

உள்ளாட்சி தேர்தலில் யாருக்கும் ஆதரவு இல்லை என்று ரஜினி மக்கள் மன்றம் அறிவித்துள்ளது.
உள்ளாட்சித் தேர்தல் வழக்கில் உச்ச நீதிமன்றம் 9 மாவட்டங்கள் தவிர மற்ற மாவட்டங்களில் நடத்தலாம், முதலில் வெளியிட்ட டிச.27 மற்றும் 30 அறிவிப்பாணையை திரும்பப் பெற வேண்டும் என உத்தரவிட்டது. இந்நிலையில் அதை ஏற்று தேர்தல் ஆணையம் அறிவிப்பாணையைத் திரும்பப் பெற்றது.
இதைத்தொடர்ந்து புதிய அறிவிப்பை மாநில தேர்தல் ஆணையம் நேற்று வெளியிட்டது. உச்ச நீதிமன்றம் கடந்த 6-ம் தேதி வழங்கிய தீர்ப்பின் அடிப்படையில், உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் 27 மாவட்டங்களில் இரண்டு கட்டங்களாக டிசம்பர் 27 மற்றும் 30-ம் தேதிகளில் நடைபெறுகிறது.
காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத் தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி மற்றும் தென்காசி ஆகிய 9 மாவட்டங்கள் மற்றும் ஊரக உள்ளாட்சி அமைப்பு இல்லாத சென்னை ஆகிய இடங்களில் தேர்தல் நடைபெறவில்லை.
இதற்கான தேர்தல் அறிவிக்கை டிச.9-ம் தேதி வெளியிடப் படும். அன்று காலை 10 மணிக்கு வேட்புமனுத் தாக்கல் தொடங்கும். டிச.16-ம் தேதி நிறைவடையும். வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 5 மணி வரை நடக்கும். வாக்கு எண் ணிக்கை வரும் ஜனவரி 2-ம் தேதி நடைபெறும்.
தேர்தல் அறிவிப்பை தொடர்ந்து பல்வேறு கட்சிகளும் தேர்தல் பணிகளை தொடங்கியுள்ளன. இந்தநிலையில், உள்ளாட்சி தேர்தலில் யாருக்கும் ஆதரவு இல்லை என ரஜினி மக்கள் மன்றம் அறிவித்துள்ளது. இதுகுறித்து அந்த மன்றத்தின் சார்பில் சுதாகர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் ‘‘ரஜினி மக்கள் மன்றம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘‘உள்ளாட்சி தேர்தலில் யாருக்கும் ஆதரவு இல்லை. ரஜினிகாந்த் யாருக்கும் ஆதரவு கொடுக்கவில்லை. ரஜினியின் பெயரையோ, புகைப்படத்தையோ பயன்படுத்தி வாக்கு சேகரித்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். ரஜினி மக்கள் மன்றத்தின் பெயர் மற்றும் கொடியை பயன்படுத்தக்கூடாது’’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.