Published : 08 Dec 2019 07:23 PM
Last Updated : 08 Dec 2019 07:23 PM

உள்ளாட்சித் தேர்தல் எப்போது நடந்தாலும் எதிர்கொள்ளத் தயார்: திமுக ஆலோசனைக் கூட்டத்தில் தீர்மானம்

உள்ளாட்சித் தேர்தல் எப்போது நடந்தாலும் எதிர்கொள்ள தயார் என திமுக மாவட்டக் கழகச் செயலாளர்கள் மற்றும்
நாடாளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

டிச.27 மற்றும் 30 தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடத்துவதாகவும், ஊராட்சி அமைப்புகளுக்கு மட்டுமே தேர்தல் மாநகராட்சி, நகராட்சிகளுக்குத் தேர்தல் இல்லை என மாநில தேர்தல் ஆணையம் அறிவித்தது.

இதனைத் தொடர்ந்து முக்கிய அரசியல் கட்சிகள் உள்ளாட்சித் தேர்தலை எதிர்கொள்ள தயாராகி வருகின்றன. அதிமுக சார்பில் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடந்து முடிந்தது. இதேபோன்று திமுக சார்பில் மாவட்டச் செயலாளர்கள், எம்.பி.க்கள், எம்எல்ஏக்கள் கூட்டம் இன்று மாலை சென்னை தி.நகரில் உள்ள ஹோட்டலில் திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் வேட்பாளர்களை நிறுத்துவது, கூட்டணிக் கட்சிகளுக்கான ஒதுக்கீடு, தேர்தல் நடத்தும் யுக்தி உள்ளிட்ட விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.

திமுக மாவட்டக் கழகச் செயலாளர்கள் மற்றும் நாடாளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:

“உள்ளாட்சித் தேர்தலில் வாக்களிப்பதும், போட்டியிடுவதும் சட்ட உரிமை”; “ஒரு அமைச்சரின் விருப்பத்திற்காக தனது அதிகாரத்தை மாநிலத் தேர்தல் ஆணையம் சரணாகதி செய்வதை அரசியல் சட்டம் அனுமதிக்கவில்லை”; என்றெல்லாம் வரலாற்றுச் சிறப்புமிக்க உயர்நீதிமன்ற தீர்ப்புகள் உள்ள போதிலும், தமிழ்நாட்டில் உள்ள மாநிலத் தேர்தல் ஆணையம் தனது சுதந்திரத்தையும், அதிகாரத்தையும் முழுமையாக அதிமுக அரசிடம் “சரணாகதி” செய்து விட்டு - முதலமைச்சர் மற்றும் உள்ளாட்சித்துறை அமைச்சர் விருப்பத்திற்காக - உள்ளாட்சித் தேர்தலில் திட்டமிட்டு அடுத்தடுத்து குழப்பங்களை அணி வகுக்க வைத்து - மூன்று வருடங்களுக்கும் மேலாக உள்ளாட்சித் தேர்தலை நடத்தாமல் - ‘பஞ்சாயத்து ராஜ்’ எனும் அடிப்படை ஜனநாயகக் கருத்தாக்கத்தைப் படுகொலை செய்திருப்பதற்கு; மாவட்டச் செயலாளர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களின் இந்தக் கூட்டம் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறது.

அரசியல் சட்டப் பிரிவு 9-ன்படி, 17.10.2016 மற்றும் 19.10.2016 அன்று நடைபெற்றிருக்க வேண்டிய உள்ளாட்சித் தேர்தல்கள் நடத்தப்படாமல் தாமதப்படுத்தப்பட்டு, தொடர்ந்து இழுத்தடித்துக் கொண்டிருப்பதற்கு மாநிலத் தேர்தல் ஆணையமும், அதிமுக அரசுமே முழுப் பொறுப்பேற்க வேண்டும்.

26.9.2016 அன்று அவசரமாகத் தேர்தல் அறிவிப்பை வெளியிட்டு, அன்றே அ.தி.மு.க. தனது வேட்பாளர்களை அறிவித்தது. வார்டு மறுவரையறை மற்றும் இடஒதுக்கீடு கொள்கை ஆகியவற்றைக் கடைப்பிடிக்காமல் செய்யப்பட்ட முறையற்ற இந்தத் தேர்தல் அறிவிப்பைச் சுட்டிக்காட்டி; சட்டப்படி உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பதற்காகவே; சென்னை உயர்நீதிமன்றத்தில் திராவிட முன்னேற்றக் கழகம் வழக்குத் தொடுத்தது என்பதை இந்தக் கூட்டம் எடுத்துக்காட்ட விரும்புகிறது.

