Published : 08 Dec 2019 04:47 PM
Last Updated : 08 Dec 2019 04:47 PM

உள்ளாட்சித் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் போட்டியில்லை: கமல்ஹாசன் அறிவிப்பு

உள்ளாட்சித் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது என்று அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் அறிவித்துள்ளார். மேலும், இரு கட்சிகள் எழுதி இயக்கும் அரசியல் நாடகத்தில் எந்தப் பாத்திரத்தையும் ஏற்கப்போவதில்லை என அவர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் "இப்பெரு மய்யத்தின் குழு கூட்டமாகி பெருகி இன்று மக்கள் சக்தியாக மாறிவிட்டது. இதுவே நமது நேற்றைய விமர்சகர்களை இன்றைய ஆதரவாளர்களாக மாற்றியிருக்கிறது என்பது இனிய உண்மை.

நம்மைப்பற்றி ஹாஸ்யமும் ஹேஷியமும் ஜோசியமும் பேசியவர்கள் இன்று நம் நலம் விசாரிக்கத் தொடங்கிவிட்டனர்.

தமிழ்நாட்டில் நிகழவிருக்கும் உள்ளாட்சித் தேர்தல் முழுமையான மக்களின் தேர்வாக இருக்கப் போவதில்லை எனும் உண்மை அனைவரும் அறிந்ததே. இந்த உள்ளாட்சித் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் பங்கு பெறுவதால் கிட்டக் கூடிய முன்னேற்றம் சொற்பமானது.

மாற்றத்தை லட்சியமாகக் கொண்டுள்ள மக்கள் நீதி மய்யம் அதைத் தவணைமுறையில் பெறுவதில் எந்தச் சாதனையும் இல்லை.
மக்கள் நீதி மய்யத்தின் வெற்றிக்கான வித்து சாதுர்யமோ பண பலமோ அல்ல. நேர்மையும் மக்கள் பலமுமே ஆகும்.

இத்தேர்தலில், மக்கள் பங்கீடு மிகக் குறைவாக இருக்கும் என்பது உறுதியாகிட்டது. ஊழல் கட்சிகள் தங்களுக்குள் போட்டுக் கொண்ட வியாபாரப் பங்கீடு மட்டுமே அரங்கேறப்போகிறது என்பதே பகிரங்கப்படுத்தப் படாத் நிஜம்.

மக்கள் நலன் நோக்கிய பயணமாக இந்த உள்ளாட்சித் தேர்தல் இருக்கப் போவதில்லை. ஆதலால் மக்கள் நீதி மய்யத்தார் ஏற்கெனவே இரு கட்சிகள் எழுதி இயக்கும் அரசியல் நாடகத்தில் எந்தப் பாத்திரத்தையும் ஏற்க மாட்டோம் என்பதே நமது பிரகடனமாக இருக்க வேண்டும்.
இதுவே என் ஆசையும் அறிவுரையுமாகும்.

வரும் ஐம்பது வாரங்களில் மக்கள் நலம்பேணி நற்பணிகள் செய்வோம். நாளை பறக்கப்போகும் நம் வெற்றிக்கொடியை தமிழகத்தின் அன்னக்கொடியாகும் என்பதை மக்கள் உணரச் செய்வோம். இதை மக்கள் திண்ணமாக நம்பவும் வைப்போம்.

2021 தேர்தலில் ஆட்சியைப் பிடிப்பதே நம் இலட்சியமாக இருப்பின் வெற்றி நிச்சயம்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

தமிழகத்தில் ஊரகப் பகுதிகளுக்கான உள்ளாட்சித் தேர்தல் வரும் 27, 30 தேதிகளில் நடைபெறுகிறது. உச்ச நீதிமன்றம் கடந்த 6-ம் தேதி வழங்கிய தீர்ப்பின் அடிப்படையில், உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் 27 மாவட்டங்களில் இரண்டு கட்டங்களாக டிசம்பர் 27 மற்றும் 30-ம் தேதிகளில் நடைபெறுகிறது.

முன்னதாக இன்று காலை, உள்ளாட்சி தேர்தலில் யாருக்கும் ஆதரவு இல்லை என ரஜினி மக்கள் மன்றம் அறிவித்தது. இந்நிலையில் தற்போது கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியில்லை என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x