

சென்னையில் முதல்வரின் வீட்டருகே போலீஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட நபர் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
முதல்வர், அமைச்சர்கள், நீதிபதிகள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் குடியிருக்கும் பகுதி சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள பசுமை வழிச்சாலை. இங்கு எப்போதும் போலீஸ் பாதுகாப்பு இருக்கும். இந்நிலையில் நேற்று அதிகாலை காரில் வந்த ஒரு நபர் ஒருவர், முதல்வர் பழனிசாமியின் இல்லம் அருகில் சாலையில் நின்றுகொண்டு போனில் சத்தமாகப் பேசிக்கொண்டு இருந்தார். அப்போது அங்கு முதல்வர் இல்ல நுழைவு வாயிலில் பாதுகாப்புப் பணியில் நின்ற போலீஸார் அந்த நபரிடம் சென்று, இது முதல்வர், அமைச்சர்கள், நீதிபதிகள் வசிக்கும் பாதுகாப்பு மிகுந்த இடம். அதனால் இங்கு காரை நிறுத்தக் கூடாது என்று தெரிவித்து அங்கிருந்து கிளம்பிச் செல்லுமாறு தெரிவித்துள்ளனர்.
ஆனால், அந்த நபர் அங்கிருந்து செல்லாமல் போலீஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருக்கிறார். பின்னர் லேசான தள்ளுமுள்ளும் நடந்துள்ளது. தகவல் அறிந்து ரோந்து பணி போலீஸார் அங்கு வந்துள்ளனர். போலீஸ் வாகனம் வருவதை அறிந்த அந்த நபர் உடனே, போலீஸாருக்கு சவால் விட்டபடி அங்கிருந்து தனது காருடன் புறப்பட்டு விட்டார். வாக்குவாதத்தில் ஈடுப்பட்ட நபர் குறித்து பாதுகாப்புக்கு இருந்த போலீஸார் கொடுத்த புகாரின் பேரில் அபிராமபுரம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.