கழகம் தொடுத்த வழக்கில் தீர்ப்பளித்த உயர்நீதிமன்றம், “தேர்தல் அறிவிப்பு ஆளுங்கட்சிக்கு மட்டும் முன்கூட்டியே தெரிந்திருக்கிறது”; “மற்ற அரசியல் கட்சிகளுக்கு போதிய கால அவகாசம் கொடுக்கப்படவில்லை”; “இடஒதுக்கீடு செய்வதைத் தமிழக அரசு தாமதம் செய்துள்ளது”; “அனைத்துக் கட்சிகளுக்கும் தேர்தல் களத்தில் சம வாய்ப்பை உருவாக்கப்பட வேண்டும் என்பதைத் தேர்தல் ஆணையம் உறுதி செய்யவில்லை”; என்று பல்வேறு கண்டனங்களைத் தெரிவித்து தேர்தல் அறிவிப்பை ரத்து செய்து - இந்தக் குறைகளை எல்லாம் நிவர்த்தி செய்து 31.12.2016-க்குள் உள்ளாட்சித் தேர்தலை நடத்தி முடித்திட வேண்டும் என்று தீர்ப்பளித்தது. ஆனால் உயர்நீதிமன்ற உத்தரவுகளைப் பின்பற்றி, தமிழகத் தேர்தல் ஆணையம், தேர்தலை நடத்த முன்வரவில்லை.

“2011 மக்கள் தொகை அடிப்படையில் மறுவரையறை முடிந்து விட்டது. 31.5.2019-க்குள் தேர்தலை நடத்துவோம்” என்று மாநிலத் தேர்தல் ஆணையம் உச்சநீதிமன்றத்தின் முன்பு 1.3.2019-ல் உறுதியளித்தது.

பிறகு அந்த உறுதிமொழியையும் நிறைவேற்றிட இயலாமல், தோல்வி கண்டது தேர்தல் ஆணையம். “மறுவரையறை தாமதம் ஆகிறது. 2019 செப்டம்பர் இறுதியில்தான் முடியும்”, “இந்தியத் தேர்தல் ஆணையத்திடமிருந்து வாக்காளர் பட்டியல் பெறுவதில் தாமதம் ஆகிறது”, “மக்களவைத் தேர்தலால் தேர்தலை நடத்த அதிகாரிகள் இல்லை” என்றெல்லாம் இட்டுக்கட்டி, புதுப்புது காரணங்களைத் தேடிக் கண்டுபிடித்து தேர்தல் ஆணையம் உச்சநீதிமன்றம் முன்பு 2.7.2019 அன்று, பிரச்சினையையே திசை திருப்பும் வகையில் சொன்னது.

அன்றைய தினம், “அக்டோபர் 2019க்குள் தேர்தலை நடத்துவோம்” என்று மாநில தேர்தல் ஆணையம் ஒப்புக் கொண்டது. ஆனாலும் தேர்தல் நடத்தப்படவில்லை.

இறுதியாக 18.11.2019 அன்று “டிசம்பர் 13-ஆம் தேதிக்குள் அனைத்து சட்டவிதிகளையும் கடைப்பிடித்து உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு வெளியிடப்படும் என நம்புகிறோம்” என்று உச்சநீதிமன்றம் மாநிலத் தேர்தல் ஆணையத்திற்கு இறுதி வாய்ப்பை வழங்கியது. அப்படித்தான் டிசம்பர் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் அறிவிப்பை மட்டும் வெளியிட்டது.

தமிழகத்தில் இதுவரை உள்ளாட்சித் தேர்தல்கள் ஒரே கட்டமாக நடத்தப்பட்டிருந்தாலும்; “நேரடித் தேர்தலுக்குப் பதில் மறைமுகத் தேர்தல் என அவசரச் சட்டம்”, “9 மாவட்டங்களை புதியதாக உருவாக்கி அங்கு இட ஒதுக்கீடு, மறுவரையறை செய்யாதது”, “ஊரக ஊராட்சிகளுக்கு மட்டும் தேர்தல்”, என்றெல்லாம் அதிமுக அரசும், தேர்தல் ஆணையமும் கூட்டு சேர்ந்து மேலும் மேலும் குழப்பங்களை ஏற்படுத்தின.

ஜனநாயக நெறிமுறைகளின்படியும், அரசியல் சட்டம் உருவாக்கியுள்ள பஞ்சாயத்து ராஜ் சட்டத்தின்படியும் தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலை முறைப்படி நடத்திட வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் உச்சநீதிமன்றத்தை திராவிட முன்னேற்றக் கழகம் அணுகியது.

அந்த வழக்கில், புதிய மாவட்டங்களைப் பிரித்து உள்ளாட்சித் தேர்தலை நிறுத்த முதல்வர் எடப்பாடி .பழனிச்சாமி எடுத்த முயற்சிக்குத் தடை விதித்து வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பினை உச்சநீதிமன்ற வழங்கியுள்ளது.

