

"தமிழகத்தில் கடைசி சொட்டு மது ஒழிக்கப்படும் வரை நான் தொடர்ந்து போராடுவேன்" என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''தமிழ்நாட்டில் மது ஒழிப்பு இன்று தலையாய பிரச்சினையாக உருவெடுத்திருக்கிறது. மதுவிலக்கை வலியுறுத்தி கடந்த 35 ஆண்டுகளாக தொடர்ந்து போராடி வருகிறேன். கடந்த காலங்களில் நான் எதற்காக போராடினேனோ, அதற்காக இப்போது மற்ற கட்சிகளும், மாணவர்களும், பொதுமக்களும் போராடத் தொடங்கியிருப்பது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது.
திமுக ஆட்சிக்கு வந்தால் மதுவிலக்கை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று எந்த நேரமும் பின்வாங்குவதற்கு வசதியாக ஓர் அறிவிப்பை கருணாநிதி வெளியிட்ட போது, ‘‘1996 ஆம் ஆண்டில் தொடங்கி 2010 ஆம் ஆண்டு வரை 5 முறை இதே வாக்குறுதியை அளித்தீர்களே? முதல் வாக்குறுதி அளிக்கப்பட்ட நாளிலிருந்து 10 ஆண்டுகள் ஆட்சியில் இருந்தீர்களே... அப்போதெல்லாம் இந்த வாக்குறுதியை நிறைவேற்றாதது ஏன்? இந்த 5 வாக்குறுதிகளில் நான்கை ஆட்சியில் இருந்த போது தானே அளித்தீர்கள்...
நீங்கள் நினைத்திருந்தால் ஒற்றைக் கையெழுத்தில் அவற்றை நிறைவேற்றியிருக்கலாமே?, ஆனால், அப்படி செய்யாமல் திமுகவினருக்கும், உங்களுக்கு திரைக்கதை எழுத வாய்ப்பளித்தவர்களுக்கும் மது ஆலை அமைக்க வாய்ப்பளித்தீர்களே? இதற்குப் பிறகும் மது விலக்கை நடைமுறைப்படுத்தப் போவதாக நீங்கள் அளிக்கும் வாக்குறுதியை மக்கள் நம்ப மாட்டார்கள்; அவை காற்றில் எழுதப்பட்ட எழுத்துக்கள்’’ என்று கூறினேன். இதில் என்ன தவறு? என்பதை கருணாநிதி அவரது மனசாட்சியிடம் கேட்கட்டும்.
மதுவிலக்கை நடைமுறைப்படுத்துவதாக 5முறை அளித்த வாக்குறுதியை இதுவரை நிறைவேற்றாதது ஏன்? என்ற கேள்விக்கு இதுவரை கருணாநிதியிடமிருந்து பதில் வரவில்லை.
1981 ஆம் ஆண்டில் மதுவிலக்கு ரத்து செய்யப்பட்ட பிறகு 35 ஆண்டுகளாக தமிழகத்தை மது அரக்கன் ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கும் நிலையில், அதற்கு எதிராக இதுவரை ஒரே ஒரு போராட்டமாவது நடத்தியதுண்டா? ஆனால், நான் அப்படியல்ல.
கடந்த 35 ஆண்டுகளாக மதுவுக்கு எதிராக போராட்டம் நடத்துவதே எனது வாழ்க்கை முறையாக மாறியிருக்கிறது. உதாரணத்திற்காக ஒரு சில போராட்டங்களை மட்டும் பொதுமக்கள் பார்வைக்கு பட்டியலிடுகிறேன்...
* பாமக தொடங்கப்படுவதற்கு முன்பே 1984 ஆம் ஆண்டில் மதுவுக்கு எதிராக மக்களைத் திரட்டி மிகப்பெரிய போராட்டத்தை நடத்தினேன்.
* 1989 ஆம் ஆண்டில் பாமக தொடங்கப்பட்டதும் நிறைவேற்றப்பட்ட 2-வது தீர்மானமே தமிழகத்தில் முழு மதுவிலக்கு நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்பது தான்.
* 01.11.1989 அன்று தமிழகம் முழுவதும் வட்டாட்சியர் அலுவலகங்கள் முன் மதுவிலக்கு கோரி மகளிர் அணி சார்பில் ஆர்ப்பாட்டம்.
* 12.10.1995 பாட்டாளி மகளிர் சங்கம் சார்பில் மது, ஆபாச ஒழிப்பு மாநாடு நடத்தினேன்.
* 27.12.2001 அன்று, தமிழக அரசு அறிமுகப்படுத்திய மலிவு விலை மதுவை ஒழிக்கக் கோரி தலைமைச் செயலகத்துக்கு எதிரில் கருப்பு உடை அணிந்து எனது தலைமையில் ஒப்பாரி போராட்டம்.
* 29.08.2003 அன்று திண்டுக்கலில் மதுவிலக்கை வலியுறுத்தி மகளிர் போராட்டம்.
* 2004 ஆம் ஆண்டில் தமிழகம் முழுவதும் முழு மதுவிலக்கு கோரி பாமக மகளிர் அணி சார்பில் மதுக்கடைகளுக்கு பூட்டு போடும் போராட்டம். தைலாபுரம் அருகிலுள்ள மதுக்கடைக்கு பூட்டுப் போட முயன்ற போது நானும் கைது ஆனேன். இந்த போராட்டத்தின்போது 15 ஆயிரம் பெண்கள் கைது செய்யப்பட்டு 30 நாட்கள் வரை சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர்.
