

2021-ல் என்ன அதிசயம் நடக்கும் என்பதை ரஜினிதான் கூற வேண்டும் என காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய நிதியமைச்சருமான ப.சிதம்பரம் கூறியுள்ளார்.
திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த ப.சிதம்பரம், "இந்தியப் பொருளாதாரம் மிக மிக மோசமாக இருக்கிறது. அதை ஒரு புள்ளி விவரத்துடன் விவரிக்கிறேன்.
இந்தியாவில் 30 கோடி பேர் உழவு மற்றும் அமைப்பு சாரா அன்றாட தொழிலாளிகளாக உள்ளனர். அவர்கள் தினமும் வேலை செய்தால் தான் வீட்டில் பானை வைக்க முடியும்.
முன்பெல்லாம் 22 முதல் 25 நாட்களுக்கு அவர்கள் வேலை செய்துவந்தனர் என தேசிய புள்ளிவிவர ஆவணக் காப்பகம் தெரிவித்துள்ளது. ஆனால், பண மதிப்பு நீக்க நடவடிக்கைக்கு முன்னதாக அவர்களுக்கு 25 நாட்கள் வேலை கிடைத்த நிலையில் இப்போது 12 முதல் 15 நாட்களாகக் குறைந்துள்ளது. அவர்களின் அன்றாட வருமானம் அப்படியே பாதியாகிவிட்டது. அதனால் மக்களின் நுகரும் சக்தி 24% குறைந்துள்ளது. மக்களின் வாங்கும் சக்தி குறைந்ததால் விற்பனை குறைகிறது உற்பத்திக் குறைகிறது. அதனால், நான் பொருளாதார நிலையைப் பற்றி எதையும் மிகைப்படுத்திச் சொல்லவில்லை.
7 மாதங்களுக்கு முன் மிகப்பெரிய வெற்றியை தந்த மக்களுக்கு மத்திய அரசு துரோகம் மட்டுமே செய்துள்ளது. ஜிஎஸ்டி வரியை மேலும் உயர்த்தினால் அனைத்து தரப்பு மக்களும் பாதிக்கப்படுவர்.
மத்திய அரசு மக்களுக்கான அரசாக இல்லாமல் கார்ப்பரேட்டுகளுக்கான அரசாக உள்ளது. அதேபோல், ஜனநாயக நாட்டில் மதத்தின் அடிப்படையில் தேசிய குடியுரிமை மசோதாவை மத்திய அரசு தாக்கல் செய்தால் அது மக்கள் மத்தியில் பிளவை உண்டாக்கும்.
2021-ல் என்ன அதிசயம் நடக்கும் என்பதை ரஜினிதான் கூற வேண்டும்" எனக் கூறினார்.