இந்த வழக்கு விசாரணையின் போது, “இப்போது ஏன் மாவட்டங்களைப் பிரித்தீர்கள்?”, “மூன்று மாவட்டங்களுக்கு எப்படி ஒரு மாவட்ட பஞ்சாயத்துத் தலைவர் இருக்க முடியும்? ஒரு மாவட்டத்திற்கு ஒரு மாவட்ட பஞ்சாயத்துத் தலைவர்தானே இருக்க வேண்டும்?”, “சட்டபூர்வப் பணிகளை முடித்து தேர்தலை நடத்த வேண்டும் என்பதுதான் ஏற்கனவே உச்சநீதிமன்றம் அளித்த உத்தரவு”, “தேர்தல் வேண்டாம் என்று மனுதாரர் (தி.மு.க.) சொல்லவில்லை. உள்ளாட்சித் தேர்தலை சட்டப்படி நடத்த வேண்டும் என்றுதான் மனுதாரர் (தி.மு.க.) சொல்கிறார்”, என்றெல்லாம் உச்சநீதிமன்ற நீதிபதிகள் எழுப்பிய ஆழமான கேள்விகளே, அ.தி.மு.க. அரசும், மாநிலத் தேர்தல் ஆணையமும் உள்நோக்கத்துடன் உள்ளாட்சித் தேர்தலைத் தள்ளி வைக்கப் போட்ட சதித்திட்டத்தை உணர்த்துகின்றன.

இதை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்து, அ.தி.மு.க. அரசின் முகமூடியை சட்டப் போராட்டத்தின் மூலம் கிழித்தெறிந்த கழகத் தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு இந்தக் கூட்டம் பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறது.

ஒன்பது மாவட்டங்கள் தவிர, தமிழ்நாட்டில் உள்ள பிற மாவட்டங்களுக்கான உள்ளாட்சித் தேர்தலை, வார்டு மறுவரையறை, இடஒதுக்கீடு போன்றவற்றை சட்டப்படி செய்து முடித்து நடத்துவதற்கு 6.12.2019 அன்றைய தீர்ப்பில் அனுமதி வழங்கியுள்ள உச்சநீதிமன்றம்;

* “புதிய மாவட்டங்களைப் பிரித்து - மறுவரையறை, இடஒதுக்கீடு ஆகிய பணிகளைச் செய்யாததன் மூலம் பஞ்சாயத்து ராஜ் சட்டப்படியான அரசியல் சட்டக் கட்டளையை தமிழக அரசால் நிறைவேற்ற முடியாது என்பது தெளிவாகிறது” என்றும்;

* “அரசியல் சட்ட கட்டளைப்படி இந்த அரசால் புதிய மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தலை நடத்த முடியாது” என்றும்; 13-ஆவது பாராவிலும், நேர்மையான தேர்தலுக்குத் தேவையான சட்டபூர்வமான முன்னேற்பாடுகளை விரைவாக மேற்கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தின் அடிப்படையில்தான் இந்த வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது” என்று திராவிட முன்னேற்றக் கழகத்தின் வழக்கின் நியாயம் குறித்து 14-ஆவது பாராவிலும் தெரிவித்துள்ளது.

இதுபோலவே 1995 ஆம் வருட தமிழ்நாடு பஞ்சாயத்து (இடஒதுக்கீடு மற்றும் இட ஒதுக்கீடு சுழற்சி) விதி 6-ன் கீழான இடஒதுக்கீட்டு கொள்கையை முழுமையாகக் கடைப்பிடித்து உள்ளாட்சித் தேர்தலுக்கான புதிய தேர்தல் அறிவிப்பை மாநில தேர்தல் ஆணையம் வெளியிட வேண்டும்” என்று 15(ந)-பாராவிலும், மேற்கண்ட உச்சநீதிமன்ற உத்தரவுகளை கடைப்பிடித்து உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பு வெளியிடப்படும் என தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் ஒப்புக் கொண்டிருக்கிறார்” என்று 16-ஆவது பாராவிலும் கூறியிருப்பது;

உள்ளாட்சித் தேர்தலை ஜனநாயக ரீதியில் - நேர்மையாகவும், சுதந்திரமாகவும் நடத்துவதற்கு உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள “பொன்னான வழிகாட்டுதல்கள்” என இக்கூட்டம் வரவேற்கிறது.

