

சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழை அலுவல் மொழியாக்க வேண்டும் என தமிழக சட்டப்பேரவையில் 13 ஆண்டுக்கு முன்பு நிறைவேற்றப்பட்ட தீர்மானத்துக்கு குடியரசுத் தலைவரிடம் ஒப்புதல் பெற்று தருமாறு மத்திய அரசை வலியுறுத்தி உயர் நீதிமன்ற கிளை வழக்கறிஞர்கள் சங்கங்கள் கடிதம் அனுப்பியுள்ளன.
இது தொடர்பாக உயர் நீதிமன்ற மதுரை கிளை அனைத்து வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் மத்திய உள்துறை மற்றும் சட்டத்துறை செயலர்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:
நீதிமன்றங்களில் மாநில மொழிகளை அலுவல் மொழியாக்க அரசியலமைப்பு சட்டம் பிரிவு 348-ல் வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதை பயன்படுத்தி ராஜஸ்தான் மாநிலத்தில் 1950-ல் இந்தி மொழி அலுவல் மொழியாகவும், உத்திரப் பிரதேசத்தில் 1969-ல், மத்திய பிரதேசத்தில் 1971-ல், பிஹார் நீதிமன்றங்களில் 1972-ல் குடியரசு தலைவரின் ஒப்புதலுடன் இந்தி அலுவல் மொழியாக அறிவிக்கப்பட்டது.
தற்போது பெரும்பாலான நீதிமன்றங்கள் வெளிநாட்டின் மொழியான ஆங்கிலத்தில் நடைபெறுகிறது. இதனால் நீதிமன்ற நடவடிக்கைகளை வழக்காளர்களால் தெரிந்து கொள்ள முடியவில்லை. மேலும் வழக்கில் வழக்காளர்களின் முழு பங்கேற்பை உறுதி செய்ய முடியவில்லை.
இந்தியாவில் பி.ஜி.கெர் தலைமையில் மொழி ஆணையம் அமைக்கப்பட்டது. இந்த ஆணையத்தின் அறிக்கை அடிப்படையில் உயர் நீதிமன்றங்களில் அந்தந்த மாநில மொழிகளில் உத்தரவுகள் பிறப்பிப்பது தொடர்பாக 1963-ல் புதிய சட்டம் கொண்டுவரப்பட்டது. அந்தச் சட்டத்தின் 7வது பிரிவில் உயர் நீதிமன்றத்தில் ஆங்கிலத்துடன் சேர்ந்து அந்த மாநில மொழிகளிலும் உத்தரவுகள் பிறப்பிக்கலாம் எனக் கூறப்பட்டுள்ளது.
இதையடுத்து சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழை அலுவல் மொழியாக அறிவிக்க குடியிரசுத் தலைவர் ஒப்புதல் அளிக்க வேண்டும் என தமிழக சட்டப்பேரவையில் 6.12.2006-ல் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டு மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டது. அந்த தீர்மானத்தை மத்திய அரசு குடியரசுத் தலைவருக்கு நேரடியாக அனுப்பாமல் உச்ச நீதிமன்றத்துக்கு அனுப்பியது. தமிழக அரசின் கோரிக்கையை தலைமை நீதிபதி நிராகரித்தார்.
மொழி ஆணையம் தொடர்பாக நாடாளுமன்ற குழு அறிக்கையில் உயர் நீதிமன்றங்களில் மாநில மொழிகளை அலுவல் மொழியாக்க அறிவிக்க குடியரசு தலைவரின் ஒப்புதலை பெறுவதற்கு முன்பு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியிடம் ஒப்புதல் பெற வேண்டியதில்லை எனக் கூறப்பட்டுள்ளது. ஆனால் இதை மீறி ஒவ்வொரு முறையும் தமிழக அரசின் கோரிக்கையை நேரடியாக குடியரசுத் தலைவருக்கு அனுப்பாமல் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு மத்திய அரசு அனுப்பி வருகிறது.
மத்திய அரசின் இந்த நடவடிக்கை அரசியலமைப்பு சட்டம், அலுவல் மொழி சட்டம் மற்றும் நாடாளுமன்ற குழுவின் முடிவுக்கு எதிராக அமைந்துள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழ்அலுவல் மொழியாக ஆக்கப்பட வேண்டும் என்பது தமிழக மக்களின் உரிமையாகும்.
இதனால் அரசியலமைப்பு சட்டத்தின் 348 (2) பிரிவின் படி உச்ச நீதிமன்றத்தின் ஒப்புதல் பெறாமல் அனைத்து உயர் நீதிமன்றங்களிலும் மாநில மொழிகளை அலுவல் மொழியாக அறிவிக்க வேண்டும். இந்தி பேசாத மாநிலங்களின் அரசியலமைப்பு சட்ட உரிமையை பறிக்கும் நடவடிக்கைகளில் மத்திய அரசு ஈடுபடக்கூடாது.
இந்த கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி தமிழகம் முழுவதும் பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டன. வழக்கறிஞர்கள் சங்கங்கள் தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பின. இருப்பினும் மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
தற்போது உச்ச நீதிமன்ற தீர்ப்புகள் அனைத்து தரப்பினருக்கு சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்தில் உச்ச நீதிமன்ற உத்தரவுகளை அனைத்து மொழிகளில் மொழிபெயர்த்து வெளியிடும் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டத்தால் மக்கள் பயனடைந்து வருகின்றனர்.
இதேபோல் தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு 13 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழை அலுவல் மொழியாக்க வேண்டும் என்ற தீர்மானத்துக்கு விரைவில் குடியரசு தலைவரிடம் ஒப்புதல் பெற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.