தலில் போட்டியிடுவோர் கிராம நிர்வாக அலுவலர், கிராமப் பணியாளர், மத்திய, மாநில அரசுப் பணியாளர், பொதுத் துறைப் பணியாளராக இருக்கக் கூடாது உள்ளிட்ட விவரங்கள் வேட்புமனுப் படிவத்தில் இடம் பெற்றுள்ளன.
சுயேச்சைகளுக்கு சின்னம்
ஊராட்சி வார்டு உறுப்பினர், ஊராட்சித் தலைவர் பதவிகளுக்கு போட்டியிடுவோர் வேட்புமனுவில் தாங்கள் விரும்பும் சின்னங்களைக் குறிப்பிடக்கூடாது. ஆனால், ஊராட்சி ஒன்றியக் கவுன்சிலர், மாவட்ட ஊராட்சி கவுன்சிலர் பதவிகளுக்கு கட்சி சார்பில் போட்டியிடுவோருக்கு கட்சி சின்னம் ஒதுக்கப்படும். சுயேச்சைகள் தாங்கள் விரும்பும் 3 சின்னங்களை வேட்புமனுவில் குறிப்பிட வேண்டும்.