மேலும், மூன்று வருடங்களுக்கும் மேலான திராவிட முன்னேற்றக் கழகத்தின் சட்டப் போராட்டத்திற்கு கிடைத்த மாபெரும் வெற்றி இது எனவும், உள்ளாட்சித் தேர்தலைத் தள்ளி வைத்து - தி.மு.க. மீது “போலி குற்றச்சாட்டினை” முன்வைத்து பொய்ப் பிரச்சாரம் செய்யும் அ.தி.மு.க. அரசுக்குத் தக்க பாடம் கற்பித்துள்ள தீர்ப்பு எனவும், இந்தக் கூட்டம் கருதுகிறது.

எனினும், உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக 6.12.2019 அன்று உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் பிறப்பிக்கப்பட்ட, வார்டு மறுவரையறை - பட்டியல் இனம், பழங்குடியினர் மற்றும் பெண்களுக்கான இடஒதுக்கீடு ஆகியவற்றைச் சட்ட விதிமுறைப்படி செய்ய வேண்டும்; புதிய தேர்தல் அறிவிப்பை வெளியிட வேண்டும் என்ற உத்தரவுகள் எதையும் பின்பற்றாமல், உச்சநீதிமன்றத்தின் உத்தரவுகளைப் புறக்கணித்திடும் வகையில், நேற்று (7.12.2019), சட்டத்திற்குப் புறம்பாக, புதிய தேர்தல் அறிவிப்பை வெளியிட்டுள்ள மாநிலத் தேர்தல் ஆணையத்தின் அலட்சியமான நடவடிக்கைக்கு இந்தக் கூட்டம் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறது.

உச்சநீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில், வார்டு மறுவரையறை மற்றும் இடஒதுக்கீடு ஆகியவற்றைச் சட்ட நெறிமுறைகளை அனுசரித்து முழுமையாகச் செய்து முடித்த பிறகே உள்ளாட்சித் தேர்தலை நடத்த வேண்டும் என்று மீண்டும் நீதிமன்றத்தை நாடுவதைத் தவிர வேறு வழியில்லை என்ற கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் கருத்தை ஒரு மனதாக ஏற்றுக் கொள்வது என்றும் இந்தக் கூட்டம் தீர்மானிக்கிறது.

மூன்று வருடங்கள் உள்ளாட்சித் தேர்தலை நடத்தாமல், வார்டு மறுவரையறை, இடஒதுக்கீட்டுக் கொள்கைகளை சட்டப்படி கடைப்பிடிக்காமல், மாநிலத் தேர்தல் ஆணையத்தை தனது எடுபிடியாகச் செயல்பட வைத்து, உயர்நீதிமன்றத்திலும் - உச்சநீதிமன்றத்திலும் வரிசையாகக் கண்டனங்களை வாங்கிக் கட்டிக்கொண்டு, நீதிமன்ற அவமதிப்புக் குற்றத்தையும் செய்த

அ.தி.மு.க. அரசின் முதலமைச்சரும் - அமைச்சர்களும், தாம்செய்த குற்றத்தை மற்றவர் தலையில் சுமத்தித் தப்பித்திடும் தீய நோக்கத்துடன், “உள்ளாட்சித் தேர்தல் தள்ளிப்போக தி.மு.க. காரணம்” என்று செய்யும் கடைந்தெடுத்த பொய்ப் பிரச்சாரத்திற்கும்; 6.12.2019 அன்று உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் பிறப்பிக்கப்பட்டுள்ள உத்தரவுகள் எதையும் பின்பற்றாமல், உள்ளாட்சித் தேர்தல் எப்படியாவது தடைபடட்டுமே என்ற உள்நோக்கத்துடனும், அலட்சிய மனப்பான்மையுடனும், 7.12.2019 அன்று தமிழ்நாடு தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள புதிய தேர்தல் அறிவிப்புக்கும்; இந்தக் கூட்டம் வன்மையான கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறது.

உள்ளாட்சி அமைப்புகளே இல்லாமல், தங்களுடைய குறைகளையும் தேவைகளையும் பிரதிபலிக்கும் வாய்ப்பின்றி, வாய்ப்பூட்டு போடப்பட்டு, அல்லல்களுக்கு ஆளாகிவரும் தமிழக மக்கள், தி.மு.கழகத்தின் பக்கம் உறுதியாக நின்று பேராதரவினை நல்கிடுவார்கள்.

எனவே உள்ளாட்சி மன்றத் தேர்தல் எப்போது வந்தாலும்; “ மக்கள் குரலே மகேசன் குரல்; மக்கள் என்றும் நம் பக்கமே “ என்ற மகத்தான நம்பிக்கையுடன், தேர்தலை நேரெதிரே சந்தித்து, புதியதொரு சரித்திரம் படைத்திட தி.மு.கழகம் தயாராக இருக்கிறது என்று மாவட்டக் கழகச் செயலாளர்கள் - நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களின் இந்தக் கூட்டம் தெரிவித்துக் கொள்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x