

இலங்கைக்கு தென்கிழக்கே வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதால் அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுவையில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென் மாவட்டங்களில் அடுத்த 3 நாட்களில் மீண்டும் கன மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக சென்னை வானிலை மைய இயக்குனர் புவியரசன், "வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக வடகிழக்கு பருவ மழை பெய்து வருகிறது. குறிப்பாக அதிகாலை மற்றும் மாலை நேரங்களில் ஆங்காங்கே மழை பெய்கிறது. இந்த மழை இன்னும் 2 நாட்களுக்கு நீடிக்கும். சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். அவ்வப்போது லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
தென்மாவட்டங்களைப் பொறுத்தவரையில் இலங்கைக்குள் கிழக்கே மேலடுக்கு சுழற்சி நிலவுவதால் அடுத்த 3 நாட்களில் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. ராமநாதபுரம், நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது" என்றார்.
இந்த வடகிழக்கு பருவமழை காலம் தொடங்கியதில் இருந்து வட மாவட்டங்களை விட தென் மாவட்டங்கள், காவிரி டெல்டா மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையையொட்டிய மாவட்டங்களில் அதிக அளவு மழை பெய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.