* 02.03.2007 அன்று மதுக்கடைகளில் குடிப்பகங்கள் திறப்பதை கண்டித்து எனது தலைமையில் தமிழகம் முழுவதும் போராட்டம்
* 08.03.2007 அன்று தமிழகத்தில் மதுக்கடைகளை மூட வலியுறுத்தி போராட்டம்.
* 15.05.2007 அன்று தமிழகத்தில் மதுவின் தீமைகளை வலியுறுத்தியும், மதுக்கடைகளுக்கு பூட்டுப் போடும் போராட்டம் குறித்து விளக்கவும் பரப்புரை ஊர்தி பயணத்தை சென்னையில் தொடங்கினேன்.
* 18.05.2007 சென்னையில் மது ஒழிப்பு பிரச்சாரக் கூட்டம்.
* 17.10.2007 மதுக்கடைகளை மூட வலியுறுத்தி தமிழகம் முழுவதும் பாட்டாளி மகளிர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்.
* 27.02.2008 அன்று சென்னையில் பாட்டாளி மகளிர் சங்கம் சார்பில் மது ஒழிப்பு மாநாடு.
* 2008 ஆம் ஆண்டில் இரண்டாவது முறையாக பாட்டாளி மகளிர் சங்கம் சார்பில் தமிழகம் முழுவதும் மதுக்கடைகளுக்கு பூட்டுப் போடும் போராட்டம்
* 17.08.2008 அன்று திருச்சியில் பாட்டாளி மகளிர் சங்கம் சார்பில் மது ஒழிப்பு மாநாடு.
* 18.08.2008 அன்று திருவண்ணாமலையில் பாட்டாளி மகளிர் சங்கம் சார்பில் மது ஒழிப்பு மாநாடு. தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் பாட்டாளி மகளிர் சங்கம் சார்பில் மது ஒழிப்பு மாநாடுகள் நடத்தப்பட்டன.
* 23.11.2008 அன்று சென்னையில் மது ஒழிப்பு கலந்தாய்வுக் கூட்டம்.
* 27.06.2009 சென்னையில் மகளிர் சங்கம் சார்பில் மது ஒழிப்பு பேரணி
* 04.05.2011 மது விளம்பரத்தில் நடித்த கிரிக்கெட் வீரர் தோனியை கண்டித்து சென்னையில் அவர் தங்கியிருந்த விடுதியை முற்றுகையிட்டு பசுமைத் தாயகம் சார்பில் போராட்டம்.
* 07.07.2012 அன்று மதுக்கடைகளுக்கு பூட்டுப் போடும் போராட்டம் குறித்து மக்களுக்கு விளக்கும் வகையில் சென்னை கடற்கரை காந்தி சிலை அருகில் துண்டறிக்கைகளை வழங்கினேன்.
* 17.07.2012 அன்று தமிழகம் முழுவதும் மதுக்கடைகளுக்கு போராட்டம். சென்னையில் கைது செய்யப்பட்டேன்.
* 19.07.2012 அன்று கோவையில் மது ஒழிப்பு விழிப்புணர்வு கண்காட்சி.
* 04.09.2012 அன்று மதுவின் தீமைகளை விளக்கும் வகையில் மதுரையில் கண்காட்சி.
* 17.07.2012 அன்று தமிழகம் முழுவதும் மதுக்கடைகளுக்கு போராட்டம். சென்னையில் கைது செய்யப்பட்டேன்.
* 26.02.2013 மதுவிலக்கை வலியுறுத்தி தருமபுரியில் பாமக மகளிர் அணி ஆர்ப்பாட்டம்.
* 01.01.2014 ஆரணியில் தொடங்கி தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களில் பாமக மகளிர் அணி சார்பில் மது விலக்குக்கு எதிரான மகளிர் எழுச்சி மாநாடு நடத்தப்பட்டது.
இவை தவிர பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் நடத்தப்பட்ட அனைத்துப் போராட்டங்களிலும் நான் கலந்து கொண்டிருக்கிறேன். வழக்கறிஞர்கள் சமூகநீதிப்பேரவை மூலம் சட்டப்போராட்டம் நடத்தி தேசிய நெடுஞ்சாலைகளில் இருந்த 604 மதுக்கடைகளை அகற்ற வைத்திருக்கிறோம். உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் வழக்கின் முடிவில் மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள 1500 மதுக்கடைகள் மூடப்படும் என்று நம்புகிறேன்.
மதுவிலக்கு போராட்டத்தை நான் அரசியலாக கருதவில்லை... மாறாக சமூகக் கடமையாகவே கருதுகிறேன். தேர்தலுக்காகவோ, வாக்குகளை வாங்குவதற்காகவோ இந்த போராட்டங்களை நான் நடத்தவில்லை.
அதேபோல், நான் ஏற்கனவே கூறியதைப் போலவே மது விலக்கில் திமுகவுக்கு அக்கறை இருந்தால், அதன் மீதான அக்கட்சியின் உறுதிப்பாட்டை மது ஆலைகளை மூடி காட்ட வேண்டும். அதைவிடுத்து வார்த்தை சிலம்பம் ஆடுவதில் எந்த பயனும் இல்லை.
மற்றபடி மதுவிலக்கு கோரி இதய சுத்தியுடன் பொதுமக்கள் நடத்தும் போராட்டங்களை நான் ஆதரிக்கிறேன். அதேநேரத்தில் மாணவர்கள் தங்களின் கல்வி மற்றும் எதிர்காலத்தை பாதிக்காத வகையில் செயல்படும்படி கேட்டுக் கொள்கிறேன். தமிழ்நாட்டில் கடைசி சொட்டு மது ஒழிக்கப்படும் வரை நான் தொடர்ந்து போராடுவேன்'' என்று ராமதாஸ் கூறியுள்ளார்.