Last Updated : 08 Dec, 2019 08:23 AM

 

Published : 08 Dec 2019 08:23 AM
Last Updated : 08 Dec 2019 08:23 AM

‘பாஸ்டேக்’ மூலம் பல கோடி ரூபாய் வருவாய்; சுங்கக் கட்டணத்தில் 10% சலுகை வேண்டும்: லாரி உரிமையாளர்கள் வலியுறுத்தல்

நாடு முழுவதும் 46 லட்சம் லாரிகள் மூலம் பாஸ்டேக்கில் பல கோடி ரூபாய் வைப்புத் தொகை மற்றும் சுங்கக் கட்டணம் முன்கூட்டியே செலுத்தப்படுவதால், சுங்கக் கட்டணத்தில் 10 சதவீதம் கட்டண சலுகை வழங்க வேண்டும் என லாரி உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சுங்கச் சாவடிகளில், ‘பாஸ்டேக்’ எனப்படும் மின்னணு கட்டண வசூல்முறை கட்டாயமாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதன்படி, சுங்கக் கட்டணத்தை முன்கூட்டியே செலுத்தியிருக்க வேண்டும். ரொக்க கட்டணம் செலுத்தும் வாகனங்கள் மின்னணு பாதையைப் பயன்படுத்தினால் இருமடங்கு சுங்கக் கட்டணம் மற்றும் அபராதத் தொகை வசூலிக்கப்படும் என தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அறிவித்துள்ளது.

இதனால், சுமார் 50 சதவீதம் பேர் மின்னணு கட்டண முறைக்குமாறிவிட்ட நிலையில், மீதமுள்ளவர்களையும் மின்னணு கட்டணமுறைக்கு மாற்ற தேசிய நெடுஞ்சாலை ஆணையம் நடவடிக்கை எடுத்து வருகிறது.

லாரி உரிமையாளர்கள், தங்கள் லாரிகளை பாஸ்டேக் முறைக்கு மாற்றி வருகின்றனர். லாரிகள் மூலமாக பல கோடி ரூபாய் வசூலாவதால், லாரிகளுக்கு சுங்கக் கட்டண சலுகை உள்ளிட்டவற்றை வழங்க வேண்டும் என லாரி உரிமையாளர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

இதுகுறித்து அகில இந்திய மோட்டார் காங்கிரஸ் நிர்வாகக் குழு உறுப்பினரும், சேலம் மாவட்ட லாரி உரிமையாளர் சங்கத் தலைவருமான சென்னகேசவன் கூறியதாவது:சுங்கக் கட்டணத்தை மின்னணு முறையில் செலுத்தும் திட்டம் கட்டாயமாக்கப்பட்டுள்ளதை வரவேற்கிறோம். நாடு முழுவதும் 46 லட்சம் சரக்கு லாரிகள் உள்ளன. தமிழகத்தில் 4.50 லட்சம் சரக்கு லாரிகள் உள்ளன. ஒவ்வொரு லாரிக்கும் பாஸ்டேக் அட்டை பெற ரூ.500 வைப்புத் தொகை, மின்னணு அட்டைக்கு ரூ.200 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. சுங்கக் கட்டணமாக, ஒவ்வொரு லாரிக்கும் மாதம் ரூ.10 ஆயிரம் வரை முன்பணமாக செலுத்த வேண்டிய நிலை உள்ளது. தற்போது, சுமார் 80 சதவீதம் லாரிகள் பாஸ்டேக் முறைக்கு மாற்றப்பட்டுள்ளன.

சரக்கு லாரிகள் மூலமாக, பாஸ்டேக்கில் பல கோடி ரூபாய் வைப்புத் தொகை கிடைத்துள்ளது. மேலும், மின்னணு அடைக்கான கட்டணம் மூலமாகவும் சுங்கக் கட்டணம் மூலமாகவும் பல கோடி ரூபாய் வருவாய் முன்கூட்டியே கிடைத் துள்ளது.

பண மதிப்பிழப்பு நடவடிக்கை யின்போது, பாஸ்டேக் கட்டணத்தில் 5 சதவீதம் சலுகை வழங்கப்பட்டது. அதன் பின்னர் 2.5 சதவீதமாக குறைக்கப்பட்டது. தற்போது, பாஸ்டேக் முறையில் முன்கூட்டியே பல கோடி ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்பட்டு உள்ளது. எனவே, சுங்கக் கட்டணத்தில் 10 சதவீதம் சலுகை வழங்க வேண்டும்.

தற்போது, நாடு முழுவதும் எவ்வளவு சுங்கக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது என்பதை அரசு துல்லியமாக அறிய முடியும். எனவே, சுங்கக் கட்டணத்தை ஆண்டுதோறும் உயர்த்த வேண்டிய அவசியம் இருக்காது. இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x